You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என்எல்சி-ஐ எதிர்க்கும் கரிவெட்டி கிராமம்: "எங்க நிலம் எங்க வம்சத்தின் அடையாளம், தர மாட்டோம்" - கள நிலவரம்
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழ்
நெய்வேலி நிலக்கரி நிறுவன (என்எல்சி) சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட இருக்கும் கிராமங்கள் முழுவதுமே விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன.
நெற்பயிர்கள், கரும்பு, உளுந்து, சிறு தானியங்கள், காய்கறிகள் என விவசாயத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், என்எல்சி நிறுவனம் நிலங்களைக் கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள், அதனை நம்பி வாழும் விவசாய கூலி செய்யும் தொழிலாளர்களும், எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் இல்லாமல் போராடி வருகின்றனர். இது பற்றிய பிபிசி தமிழ் வழங்கும் கள நிலவர தகவல் இது.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மூன்று திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. மேலும் இங்கே நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது இரண்டாவது சுரங்கம் விரிவாக்கப் பணிக்காக அருகே உள்ள கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதற்காக சுற்றியிருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளைக் கையகப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் சொல்வது என்ன ?
குறிப்பாக, கிராம மக்களிடம் இருந்து 'நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளைக் கையகப்படுத்த என்எல்சி அறிவித்த இழப்பீடு, சந்தை மதிப்பைவிடக் குறைவாக உள்ளது' என்று பாதிக்கப்படும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தங்களிடமிருந்து வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்நிறுவனம், எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை அடிப்படை கோரிக்கையாக வலியுறுத்துகின்றனர்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தப்படும் கிராமங்களில் ஒன்றான புவனகிரி தாலுகா கத்தாழை ஊராட்சி கரிவெட்டி கிராம மக்களை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.
அப்போது எங்களின் வாழ்வாதாரத்தை வேரோடு பிடுங்கும் இந்நிறுவனம் எங்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்வதில்லை. பணத்தைக் கொண்டு ஈடு செய்யும் இவர்களால் எங்கள் கிராமத்தைப் போன்று மற்றொரு பகுதியை இழப்பீடு வழங்க முடியுமா ? என்று கரிவெட்டி கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வேலைவாய்ப்பு இல்லை என்றால் நிலம் இல்லை
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ''மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி எங்களது நிலங்களை கையகப்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கான உரிய இழப்பீட்டு வழங்கவேண்டும் என்று மட்டுமே வலியுறுத்துவதாக'' கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
"ஒவ்வொரு கூலித் தொழிலாளியும் அவர்களது ஒவ்வொரு நாள் சம்பளத்தை இழந்து தங்களின் உரிமைக்காகப் போராடுகின்றனர். நாளை செய்வதற்கு அந்த தொழிலும் இல்லாமல் போகும் என்பதால் போராடுகின்றனர். என்எல்சியின் நிலக்கரி எவ்வளவு, ஒரு யூனிட் மின்சாரம் எவ்வளவு என்ற விலையை அவர்கள் நிர்ணயம் செய்கிறார்கள். ஆனால் நிலம், வீடுகளை கொடுத்து வாழ்வாதாரத்தையே இழக்கும், எங்களது தேவையை கேட்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது," என்கிறார் கரிவெட்டியை சேர்ந்த உதயகுமார்.
"எங்களிடம் நிலமிருந்தால் இன்று நான், நாளை எனது மகன், அதற்கடுத்து அவர்களது எதிர்கால சந்ததியினர் என காலம் முழுவதும் அதைவைத்து வாழ்வோம். நீங்கள் கொடுக்கும் நிலத்தில் ஒரு மரத்தை மட்டும் வைத்து வளர்க்கச் சொல்கிறீர்களா? ஏரியில் நீந்துகின்ற மீனைத் தார்ச் சாலையில் போட்டு நீந்தச் சொன்னால் எப்படி முடியும். அது போன்று தான் எங்களுக்கு வாழ்வையும் சிதைகின்றனர்," என்று உதயகுமார் தெரிவித்தார்.
"விவசாயம் மட்டுமே தெரியும்"
எங்களுக்கு விவசாயம் மட்டுமே தெரியும். எங்களுக்கு வேலை இல்லையென்றால் எங்காவது நீர் கிடைக்கும் இடமாக பார்த்து நிலத்திற்கு நிலம் கொடுங்கள். அங்கு விவசாயம் செய்து பிழைத்துக்கொள்கிறோம். எதுவுமே இல்லாமல் கட்டட வேலையோ, காட்டில் முந்திரிக் கொட்டை உடைக்கும் வேலைக்கோ சென்று பிழைச்சிக்க சொல்கிறீர்களா?
எங்களுக்குக் கூடுதலாக இழப்பீடு தேவை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு என்பது அவசியம் கொடுத்தாக வேண்டும். இவைகளை செய்ய மறுத்தால், எங்களை புதைத்து அதற்கடியில் இருக்கும் கரியைத் தோண்டி எடுத்துச் செல்லுங்கள்," என்கிறார் உதயகுமார்.
வேலைவாய்பை உறுதி செய்யுங்கள்
நிலத்தை இழந்து செல்லும் எங்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யுங்கள் என்கிரார்கள் "இங்கு நிலத்தையும் கொடுத்துவிட்டு, அதை நம்பி வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் வேலையையும் இழந்துவிட்டு எங்கே சென்று, என்ன வேலை செய்ய முடியும்.?
இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் இருக்கின்றனர். அதில் 80 இளைஞர்கள் பல்வேறு துறைகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் இருக்கின்றனர். இப்படி தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுக்கலாம்," என்று விவசாய கூலித் தொழிலாளி நளினி கூறுகிறார்.
50 கிராமங்களுக்கு பாதிப்பு
தன்னிச்சையாக நிலம் கையப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, கரிவெட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிச்சாமி கூறுகையில், "நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கொள்கையை முத்தரப்பு கூட்டத்தின் மூலமாகவே உருவாக்க வேண்டும்.
மக்களிடம் சென்றால் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பதற்காக என்எல்சி நிர்வாகம் தன்னிச்சையாக நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கொள்கையை உருவாக்கி எங்கள் மீது திணித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து மக்களிடம் பேச வேண்டும். இந்த பிரச்சனை இந்த ஒரு கிராமத்தைச் சார்ந்தது மட்டுமில்லை. சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களும் இதுபோன்று பாதிக்கப்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்," என்கிறார் அவர்.
என்எல்சி நிர்வாகம் கூறுவது என்ன?
கிராம மக்களின் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்புகள் மீதான என்எல்சி நிர்வாகத்தின் நிலைப்பாட்டை அறிய அதன் நிர்வாக செயல் இயக்குநர் சதிஷ் பாபுவிடம் பிபிசி தமிழ் பேசியது. "என்எல்சியில் இரண்டாவது சுரங்கம் விரிவாக்க பணிக்கு நிலம் தேவைப்படுகிறது. ஆகவே நியாயமான இழப்பீடு பெரும் உரிமை மற்றும் நிலம் கையப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வில் ஒளிவு மறைவற்ற தன்மை சட்டம் 2013ன் படி (The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) இழப்பீடு தொகை மற்றும் இதர பலன்களைக் கொடுத்து வருகிறோம். "
"ஆனால் இந்த சுற்றுவட்டார கிராம மக்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில்கொண்டு அரசின் ஒப்புதலுடன், ஒரு புதிய நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கொள்கையை வடிவமைத்துள்ளோம். அந்த சட்டத்தின் அடிப்படையில் நிலத்திற்கான இழப்பீட்டைக் குறைந்தபட்சம் ரூ.23 லட்சமாக உயர்த்தியுள்ளோம். கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு இழப்பீடு ரூ.40 லட்சமும், நகரப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு ரூ.75 லட்சமும் குறைந்தபட்ச தொகையாக நிர்ணயித்துள்ளோம்," என்கிறார் அவர்.
இழப்பீடு மற்றும் மாத ஊதியம்
வேலைவாய்ய்பு குறித்து கூறுகையில், ''சில காரணத்திற்காகவும், குறிப்பாக நிறுவனத்தில் காலி பணியிடங்கள் இல்லாத காரணத்தினாலும் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது என்பதால், அதற்கு பதிலாக உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக.'' செயல் இயக்குநர் கூறுகிறார்.
அதன்படி ''வேலைக்குப் பதிலாக ஒருமுறை பயனாக ரூ.10 லட்சமும், ஒரு ஏக்கருக்கு மேல் இருந்தால் ரூ.13 லட்சமும், இரண்டு ஏக்கருக்கு மேல் இருந்தால் ரூ.15 லட்சம் வழங்க இருக்கிறோம். இந்த ஒருமுறை பயன் வேண்டுமென்றால், ரூ.10 லட்சத்திற்குப் பதிலாக மாதம் தோறும் ரூ.7000, ரூ.13 லட்சத்திற்குப் பதில் ரூ.8,500, ரூ.15 லட்சத்திற்குப் பதிலாக ரூ.10,000 மாதம் ஊதியமாக அடுத்து 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.'' என்றார்.
மேலும், ''இதில் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். வீட்டு மனையை எடுக்கும் பட்சத்தில், அந்த வீட்டு மனைக்குப் பதிலாக 5 செண்ட் நிலம் வழங்கப்படும். அதில் 1000 சதுர அடி அளவில் அடுக்குமாடி வீடு கட்டித்தரப்படும்," என்றும் என்எல்சி நிர்வாக செயல் இயக்குனர் சதிஷ் பாபு தெரிவித்துள்ளார்.
அரசு நடவடிக்கை
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்திடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தது குறித்தும், இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் பிபிசி தமிழ் கேள்வி ஆட்சியரிடம் கேட்டது.
"நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு சட்டம் 2013ன் படி கிராம மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் என்எல்சி நிறுவனத்தை வலியுறுத்தி பாதிக்கப்படும் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்," என்று சதீஷ் பாபு பதிலளித்தார்.
"உள்ளூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகும் விவசாயிகள்"
நிலங்களைக் கொடுக்கும் கிராம மக்கள் உள்ளூரிலே புலம் பெயர் தொழிலாளர்களாக மாற்றியமைக்கிறது என்கிறார் ஓய்வு பெற்ற என்எல்சி நிர்வாக செயல் இயக்குனர் துரைக்கண்ணு.
இதுகுறித்து அவர், "நிலங்கள் கொடுப்பவர்களுக்கு ஒப்பந்த வேலையும், நிரந்தர வேலையைப் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குகின்றனர். அடிப்படையில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை. சுமார் 200 பேரில் தமிழகத்திலிருந்து மொத்தம் 12 முதல் 15 மட்டுமே இருக்கின்றனர்.
கடைநிலையில் உள்ள தொழில்நுட்ப வேலைகளிலிருந்து கேடர் வேலை வரை 60 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வழங்கவேண்டும். ஆரம்பத்தில் அதன் அடிப்படையிலேயே வேலை வழங்கினர். அதில் நெய்வேலி மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை வாய்ப்பு பெற்று இன்று பல்வேறு நிலைகளில் உள்ளனர்," என்றார் அவர்.
மேலும், "தொழில்நுட்ப பணிக்கு நிலம் கொடுத்தவர்களின் குறைந்த பட்சம் 50 முதல் 60 சதவீதத்தினரை வேலைக்கு அமர்த்தினால், இந்த பிரச்னையை ஓரளவு சரி செய்யலாம். அல்லது நெய்வேலியில் சுமார் 1000 ஏக்கருக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத பகுதி நிலங்கள் உள்ளன.
அதை விவசாயம் செய்வதுக்கு ஏற்றாற்போல மாற்றி, கூட்டுறவு விவசாய பண்ணை அமைக்கலாம், அல்லது தனித்தனியே நிலங்களை கொடுத்து இவர்களுக்குத் தெரிந்த தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யலாம்," என்கிறார் ஓய்வுபெற்ற என்எல்சி செயல் இயக்குநர் துரைக்கண்ணு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்