சைவமா, அசைவமா? இந்திய மக்கள் இறைச்சிக்கு எதிரானவர்களா? #நவராத்திரி அரசியல்

    • எழுதியவர், அபர்ணா அல்லுரி
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவில் மீண்டும் உணவு அரசியலாக்கப்பட்டுள்ளது. இந்து பண்டிகையான நவராத்திரியின்போது, தலைநகர் டெல்லியில் வலதுசாரி கொள்கை கொண்ட அரசியல்வாதிகள், இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், இந்த விவாகரத்தில் இந்தியாவுக்கும், அல்லது இந்துக்களுக்கும் இறைச்சிக்கும் உள்ள நீண்ட கால உறவை முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.

வலதுசாரிகளின் வாதம் என்ன?

"இந்து பண்டிகையை பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் மதித்தால், நாங்களும் பிற மதத்தவர்கள் கொண்டாடும் பண்டிகைக்கு மதிப்பு அளிப்போம்", என்று பா.ஜ.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா கூறுகிறார்.

வட இந்தியாவில் கடந்த ஏப்ரம் 2ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி பண்டிகையன்று, இறைச்சி கடைகள் மூடப்படவேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு உட்பட எதிர்கட்சிகள் இந்த ஆலோசனையை நிராகரித்துள்ளது. இதுப்போன்ற ஒன்று இந்திய தலைநகர் டெல்லியில் நடப்பது இதுவே முதன்முறை.

ஆனால், இந்த சமயத்தில், ரமலான் நோன்பும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் உண்மையை வர்மா தவிர்ப்பதாக தெரிகிறது. அவர்களின் நோன்பில் முக்கிய அங்கம், மாலை நேரத்தில் இறைச்சி சாப்பிட்டு நோன்பை முடிப்பதுதான். இறைச்சி கடைகளை பெரும்பாலும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களே நடத்துவதாக அவர் நம்புகிறார்.

ஆனால், வரலாறு, தரவுகள் மற்றும் இங்கு மனிதர்கள் வாழ்ந்த முறை அனைத்தும் அவர் நினைப்பதற்கு மாறாகவே உள்ளது. சைவம் அல்லது அசைவம், இந்து அல்லது முஸ்லிம் என்று இந்தியாவின் உணவு பழக்கத்தை மிகவும் எளிதாக பிரித்து விடுகிறார்கள். அத்தகைய தன்மையைதான் வலதுசாரிகள் வளர்க்க விரும்புகிறார்கள்.

சைவம் அசைவம் என்று பிரித்து பார்ப்பது எளிதா?

"இந்திய கலாசாரம் இதை விட மிகவும் சிக்கலானது'", என்று 'தி எக்னாமிக்ஸ் டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியரான விக்ரம் டாக்டர் கூறுகிறார்.

"இந்தியாவில் இறைச்சி சாப்பிடும் கலாசாரம் மிகவும் பழமையானது; சைவம் சாப்பிடும் பழக்கமும் பழமையானதே. ஆனால், ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் சூழ்நிலைக்கே நான் தள்ளப்படுகிறேன்", என்று அவர் கூறுகிறார்.

"வலதுசாரி அமைப்புகளால் சைவ உணவு பழக்கம் ஆயுதமாக கருதப்படுகிறது", என்று அவர் கூறுகிறார்.

இதுவரையில், மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்தே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் பசுக்களை புனிதமாக பார்க்கிறார்கள். பல மாநிலங்களில் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2014 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோதியின் அரசு அதிகாரத்துக்கு வந்தது முதலே, மாட்டிறைச்சி சர்ச்சை தீவிரமடைந்தது. அவரது கட்சி வலுவாக உள்ள மாநிலங்களில், கசாப்பு கடைகள் மூடப்பட்டன. இந்து வலது சாரிகள் முஸ்லிம் கால்நடை விவசாயிகளை கும்பல் கொலை செய்தனர்.

வரலாறு என்ன கூறுகிறது?

இப்போது டெல்லி போன்ற நகரங்களில் மாட்டிறைச்சி உணவக மெனுக்களில் குறிப்பிடும்போது, ​​அது பெரும்பாலும் "இறைச்சி" என்றே குறிப்பிடப்படுகின்றது; இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் அதை பெரிதும் சேமித்து வைப்பதில்லை.

சாதி இந்துக்கள் பலர் மாட்டிறைச்சி உண்பதில்லை. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள லட்ச கணக்கான தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சாப்பிடுகிறார்கள்.

ஆனால் கேரளாவில் உள்ள சமூகங்களுக்கு மத்தியில் பிரபலமான இறைச்சியாக மாட்டிறைச்சி உள்ளது. அங்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே மத ரீதியான காரணங்களுக்காக மாட்டிறைச்சியை தவிர்க்கிறார்கள்.

70,000 பிசி (கிறிஸ்து பிறப்பதற்குமுன்) முதல் இறைச்சி இந்திய உணவுமுறைகளில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது என்று இந்திய உணவு முறைகளை ஆராய்ச்சி செய்த மருத்துவ ஊட்டச்சத்து ( clinical nutritionist) நிபுணர் மனோஷி பட்டாச்சார்யா கூறுகிறார்.

சிந்து சமவெளி நாகரிகம் வரை பழமையான இந்தியாவில் மாட்டிறைச்சி மற்றும் காட்டுப்பன்றிகளின் இறைச்சியை பரவலாக உண்டனர் என வரலாறு கூறுகிறது. 1500 முதல் 500 பிசி வரை வேத காலகட்டத்தில், விலங்குகள் மற்றும் பசுக்கள் பலியாக்கப்படுவது பொதுவான வழக்கமாக இருந்தது. இறைச்சி கடவுளுக்குப் படைக்கப்பட்டு பின்னர் விருந்தாக அதை மனிதர்கள் உண்டார்கள்.

அதனால், வலதுசாரிகள் அவ்வப்போது கூறுவது போல், இந்தியாவிற்கு இறைச்சி உண்பதை கொண்டு வந்தது முஸ்லிம் மன்னர்களோ அல்லது படையெடுத்து வந்தவர்களோ அல்ல. அதற்கு மாறாக, புதிய சாம்ராஜ்யங்கள், வர்த்தகம் மற்றும் விவசாயம் ஆகியவற்றிற்கு ஏற்ப உணவுமுறைகள் மாறியுள்ளன. பல நூற்றாண்டுகளாக, பிராமணர்கள் மற்றும் சில சாதி இந்துக்களின் உணவு பட்டியலில் இருந்து மாட்டிறைச்சியும், அதன் பின்னர் இறைச்சியும் மறைந்துவிட்டன. இதற்கான காரணங்கள் வேறுபடுகின்றன. ஆனால் மதம் மட்டுமே அதற்கு காரணமல்ல.

தென்னிந்தியாவில் பிராமணர்கள் குறைந்தபட்சம் 16 ஆம் நூற்றாண்டு வரை இறைச்சி சாப்பிட்டு வந்ததாக தனது ஆராய்ச்சி காட்டுகிறது என்று பட்டாச்சார்யா கூறுகிறார். வடக்கில், அவர்கள் சில உயர் சாதியினருடன் சேர்ந்து, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அதைக் கைவிட்டனர்.

நில பயன்பாடு, விவசாய முறைகள், வர்த்தகம், பஞ்சங்களை உண்டாக்கிய காலனித்துவம், நவீன இந்திய உணவுமுறையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாக அவர் நம்புகிறார். நவீன உணவுமுறையில், அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால் , இதில் சில விதிவிலக்கு உள்ளது. சில பிராமண சமூகங்கள் இன்றும் இறைச்சி சாப்பிடுகின்றன. காஷ்மீரி பண்டிட்டுகள் ரோகன் ஜோஷ் என்ற சிவப்பு மிளக்காயுடன் சமைத்த ஆட்டு இறைச்சியை சாப்பிடுவார்கள். வங்காளத்திலும், தெற்கு கொங்கன் கடற்கரையிலும், பிராமணர்களின் வீடுகளில் பலவகையான மீன்களை உண்பார்கள்.

ஆய்வுகள் கூறுவது என்ன?

கடந்த ஆண்டு இந்தியாவின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் தரவுகளின்படி அசைவ உணவுகள் என்று அழைக்கப்படும் அனைத்து உணவுகளிலும் மாட்டிறைச்சி பிரபலமற்ற உணவாக உள்ளது. இந்த பட்டியலில், மீன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிக்கன், ஆட்டிறைச்சி உள்ளன. இறுதியாக, மாட்டிறைச்சி உள்ளது.

இந்தியர்கள் எவ்வளவு இறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பதை துல்லியமாக கணக்கிடுவது கடினம். ஓர் ஆய்வில், அவர்கள் சைவ உணவு உண்பவர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு ​​39% பேர் ஆம் என்றும் , 81% பேர் இறைச்சி சாப்பிடுவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அதில் சிலர் சில இறைச்சிகளை சாப்பிட மாட்டார்கள். மற்றும் சிலர் வாரத்தின் சில நாட்களில் இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்.

ஆனால், அரசு நடத்திய ஆய்வுகள் குறைவான எண்ணிக்கையையே தருகின்றன. 2021 கணக்கெடுப்பின்படி, முந்தைய வாரத்தில் கிராமப்புற வீடுகளில் கால் பகுதியும், நகர்ப்புறங்களில் ஐந்தில் ஒரு பங்கும் இறைச்சி (அல்லது மீன்) சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு, மற்றவர்கள் சைவ உணவு உண்பவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் கணக்கெடுப்புக்கு ஏழு நாட்கள் முன் எந்த இறைச்சியையும் சாப்பிடவில்லை என்பதே பொருள். நிபுணர்கள் கருத்துப்படி, கணக்கெடுப்புகள் வழக்கமாக இறைச்சி உண்பதை குறைத்து மதிப்பிடுகின்றன. ஏனெனில், தாழ்த்தப்பட்ட சாதியினர் அதை வெளிப்படுத்த தயங்குவார்கள்.

"நாங்கள் சைவ உணவு உண்பவர்கள். ஆனால், அசைவவும் சாப்பிடுவோம் என்று கூறுவார்கள்" என்று டாக்டர் பட்டாச்சார்யா கூறுகிறார்.

உலகில் உள்ள கலாசாரங்களில், மற்றவர்கள் இறைச்சி உண்பதைத் தொடர்ந்தாலும் கூட, செல்வாக்குமிக்கவர்களிடையே சைவ உணவுமுறை பின்பற்றப்பட்ட கலாசாரத்தில் இந்தியாவும் ஒன்று என்று அவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் பிரபலமான தலித் சமையல் செய்முறை ஒன்று உள்ளது. பச்சை பீன்ஸ் உடன் உலர்ந்த இறைச்சிகளை சேர்த்து ஒரு உணவு சமைப்பார்கள்.

ஆனால், இந்த அறிவார்ந்த சமையல் மரபுகள் மறைந்துவிட்டதாக அவர் நினைக்கிறார். "உணவக மெனுக்களில் பாதி சைவ உணவுகளை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் ."

இந்தியாவின் செழுமையான சைவ சமையல் முறையை கருத்தில் கொண்டும், மற்றொரு பக்கத்தில், அதன் ஆரோக்கியமான அளவு இறைச்சி மற்றும் கடல் உணவுகளுடன் - ஆரோக்கியமான, காலநிலைக்கு ஏற்ற உணவுப் பாரம்பரியத்தை உருவாக்க நமக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக டாக்டர் நம்புகிறார்.

ஆனால் தற்போதைய போக்கு வேறாக உள்ளது . இறைச்சி நுகர்வு அதிகரித்து வருகிறது. தொழிற்சாலையில் வளர்க்கப்படும் கோழிகளும் இதற்கு காரணம். கடந்த ஆண்டு இந்திய உணவு விநியோக தளமான ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு சிக்கன் பிரியாணி. இந்தியர்கள் ஒவ்வொரு நொடிக்கும் இரண்டு தட்டுகளை ஆர்டர் செய்தனர்."இந்தியாவின் சைவ மரபுகள் கொண்டாடப்பட வேண்டும்" என்கிறார் டாக்டர். "ஆனால், அவர்கள் மக்கள் மீது கட்டாயப்படுத்தும் விதம், யாரும் அதற்கு தயாராக இருக்க விடுவதில்லை".

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :