You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியங்களில் சேருவது எப்படி ? சேர்ந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன ?
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா முழுவதும் சிறு, குறு விவசாயிகள், சாலையோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் 43.70 கோடி பேர் உள்ளனர் என்கிறது தொழிலாளர் நலத்துறை.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள், வேலை வாய்ப்பு என பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு, பணி ஒழுங்கு உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1982ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள்(வேலை மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உதவிகள் கிடைக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதிவு செய்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி, விபத்து மற்றும் இறப்பிற்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இவற்றை பெற வேண்டும் என்றால், அவர்கள் வேலை சார்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டியது முக்கியம். நலவாரியங்களில் யாரெல்லாம் சேரலாம். சேர்ந்தால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்.
வாரியங்களின் விவரம்
செய்யும் தொழில், பணி அடிப்படையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தையல், கைவினைஞர், பனை மரத் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், கைத்தறி நெசவாளர், விசைத்தறி, மண்பாண்டத் தொழிலாளர், சமையல், சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள் நலம் என 17 வகையான அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன.
இவற்றின் கீழ் பல்வேறு வேலைகளைச் செய்வோர் அதன் தொடர்புடைய நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், கல் உடைப்பவர், எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர், பூங்கா நடைபாதை அமைப்பவர் என 50க்கும் மேற்பட்ட பணிகளை செய்வோர் உறுப்பினராக பதிவு செய்ய கொள்ளலாம்.
உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் பிற நல வாரியத்தில் சுமை தூக்குவோர், உப்பள தொழிலாளர், தூய்மைப் பணியாளர்கள், மர வேலை செய்வோர் உள்ளிட்ட 60 வகையான பணிகளை செய்வோர் பதிவு செய்து கொள்ளலாம்.
வாரியத்தில் சேர தகுதி
வாரியத்தில் சேர விரும்புவோருக்கு 18 வயதில் இருந்து 60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து, இதற்கான இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலில் ஈடுபட்டுள்ளதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். இந்த சான்றை கிராம நிர்வாக அலுவலர், பணி அளிப்பவர், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் ஆகிய ஒருவரிடம் பெற வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம், கட்டுமான தொழிலாளர்களுக்கு பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் அல்லது கட்டுமான நிறுவனத்தின் சான்று வேண்டும். விண்ணப்பதாரரின் வயது சான்று, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து வழங்க வேண்டும்.
கட்டண விபரம்
நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை. இதேபோல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்ய வேண்டிய புதுப்பித்தலுக்கும் கட்டணம் இல்லை. புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணங்கள் சரிபார்க்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
அடையாள அட்டை தொலைந்தால், சேதமடைந்தாலோ இரண்டாம்படி (டூப்ளிகேட்) அடையாள அட்டை வேண்டும் என்றால், அதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்ப விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, ரூ. 20 கட்டணம் பெற்றுக் கொண்டு டூப்ளிகேட் அட்டை வழங்கப்படும்.
கிடைக்கும் உதவிகள், சலுகைகள்
அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களின் மகன் திருமணத்திற்கான உதவித்தொகை ரூ. 3, 000. மகள் திருமணத்திற்கான உதவித் தொகை ரூ. 5, 000. மகப்பேறு நிதியுதவி ரூ. 6,000, கருக்கலைப்பு/கருச்சிதைவிற்கு ரூ. 3,000 உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.
உறுப்பினரின் 60 வயது நிறைவிற்கு பின்னர் அல்லது அதற்கு முன்னர் நோயினால் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மாதம் ரூ. ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கட்டுமானத் தொழிலாளி பணியிடத்தில் இறந்தால் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
விபத்தில் உடல் உறுப்பு இழப்பு, துண்டிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டால் இழப்பிற்கு ஏற்ப ரூ. 1 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை. இயற்கை மரணம் ஏற்பட்டால் நியமனதாரருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு. ஈமச் சடங்கிற்கு ரூ. 5, 000 வழங்கப்படுகிறது.
கல்வி உதவிகள்
நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ. 1, 000 உதவித் தொகை, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ. 1, 500 வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் 10, 11ம் வகுப்பு படிக்க ரூ. 1, 000, 12ம் வகுப்பு படிக்க ரூ. 1, 500, பட்டப் படிப்பிற்கு ரூ. 1, 500, விடுதியில் தங்கி படித்தால் ரூ. 5, 000, தொழில் நுட்ப பட்டம், சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு ரூ. 4, 000, விடுதியில் தங்கிப் படித்தால் ரூ. 6, 000 வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வி மேற்படிப்பிற்கு ரூ. 6, 000, மேற்படிப்பை விடுதியில் தங்கி படித்தால் ரூ. 8, 000, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ. 1, 000, விடுதியில் தங்கிப் படித்தால் ரூ. 1, 200 என உதவித் தொகை வழங்கப்படுகிறது. நலத்திட்ட உதவித் தொகை அனைத்தும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அந்தந்தப் பகுதியில் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் தரமான கல்வி வழங்கும் வகையில், 6-12ம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயக்கப்படும் கட்டணம், விடுதிக் கட்டணம் ரூ.15 ஆயிரம் ஆண்டிற்கு வழங்கப்படும்.
நலத்திட்ட உதவி பெற
நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவித் தொகைகளை பெறுவதற்கு, அடையாள அடை, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் எந்தவகையிலான நலத்திட்ட உதவி கேட்டு விண்ணப்பிக்கிறோமோ அதற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
குறிப்பாக, கல்வி உதவித் தொகை பெற கல்வி பயிலும் ஆண்டிலேயே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளித் தலைமை ஆசிரியர் அளிக்கும் சான்று, சான்றொப்பமிட்ட தேர்ச்சி மதிபெண் சான்று/மாற்று சான்று, விடுதியில் தங்கிப்படித்தால் முதல்வர் அல்லது விடுதி காப்பாளர் தரும் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டுத் திட்ட உதவி
நலவாரிய உறுப்பினர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிகிச்சை பெறலாம்.
இதன்படி, ஒரு குடும்பத்திற்கு, ஆண்டு ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகள் மற்றும் 23 நோய் பரிசோதனை கண்டுபிடிப்பு முறைகளுக்கும் பயன்பெறலாம்.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் சேருவது, விண்ணப்பத்தின் நிலை, புதுப்பித்தல், விபத்து அறிவிப்பு படிவம் பதவிறக்கம் உள்ளிட்டவற்றிற்கு https://tnuwwb.tn.gov.in என்கிற இணைய தளத்தில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த இணைய தளத்தில் புதிய உறுப்பினர் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கும் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு உதவி
இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மூலம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதியப் பயன்கள் அளிக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளம் ( https://eshram.gov.in/) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் 38 கோடி பேரின் விபரங்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்திலும், பொது சேவை மையங்களிலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
இதில், பதிவு செய்து கொள்வோருக்கு தனி அடையாள எண் மற்றும் அடையாள அட்ட்டை வழங்கப்படும். அவர்கள் பிரதமர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு பெறலாம். வருமான வரி செலுத்துவோர். வருங்கால வைப்பு நிதி (பி.எப்), இஎஸ்.ஐ பணியாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க முடியாது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்