கர்நாடகா பந்த்: இஸ்லாத்தில் ஹிஜாப் - நீதிமன்றங்கள் இதை தீர்மானிக்க வேண்டுமா?

    • எழுதியவர், சோயா மத்தீன்
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

ஹிஜாப், "கலாசாரத்துடன் தொடர்புடையது, ஆனால் நிச்சயமாக மதத்துடன் தொடர்புடையது அல்ல" என்று செவ்வாய்கிழமையன்று வெளியான இந்திய நீதிமன்றத்தின் ஒரு முக்கியத்தீர்ப்பு தெரிவிக்கிறது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பிரிவு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதன் மீதான அரசின் தடையை, இது அணிவது இஸ்லாத்திற்கு "அத்தியாவசியம்" இல்லை என்ற அடிப்படையில் உறுதி செய்தது.

ஹிஜாப் தொடர்பான சர்ச்சையில் ஒருமுனைப்படுத்தல் நடப்பதான குற்றச்சாட்டுக்களை அடுத்து வெளிவந்துள்ள இந்தத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு தடைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் சட்ட வல்லுநர்களும் அறிஞர்களும் தீர்ப்பை ஆராயத்தொடங்கியுள்ளனர். பல்வேறு கலாசாரங்கள் பின்பற்றப்படும் ஒரு நாட்டில் இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

" இது அத்தியாவசியமானதா" என்ற சோதனையே தீர்ப்பின் மையமாக உள்ளது. அதாவது ஒரு மதத்திற்கு இது அத்தியாவசியமா என்று இதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. மதம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு இந்திய நீதிமன்றங்கள் இதை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.

ஹிஜாப் அணிவது இஸ்லாத்திற்கு இன்றியமையாததா?

இந்த கேள்வியே விசாரணையின் முக்கிய அம்சமாக இருந்தது மற்றும் 129 பக்க தீர்ப்புக்கு அடிப்படையாக அமைந்தது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு கல்லூரியில் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் குழுதான், இந்த வழக்கின் மனுதாரர்கள். அவர்கள் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச்சென்றது.

ஹிஜாபைத் தடை செய்வது பாரபட்சமானது மட்டுமல்ல, கருத்துச் சுதந்திரம் மற்றும் சமயம் தொடர்பான தங்கள் உரிமையையும் பாதிக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர். ஹிஜாப் அணிய வேண்டும் என்று தங்கள் மதம் சொல்வதாக அந்தப்பெண்கள் கூறினார்கள்.

ஹிஜாப் ஒரு "அத்தியாவசிய" மத நடைமுறை என்பதை மனுதாரர்கள்தான் நிரூபிக்க வேண்டும் என்று அரசு தரப்பு கூறியது.

11 நாட்கள் சூடான வாத பிரதிவாதங்கள் மற்றும் ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, மனுதாரர்கள் இதை நிரூபிக்க "முற்றிலுமாக தவறிவிட்டனர்" என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

குரானில் இருந்து பத்திகளை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், "ஹிஜாப் அணியும் நடைமுறையை கடைபிடிக்காவிட்டால், ஹிஜாப் அணியாதவர்கள் பாவிகளாகிவிடுவார்கள். இஸ்லாம் அதன் மகிமையை இழந்து அது ஒரு மதமாக இருக்காது என்பதெல்லாம் கிடையாது," என்று தனது தீர்ப்பில் தெரிவித்தது.

எனவே, ஹிஜாப் இல்லாமல் சீருடையை பரிந்துரைக்க மாநிலத்திற்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது. மாணவர்களின் ஆட்சேபங்களை நிராகரித்த நீதிமன்றம், இந்த விதி அவர்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான " நியாயமான கட்டுப்பாடு" என்று கூறியது.

"மதரீதியாகக் கடமையாக்கப்படாததை, பொதுப் போராட்டங்கள் மூலமாகவோ அல்லது நீதிமன்றங்களில் உணர்ச்சிப்பூர்வமான வாதங்கள் மூலமாகவோ மதத்தின் முக்கிய அம்சமாக மாற்ற முடியாது" என்று நீதிமன்ற உத்தரவு கூறியது.

ஆனால் இது நீதிமன்றம் முடிவு செய்யவேண்டிய விஷயம் அல்ல என்று அரசியலமைப்பு நிபுணர்களும், சட்ட அறிஞர்களும் கூறுகிறார்கள். "வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் அவ்வளவாக அறியாத இறையியல் பகுதிக்குள் நுழைவது போலானது இது," என்கிறார் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரெபேக்கா ஜான்.

'அத்தியாவசிய சோதனை' - அன்றும் இன்றும்

"மத நம்பிக்கை என்று வரும்போது, நடைமுறைகளில் ஒரே முறை என்பது இல்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் குடையின் கீழ் வரலாம், ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான விருப்பம் உள்ளது," என ஜான் கூறுகிறார்.

"ஹிஜாப் கூட பல வகையான மக்களுக்கு பல விஷயங்களின் அடையாளமாக இருக்கிறது. அதை தடை செய்வதற்கான எளிதான வழி, அதை ஒடுக்குமுறையின் அடையாளம் என்று கூறுவது. ஆனால் உலகம் முழுவதும், எதிர்ப்பின் அடையாளமாக இது பயன்படுத்தப்படுகிறது. எனவே, முழுமையான வரையறைகளில் எது இன்றியமையாதது என்பதை நாம் வரையறுக்க முடியாது. மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அதை ஏற்றுக்கொள்கிறார்கள்."

அவ்வாறு செய்வதன் மூலம், பெண்களை அவர்களின் விருப்பதேர்வில் இருந்து நீதிமன்றம் நீக்கிவைத்துள்ளது. சிக்கலான மற்றும் மனத்திற்கு நெருக்கமான தேர்வுகளை நீக்கி, இரண்டு வழிகள் மட்டுமே உள்ள எளிய தேர்வுகளாக ஆக்கியுள்ளது.

பொது ஒழுங்கு, சுகாதாரம் மற்றும் அறநெறி ஆகியவற்றின் அடிப்படையில் மத சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்த இந்திய அரசியலமைப்பு, மாநிலங்களை அனுமதிக்கிறது. ஆனால் இன்றியமையாத மத நடைமுறைச் சோதனை, மத சுதந்திரத்திற்கான உரிமையால் எந்த நடைமுறைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை தீர்மானிக்கப் பயன்படுகிறது. இது நீதிமன்றத்தில்தான் உருவாகியுள்ளது.

உச்ச நீதிமன்றம் 1954 ஆம் ஆண்டில் "ஒரு மதத்தின் இன்றியமையாத பகுதி" என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியது. ஒரு நடைமுறையை அகற்றுவது "மதத்தில் அடிப்படை மாற்றத்தை" ஏற்படுத்தினால், அது அத்தியாவசியமானது என்றும் கூறியது.

"இது மத சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தது. ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மத சமூகங்களால் தீர்மானிக்கப்படும்,"என்று சட்ட அறிஞரும் பேராசிரியருமான தீபா தாஸ் அசெவெடோ கூறுகிறார்.ஆனால் காலப்போக்கில், இந்திய நீதிமன்றங்கள் இந்தக்கோட்பாட்டை எதிர்மறையாக பயன்படுத்தத் தொடங்கின, அதாவது இந்த விஷயங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்துகின்றன.

"எனவே இந்தக்கோட்பாடு ' மத அத்தியாவசியம்' என்பதிலிருந்து 'மதத்திற்கு இன்றியமையாதது' என்று ஆகிவிட்டது," என்று அவர் கூறுகிறார்.

கொடுக்கப்பட்ட நடைமுறை மதம் சார்ந்தது என்ற வாதியின் கூற்றை அமெரிக்கா போன்ற நாடுகளின் நீதிமன்றங்கள் மேலும் விசாரிக்காமல் ஏற்றுக்கொள்கின்றன.

ஆனால் இந்தியாவில் நீதிமன்றங்கள் ஓரளவு தன்னிச்சையாக அந்த முடிவை எடுக்கின்றன என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விருப்பத்தேர்வு சார்ந்தது

2017 ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இஸ்லாத்தில் முத்தலாக்கை(உடனடி விவாகரத்து) தடைசெய்தது. இது மதத்தின் இன்றியமையாத பகுதியாக இல்லை என்றும் ஆகவே அதற்கு எந்தப்பாதுகாப்பும் இல்லை என்றும் கூறியது. 1994 இல், உச்ச நீதிமன்றம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய நிலப்பிரச்னையைத் தீர்த்துவைத்தது. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதற்கு மசூதி "அத்தியாவசியம்" இல்லை என்றும், நமாஸ் அல்லது பிரார்த்தனைகளை எங்கும் செய்யலாம், எனவே, மசூதியைச் சுற்றியுள்ள நிலத்தை இந்துக்களுக்கு வழங்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.

2018 ஆம் ஆண்டில், சபரிமலை கோவிலுக்குள் எல்லா வயது இந்து பெண்களையும் அனுமதிக்க நீதிமன்றம் மீண்டும் 'இன்றியமையாத சோதனையை' பயன்படுத்தியது. வரலாற்று ரீதியாக குறிப்பிட்ட வயது பெண்கள் கோவிலுக்குள் செல்ல தடை இருந்தது. இந்த கட்டுப்பாடு "அத்தியாவசியமான மத நடைமுறை" அல்ல என்று நீதிமன்றம் கூறியது.

2016 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள உயர் நீதிமன்றம் குரானை ஆய்வு செய்து, தலையை மறைப்பது ஒரு மதக் கடமையாக இருக்க வேண்டும் என்றும், எனவே அது இஸ்லாத்திற்கு இன்றியமையாதது என்றும் கூறியது. காப்பி அடிக்க வகை செய்யக்கூடும் என்ற காரணத்திற்காக மருத்துவப் பரீட்சைக்கு ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படாத மாணவிகள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது.

கர்நாடகாவில் உள்ள மனுதாரர்கள் இந்தத் தீர்ப்பைக் குறிப்பிட்டனர். ஆனால் இந்த முறை நீதிமன்றம் அவர்களின் வாதத்தை நிராகரித்தது.

"நீதிமன்றம் சீரற்ற முறையில் சோதனையைப் பயன்படுத்தியது. அத்தியாவசியத்தை தீர்மானிக்கும் முறையை மீண்டும் மீண்டும் மாற்றுகிறது. மத சுதந்திரத்தை இது தீவிரமாக பாதிக்கிறது," என்று சட்ட அறிஞர் ஃபைசன் முஸ்தபா தனது 2017 ஆம் ஆண்டு, Freedom of religion in India என்ற கட்டுரையில் எழுதினார்.

இந்தச் சோதனையானது அரசியல் சாசனத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மதச் சுதந்திரத்தின் நோக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்று அவர் வாதிடுகிறார். மறுபுறம், பின்பற்றுவதற்கு ஒரு நல்ல மாற்றுக் கோட்பாடு என்னவாக இருக்கும் என்று நிபுணர்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

"என்னிடம் இதற்கு எளிமையான பதில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்," என்று திருமதி அசெவெடோ கூறுகிறார். "உண்மை என்னவென்றால், உத்தமமான கோட்பாடு என்று எதுவும் இல்லை. நாம் உருவாக்கும் சட்டங்களும், அவற்றைப் புரிந்துகொண்டு பயன்படுத்துபவர்களும் முடிந்தவரை நியாயமாகவும், தாராளமாகவும் இருப்பார்கள் என்று நாம் நம்புவோம். ஆனால் அது எப்போதுமே நடக்கும் என்று சொல்லமுடியாது. உத்தமமான கோட்பாட்டு நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் என்றும் இதற்கு அர்த்தமல்ல."

விருப்பத்தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் திருமதி ஜான்.

"ஹிஜாப் அணியும் ஒரு பெண்ணின் விருப்பம் நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று சொல்ல நாம் யார்?," என்று அவர் வினவுகிறார். "அத்தியாவசிய சோதனையில் மட்டுமே கவனம் செலுத்தாமல், விருப்பத்தேர்வு வாதத்தையும் நீதிமன்றம் பரிசீலித்திருக்க வேண்டும்."

" சீருடைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அது ஒரே சீராக இருக்க வேண்டும். ஒருவர் நெற்றியில் பொட்டு அணிவதையோ, மணிக்கட்டில் புனித நூல்களை கட்டிக்கொண்டிருப்பதையோ அனுமதிக்க கூடாது. ஒரு வகுப்பினருக்கு மட்டுமே அதை வலியுறுத்தினால், அது பாரபட்சமானது."என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: