ரிசர்வ் வங்கி கையேடு: எத்தனை விதமான நிதி மோசடிகள்? தற்காத்துக்கொள்வது எப்படி?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறையின் பொது விழிப்புணர்வு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நிதி மோசடிகளை எப்படி தடுப்பது என்பது குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது, 'BE(A)WARE' என்ற தலைப்பில் கையேடு வெளியிட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள கையேட்டில் வங்கி சார்ந்த 14 வகையான நிதி மோசடி வகைகள், வங்கி சாராத 6 நிதி மோசடி வகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன, இந்த மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட மோசடி நடவடிக்கைகளை வாடிக்கையாளர் சந்திக்க நேரும் பட்சத்தில் அவர்கள் அதை எப்படி அணுக வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள சில மோசடி வகைகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக அவர்கள் அந்தக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளவை ஆகியவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். ஃபிஷிங் இணைப்புகள் (Phishing links)

ஃபிஷிங் இணைப்புகள் முறையில், நிதி மோசடியில், போலியான மூன்றாம் தரப்பு வலைதளத்தை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்படும் வலைத் தளம் பிரபலமான ஒரு வங்கி அல்லது பிரபலமான மின் வணிக நிறுவனங்களின் வலைதளத்தின் சாயலாக இருக்கக்கூடும். அப்படி உருவாக்கப்படும் வலைதளத்தின் இணைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பி, வங்கிகள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகவல்களை வாடிக்கையாளரிடம் பெறுவார்கள். இதன் மூலம் நிதி மோசடி நடக்கும்.தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்

  • முன் அறிமுகமில்லாத, சரிபார்க்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • எஸ்எம்எஸ் (SMS) அல்லது மின்னஞ்சல் மூலமாக, முன்அறிமுகமில்லாத வலைதள இணைப்புகளைப் பெறும் பட்சத்தில் அதை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்.
  • வாடிக்கையாளர் தாங்கள் வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்கிறார்களா? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்

திரைப் பகிர்வு செயலி / தொலைநிலை தொழில்நுட்பம் மோசடிகள் (Frauds using screen sharing app / Remote access)

நிதி மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளரை ஏமாற்றி, போலியான வலைதள இணைப்புகள் கொண்டு, திரைப் பகிர்வு செயலியை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய தூண்டுவார்கள். பிறகு திரைப் பகிர்வு செயலி மூலம் வாடிக்கையாளர்களின் கைப்பேசி அல்லது மடிக்கணினி திரை பகிர்வு செய்யப்பட்டு, அதில் பகிரப்படும் நிதி பரிவர்த்தனை தகவல்கள் திருடப்படும் . அதன் மூலம் நிதி மோசடி நடைபெறும்.தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்

ஏடிஎம் கார்டு ஸ்கிம்மிங் (ATM card skimming)

நிதி மோசடி செய்பவர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மிங் (skimming) சாதனங்கள் மூலம், வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டின் தகவல்களை திருடுவர். அப்படி திருடப்படும் தகவல்கள் மூலம், போலியான ஏடிஎம் கார்டுகள் கொண்டு நிதி மோசடி நடக்கும், அல்லது வாடிக்கையாளர் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் இயந்திரங்களின் அருகே மற்றொரு வாடிக்கையாளர்கள் போல் நின்று மோசடியாளர்கள், ஏடிஎம் கடவுச்சொற்களை கண்காணித்து பிறகு நிதி மோசடியில் ஈடுபடுவார்கள்.தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்

  • வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக ஏதேனும் இயந்திரம் அதில் பயன்படுத்தப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏடிஎம் கடவுச்சொற்களை போடும் போது மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் அதை மறைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் அருகாமையில் தெரியாத நபர்கள் இருக்கும்பட்சத்தில் கடவுச்சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

QR குறியீடு ஸ்கேன் மூலம் நிதி மோசடி (Scam through QR code scan)

நிதி மோசடி ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களை ஏதோ ஒரு வகைகளில் QR குறியீடு ஸ்கேனை பயன்படுத்த நிர்ப்பந்தம் செய்வார்கள். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பரிவர்த்தனை செய்வதற்கான அனுமதியை பெறுவார்கள்.தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்

  • QR குறியீடு ஸ்கேனை பயன்படுத்தும் பரிவர்த்தனை செய்யும் செயலிகள் மீது கவனமாக இருக்கவும்.
  • பணத்தைப் பெறுவதற்காக எந்த QR குறியீட்டையும் ஸ்கேன் செய்ய வேண்டாம். அப்படியான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: