You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வால்பாறை தேயிலை நிறுவனங்கள் மீது புகார் கூறும் தொழிலாளர்கள் - கள நிலவரம்
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்த ஊதிய உயர்வை தேயிலை நிறுவனங்கள் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.425 தினசரி ஊதியம் வழங்க வேண்டும் என்கிற அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அதை மீறி தேயிலை நிறுவனங்கள் தொழிற்சங்கங்களுடன் இணைந்து ரூ.395 தினசரி ஊதியமாக வழங்க ஒப்பந்தம் போட இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியு அமைப்பைச் சேர்ந்த பரமசிவன், "வால்பாறையில் மொத்தம் ஐந்து தேயிலை நிறுவனங்களின் தோட்டங்களும் அரசாங்கத்தின் டாண்டீ (TANTEA)நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களும் உள்ளன. இதில், 30,000 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.345 தினசரி ஊதியமாக உள்ளது. இதனை ரூ.425 ஆக உயர்த்தி நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
ஆனால், அரசாணை வெளியிடப்பட்ட உடனே ஊதிய உயர்வு அமலுக்கு வந்துவிடாது. இதன் பின்னர் தொழிலாளர் ஆணையர், தொழிற்சங்கங்கள், குறைந்தபட்ச ஊதிய குழு ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். அதன் பின்னர் கையெழுத்தாகும் ஒப்பந்தம் தான் இறுதியானது.
ஆனால், தேயிலை நிறுவனங்கள் அரசாங்கம் பரிந்துரைத்த ஊதியத்தை வழங்காமல் ரூ.395 ஊதியமாக வழங்க இதர தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் போட தயாராகின்றது. இதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்புக் கொள்கின்றன. சிஐடியூ இதனை எதிர்த்து வருகிறது.
ஏற்கெனவே கூடலூர் போன்ற பிற பகுதிகளில் ரூ.395 ஊதியமாக ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. வால்பாறையிலும் தற்போது ரூ.395 தான் ஊதியமாக வழங்கி வருகிறார்கள்.
2 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்த வால்பாறை தேயிலை தோட்டங்களில் முறையான ஊதியம், போதுமான அடிப்படை வசதிகள் ஆகியவை இல்லாததால் பலரும் வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டனர். தற்போது 30,000 தொழிலாளர்கள் தேயிலை தோட்ட பணிகளில் உள்ளனர். ஊதியம் அரசு நிர்ணயித்ததைவிட 30 ரூபாய் குறைவாக வழங்கினால் தொழிலாளர்கள் நான்கு ஆண்டுகளில் ஒன்றுக்கு ரூ.32,000 வரை இழக்க நேரிடும்.
தேயிலை நிறுவனங்கள் இவ்வாறு தொழிற்சங்கங்களுடன் தனி ஒப்பந்தத்தை போட்டுவிட்டு அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க முடியாது எனப் பின்வாங்கிவிடுவார்கள். இதே போல், 2002-ம் ஆண்டும் நடந்துள்ளது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கும் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
தற்போது அதேபோல் தான் செய்யப் பார்க்கிறார்கள். அரசு தலையிட்டு தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும். தமிழக முதல்வருக்கு இந்த விவகாரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் முயற்சித்து வருகிறோம்" என்றார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன், "தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பாக அரசாங்கம் வெளியிடப்பட்டிருப்பது வரைவு அறிக்கை தான். முறையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தான் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும், அதுவே அதிகாரப்பூர்வமானது. அப்போது அரசாங்கம் வழங்கிய ஊதியம் கிடைத்துவிடும். சிஐடியூ குற்றம்சாட்டுவதைப் போல எதுவும் நடக்கவில்லை" என்றார்.
இது தொடர்பாக, தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டோம். அந்த சங்கத்தின் நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தற்காலிகமானது தான்.
பொதுவாக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஒப்பந்த ஊதியம் என்பது முறையாக வழங்கப்பட்டுவிடும். 2008 வரை இந்த நடைமுறையில் சிக்கல் இருந்ததில்லை. அதன் பின்னர் அரசியல் அழுத்தம் போன்ற காரணங்களால் அரசாங்கமே ஒரு ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்கிற நிலை வந்தது.
அரசாங்கம் நிர்ணயிக்கும் ஊதியம் இறுதியானது இல்லை. அரசு யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இவ்வளவு சதவிகிதம் உயர்வு என ஒரு ஊதியத்தை நிர்ணயித்துவிடுகிறார்கள். அது உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகுமா என்பதையெல்லாம் யோசிப்பதில்லை. பொதுவாக வழங்கப்படும் ஊதியத்தை விட அதிக ஊதியத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்கிற ஒருதலைபட்சமான நடவடிக்கையாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது.
அரசாங்கம் அறிவித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அதை இறுதி செய்வதற்கு நீண்ட காலம் ஆகிவிடும். அது வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்க முடியாது என்பதால் தான் தொழிற்சங்கங்களும் தேயிலை நிறுவனங்களுடன் ஊதியம் தொடர்பாக உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்கின்றன.
அசாமில் தொழிலாளர்களுக்கு ரூ.203 தான் ஒரு நாள் ஊதியமாக வழங்குகிறார்கள். நமது தேயிலையை விடவும் அசாம் தேயிலைகளுக்கு அதிக விலையும் கிடைக்கும். ஆனால், அங்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் நாம் வழங்குவதில் பாதி தான். தேயிலை உற்பத்தியில் அசாமின் பங்கு 70%, நமது பங்கு 20% தான், இதே நிலை தமிழ்நாட்டில் தொடர்ந்தால் தேயிலை தொழில் என்பது இல்லாமல் போய்விடும்" என்றார்.
இது தொடர்பாக கருத்து பெற பிபிசி தமிழ் சார்பில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசனை பலமுறை தொடர்பு கொண்டும் இணைப்பை பெற முடியவில்லை. அவர் தரப்பு கருத்து கிடைத்தால் கட்டுரையில் இணைக்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்