தமிழக மேற்கு மண்டல மாநகராட்சி பதவி வேட்பாளர்கள் - ஆச்சரியத்தில் திமுகவினர்

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இந்த நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதிவுகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அந்த வகையில் மேற்கு மாவட்டங்களில் திருப்பூர் துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளையும் சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் மேயர் பதவிகளையும் திமுக வைத்துள்ளது.

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் 40 வயதான கல்பனா ஆனந்தகுமார் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாநகராட்சியின் 19 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முதல் முறை மாமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் மீனா ஜெயக்குமார், இலக்குமி இளஞ்செல்வி மற்றும் நிவேதா சேனாதிபதி ஆகியோர் இருந்ததாக பேசப்பட்டு வந்த நிலையில் கல்பனா மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது திமுகவினர் பலருக்குமே ஆச்சரியமாக உள்ளது. கல்பனா அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்வு என்கின்றனர் கோவை திமுகவினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்வரும் காலங்களில் கோவையை தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில் மேயரும் அவருக்கு சாதகமானவராக இருக்க வேண்டும் என நினைக்கவே தலைமையும் அதற்கு ஒப்புக்கொண்டது. மேலும் முதலில் பேசப்பட்ட மூவரில் ஒருவருக்கு பதவி வழங்கினாலும் கோவை திமுகவுக்குள் தேவையில்லாத சலசலப்பு, அதிகார போட்டி ஏற்படும் என்பதாலும் அதை தவிர்க்கவும் கல்பனா தேர்வு செய்யப்பட்டதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

92வது வார்டு உறுப்பினர் வெற்றிச் செல்வன் துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் முதல் முறை மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 49வது வார்டில் வெற்றி பெற்ற திருப்பூர் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளார் தினேஷ் குமார் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேயர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்த மூவரில் இவருடைய பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரில் அமைச்சர் சாமிநாதனின் ஆதரவு 41வது வார்டில் வெற்றி பெற்ற திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பத்மநாபனுக்கும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் ஆதரவு செந்தூர் முத்துவுக்கும் இருந்து வந்தது. இந்த நிலையில் தினேஷ் குமார் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தினேஷ் குமார் உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் உள்ளூர் தலைமையின் விருப்பம் ஒன்றாக இருந்த நிலையில் திமுக தலைமை அதை தவிர்த்து அதில் இல்லாதவரை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சியின் துணை மேயர் பதவி காங்கிரசுக்கு சென்றுள்ள நிலையில் 77 வயதான ஏ.ராமச்சந்திரன் திமுகவின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மேயர் போட்டியில் முன்னணியிலிருந்த நால்வரில் ராமச்சந்திரனும் ஒருவர் என்பதும் நால்வரில் மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவின் மிக நீண்ட கால செயல்பட்டு வரும் ராமச்சந்திரன் கடந்த 1961-ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார் தற்போது அஸ்தம்பட்டி பகுதி திமுக செயலாளராக உள்ளார்.

சேலம் திமுகவில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவரும் மேலும் அனைத்து தரப்புக்கும் சாதகமானவர் என்பதும் இவர் மேயராக தேர்வு செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி

ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவி இரண்டும் திமுக வைத்துள்ள நிலையில் நாகரத்தினம் மேயராகவும் செல்வராஜ் துணை மேயராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேயர் பதவிக்கான போட்டியில் இருந்த நால்வரில் நாகரத்தினமும் ஒருவர். இவர் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியனின் மனைவி என்பதும் அமைச்சர் முத்துச்சாமியின் ஆதரவு இவருக்கு இருந்ததும் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: