You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ தளவாடங்கள் வாங்கப்படவில்லையா? எது உண்மை?
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, தவறான தகவல்களை வெளிப்படுத்தும் குழு, பிபிசி
2014க்கு முன்பான பத்தாண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை வரலாற்றிலேயே எந்த புது ஆயுதமும் வாங்கப்படாமல் ராணுவ படையினரை தவிக்க விட்டனர் என்று இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2022, மார்ச் 21 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டார். நிதியமைச்சராவதற்கு முன், அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்சத் தொலைக்காட்சியில் இருக்கும் அவரது 47 நிமிட உரை மற்றும் அவரது அலுவலகத்தின் ட்விட்டர் பதிவின் படி, அவரது சொற்கள் பின்வருமாறு:
"இந்திய பாதுகாப்புத் துறையின் வரலாற்றில் பத்தாண்டுகளாக எந்தப் புதிய தளவாடங்களும் வாங்கப்படவில்லை. பத்தாண்டுகளை இழந்து விட்டோம்… பத்தாண்டுகள்…. 2014-க்குப் பிறகு குண்டூசி முதல் ஆகாய விமானம் வரை அனைத்தையும் நாங்கள் வாங்க வேண்டியிருந்தது. நமது பாதுகாப்புத் துறையை நிராயுதபாணியாக்கிய விஷயங்களின் பட்டியலை நான் மீண்டும் மீண்டும் கூறுவேன். பாதுகாப்புத் துறையில் இது எதுவுமே செய்யப்படவில்லை, எதுவுமே வாங்கப்படவில்லை. எதுவுமே ஓரிரவில் நடக்காது. மரபு சார்ந்த சிக்கல்களையும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றையும் எதிர்கொள்ள நாங்கள் முயல்கிறோம். (இன்னொரு உறுப்பினருக்குப் பதிலளிக்கையில்,) எதுவுமே வாங்கப்படாமல் பத்தாண்டுகள் என்பது மிக நீண்ட காலம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். தவிர, பத்தாண்டுகளின் கொள்முதல் 7 ஆண்டுகளில் செய்யப்படுவதும் பாராட்டப்பட வேண்டும்."
தம் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பாதுகாப்புத் துறையமைச்சர் அருண் ஜேட்லி, தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரின் தணிக்கை அறிக்கைகள் மற்றும் கூற்றுகளின் அடிப்படையிலேயே தமது உரை அமைந்திருப்பதாகக் கூறிய இவர், இதனால் படைகள் அப்போது, கையறு நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கூறினார்.
இது எந்த அளவுக்கு உண்மை?
அமைச்சரின் கூற்றுக்குப் புறம்பாக, பாதுகாப்புத் துறை ஆவணங்கள், அந்தப் பத்தாண்டுகளில் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணை அமைப்புகள், விமானங்கள் போன்ற பெரிய அளவிலான கொள்முதல்களும் நடந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட அமைச்சகத் தரவுகளையும் ஆண்டறிக்கைகளையும்(அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளவை) பிபிசி ஆய்வு செய்தது.
தொடர்புடைய காலத்தில் செய்யப்பட்ட பெரும் கொள்முதல்களில் முக்கியமான சில..
- 2005 - அக்டோபர் 2005-ல் தொழில்நுட்பப் பகிர்தலின் மூலம், ஆறு ஃபிரஞ்சு ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உள் நாட்டிலேயே, மும்பையின் மாஸகான் டாக் லிமிடட் நிறுவனத்தில் தயாரிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்த ஆறில் ஐந்தாவது கலம் இப்போது சோதனைகளைக் கடந்து இந்தியக் கடற்படையில் இணைக்கப்படவுள்ளது.
- 2006 - பாதுகாப்புத் துறைக்கும் அரசின் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில், 20 இலகு ரகப் போர் விமானமான (LCA) தேஜஸை இந்திய விமானப்படைக்காகத் தயாரிக்க மார்ச் 2006-ல் கையெழுத்தானது 2701.7 கோடிக்கான ஒப்பந்தம்.
- 2007 - அமைச்சகத்துக்கும் ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தம் வாயிலாக, இந்திய விமானப் படைக்காக, கூடுதலாக 40, சுகோய் 30 ஜெட்கள் வாங்கப்பட்டன.
- 2008 - இந்திய விமானப்படைக்காக, அமெரிக்காவிடமிருந்து ஆறு சி130 ஜே ஹெர்குலஸ் வாங்குவதற்கான ஒப்பந்தம், 3835.38கோடி மதிப்பில் கையெழுத்தானது.
- 2009 -இந்தியக் கடற்படைக்காக, எட்டு P-8I நீண்ட தூர கடல் ரோந்து விமானத்துக்கான 2.137 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஜனவரி மாதம் போயிங் நிறுவனத்துடன் கையெழுத்தானது. இந்தத் தகவல், 2009 ஆம் ஆண்டின் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2009 - பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் பெறப்பட்ட தரவு, இந்திய ராணுவத்திற்காக 2009-10 ஆம் ஆண்டில் பிரம்மோஸ் ஏவுகணைக்கான ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிடுகிறது.
- 2009 - இந்திய விமானப் படையின் Mi17 V5 ஹெலிகாப்டர்கள், ரஷ்யாவுடனான ஒப்பந்தம் முடிவுற்றதையடுத்து பணியில் சேர்க்கப்பட்டன என்று 2009-10 ஆம் ஆண்டுக்கான அமைச்சகத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
- உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி என்று பார்த்தால், அரசின் பொதுத் துறை நிறுவனமான BEL இந்திய விமானப்படைக்கு இரண்டு படைப்பிரிவு ஆகாஷ் ஏவுகணைகளை (ரூ. 1222 கோடி) வழங்குவதற்கான ஆர்டரைப் பெற்றது குறித்துக் குறிப்பிடுகிறது அதே அமைச்சகத்தின் அறிக்கை. அந்நிறுவனத்திற்கு இந்த அளவு மேம்பட்ட உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதக் கொள்முதலுக்கான முதல் ஆர்டர் இது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
2014ஆம் ஆண்டு பிப்ரவரியில், தனது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தில், ராணுவப் படைகளை நவீனமயமாக்க, தான் செய்த செலவுகளைப் பற்றி விளக்கியது. 2010-11 -ல் 62,056 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், 2012-13-ல் இந்தச் செலவு 70,499.12 கோடி ரூபாயாக அதிகரித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்தது.
இதன் மூலம், நிதி அமைச்சர் மீண்டும் மீண்டும் எந்தக் கொள்முதலும் செய்யப்படவில்லை என்று கூறிய தகவல் சரியன்று என்பது தெளிவாகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்