You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவையில் பண ஆசையை தூண்டி ரூ. 300 கோடிவரை மோசடி - என்ன நடந்தது?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவையை மையப்படுத்திய ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் ஒன்று ரூ.300 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவையைச் சேர்ந்த விமல் குமார் என்பவர், Mr. Money என்கிற யூடியூப் சேனலை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வந்தார். இதன் மூலம் அன்னிய செலாவணி, பங்குச் சந்தை, க்ரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பாக கல்வியும், பயிற்சியும் வழங்குவதாக அதில் தெரிவித்துள்ளார். இவரது யூடியூப் சேனலை 1,53,000 பின் தொடர்கின்றனர்.
இதன் மூலம் Mr. Money மற்றும் Alphaforexmarket என்கிற இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய மக்களிடமிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ரூ.300 கோடி வரை வாங்கிவிட்டு உறுதியளித்த லாபத்தையும் முதலீட்டையும் மக்களுக்கு திருப்பி தராமல் ஏமாற்றுவதாக தமிழ்நாடு முழுவதும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தின் காளப்பட்டியில் இயங்கி வந்த விமலின் அலுவலகம் தற்போது மூடப்பட்டிருப்பதாகவும் கடந்த நான்கு மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். விமல் குமாரும் அவருடைய மனைவி ராஜேஷ்வரியும் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மக்களை நேரில் சந்தித்தும் இணையம் மூலமாகவும் விமல் குமார் பணத்தை வசூல் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.
ஏமாற்றப்படும் வாடிக்கையாளர்கள்
Mr. Money என்கிற யூடியூப் சேனல் உடன் விமல் குமார் டெலிகிராமில் Mr. Money (22,532 ஃபாலோயர்ஸ்) மற்றும் Alpha forex market (11,985 ஃபாலோயர்ஸ்) என்கிற இரண்டு சேனல்களை நடத்தி வருகிறார். அதிலும் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
விமல் குமார் பயன்படுத்திய செல்போன் எண்களை தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் வாட்சாப்பில் தொடர்பு கொண்டாலும் அவரிடம் உரிய பதில் வருவதில்லை, சிலரிடம் மிரட்டும் தொனியில் பதில் அளிப்பதாகக் கூறுகிறார் மதுரையைச் சேர்ந்த விஜய் கிருஷ்ணன்.
விமல் குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லையென்றாலும் அவருடைய யூ-ட்யூப் சேனலில் வீடியோக்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு தான் வருகின்றன. மிக சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு விமல் குமார் பேட்டியும் அளித்துள்ளார்.
இவருடைய இரண்டு டெலகிராம் சேனலிலும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், `நான் தற்போது சிறிய பின்னடவைச் சந்தித்து வருகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. விரைவில் இதிலிருந்து மீண்டு என்னிடம் முதலீடு செய்தவர்களை ஏமாற்ற மாட்டேன், என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் முழு வீடியோ ஒன்றை விரைவில் பதிவிடுவேன்` என்றுள்ளார்.
விமல் குமார் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ள மதுரையைச் சேர்ந்த விஜய் கிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், `எனக்கு யூடியூப் மூலம் தான் விமல் அறிமுகம். இவர் ஆல்ஃபா ஃபோரெக்ஸ் மார்க்கெட் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மக்களிடமிருந்து இரண்டு விதமாக பணத்தை வசூல் செய்கிறார். ஆல்பா நிறுவனத்தில் ஃபோரெக்ஸ் கணக்கு தொடங்கி நாமே பணத்தை முதலீடு செய்து டிரேடிங் செய்யலாம், அல்லது நம்முடைய கணக்கை இவர் நிர்வகித்து கொடுப்பார். இரண்டாவது Mr. Money என்கிற திட்டத்தில் பணத்தை செலுத்தலாம்.
இதில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் ரூ.18,000 வீதம் 10 மாதங்களுக்கு தருவதாகக்கூறி மக்களை இணைத்தார். முதல் சில மாதங்கள் முறையாக பணத்தை வழங்கி வந்தார். இதனைப் பார்த்து மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கினார். அதோடு முதலீடு செய்ய புதிதாக நபர்களை பிடித்துக் கொடுத்தால் 2% கமிஷனும் வழங்கி வந்தார். இதனால் பலரும் முதலீடு செய்தும் முதலீடுகளைப் பெற்றும் வழங்கி வந்தனர். மக்களை நேரில் சந்தித்தும் வங்கி கணக்கு மூலமாகவும் பணத்தை பெற்று வந்தார்.
2019-ம் ஆண்டிலிருந்தும் பல தனியார் யூ-ட்யூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து வெளிநாடுகளிலிருந்தும் பலரும் முதலீடு செய்துள்ளனர்.
ஆல்ஃபா திட்டத்தில் ஓர் அளவுக்கு லாபம் பார்க்கத் தொடங்குகிறபோது எங்களுடைய கணக்குகளை முடக்கிவிட்டார். Mr. Money திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு சில மாதங்கள் கழித்து தர வேண்டிய தவனைகளை தரவில்லை. சந்தை தற்போது சரிவில் இருப்பதாகக் கூறி வந்தார். ஆனால் தொடர்ந்து வழங்க வேண்டிய தவனைகளை வழங்காதபோது தான் சந்தேகம் எழுந்தது.
அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள் என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இவருடைய தொடர்பு எண்கள் இணைப்பில் இல்லை. வாட்சாப்பில் செய்தி அனுப்பினாலும் மிரட்டும் தொனியில் பேசுகிறார். கோவை காளப்பட்டியில் உள்ள முகவரியில் இயங்கி வந்த இவருடைய நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இதுநாள் வரை தமிழ்நாடு முழுவதும் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது விமல் தலைமறைவாக உள்ளார். ஆல்ஃபா ஊழல் தொடர்பாக பல மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களிலும் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம்` என்றார்.
சிறு முதலீடுகள் மூலம் 20% மேல் லாபம் பார்க்க முடியாது
இந்தியாவில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட முதலீடு செய்யும் வழிகள் மூலம் சிறு முதலீடுகளுக்கு 20 சதவிகிதத்துக்கு மேல் லாபம் பார்க்க முடியாது. அதற்கும் மேல் யாராவது லாபம் பார்த்து தருகிறேன் என்றால் அது மோசடி தான் என்கிறார் முதலீடு துறையில் அனுபவம் பெற்ற நிதி ஆலோசகர் ராஜேஷ் மூர்த்தி,
`இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள பல வகை திட்டங்களைப் போல நாணய வர்த்தகமும் (Currency trading) ஒன்று. தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு சில நிறுவனங்கள் மூலம் இதைச் செய்யலாம். ஆனால் வெளிநாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதற்கு எந்த உத்திரவாதமும் வழங்க முடியாது.
இது போன்ற அந்நிய செலாவணி முறைகேடுகள் எல்லாம் ஒரே செயல்திட்டத்தை தான் கையாள்கின்றன. இவர்கள் எதிலும் முதலீடு செய்ய மாட்டார்கள். ஒருவரிடம் பணம் பெற்று இன்னொருவருக்கு தவனை வழங்கி வருவார்கள். ஒரு கட்டத்தில் சுழற்சி செய்ய பணம் இல்லாதபோது தவனை வழங்க முடியாமல் போய்விடும். அப்போது தான் இது முறைகேடு என்பதே தெரியவரும். கிட்டத்தட்ட அனைத்து அந்நிய செலாவணி முறைகேடுகளும் இவ்வாறு தான் அரங்கேறுகின்றன.
அங்கீகரிப்படாத முறைகளில் பணம் முதலீடு செய்யப்படுவதால் இதனை மீட்பதும் கடினமாகிறது. மக்கள் தான் தெளிவாக இருக்க வேண்டும். நிதி முதலீடு ஆலோசனை வழங்குபவர்களுக்கு செபி தேர்வு வைத்து அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால் இது கடினமான ஒன்று. இந்தியா முழுவதும் 135 பேர் தான் செபியால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்கள் உள்ளனர். என்னைப் போன்றவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தான் ஆலோசனை வழங்குகிறோம். என்னிடம் 50%, 100% லாபம் வேண்டும் என முதலீடு ஆலோசனை கேட்க வருவார்கள், முடியாது என்று சொல்லிவிடுவேன். இந்தியாவில் சிறு முதலீடுகளுக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் அதிகபட்சம் 20% மேல் லாபம் பார்க்க முடியாது.
நாணய வர்த்தகம் என்பது உதாரணமாக அமெரிக்க டாலரில் முதலீடு செய்கிறோம் என்றால் டாலருக்கும் இந்திய ரூபாய் மதிப்புக்கும் உள்ள ஏற்ற, இறக்கங்களை வைத்து தான் இந்த வர்த்தகம் நடைபெறும். ஆனால் அதில் முன்பு இருந்ததைப் போன்ற நிலையற்ற தன்மை என்பது இல்லை, தற்போது ஓரளவிற்கு சீராகிவிட்டது. எனவே தற்போது உள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தால் நாணய வர்த்தகத்தில் இவர்கள் சொல்கிற லாபம் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. நாணய வர்த்தகங்களை மக்கள் தேர்வு செய்யவே கூடாது` என்றார்.
சிறு சேமிப்பு, நிரந்தர வைப்புத் தொகை போன்ற திட்டங்களுக்கான வட்டிவிகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. இதனால் சம்பளம் பெறுவோர் அல்லது தொழில் செய்வோர் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற இது போன்ற வழிகளை நாடுவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கேள்வியை ராஜேஷ் மூர்த்தியிடம் முன்வைத்தபோது, `அதிக லாபம் வேண்டும் என அங்கீகரிக்கப்படாத திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் பேராசையில் தான் செய்கிறார்கள். சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைந்து கொண்டே வரும் என்பது நாடறிந்த உண்மை.
இந்தியா எப்போது சோசலிச அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பை நோக்கி நகர ஆரம்பித்ததோ அப்போதே சேமிப்புகளுக்கான வட்டி குறையத் தொடங்கியது. மக்களிடம் உள்ள ஆசையை தான் மோசடி செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மோசடி செய்பவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், மோசடி செய்வதற்கும் வழிகள் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் தான் தெளிவாக இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியோ, செபியோ அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் என்னவென்பதையும் அதற்கான வழிமுறைகளையும் தெளிவுபடுத்தியுள்ளன. அவை தவிர்த்து மற்ற வழிகளை நாடக்கூடாது. சரியான முதலீடு என்றால் குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் ஆகும். உடனடி லாபம், கை மேல் லாபம் என்பதெல்லாம் வெளிப்படையான மோசடி தான்` என்றார்.
புகார் மீது நடவடிக்கை என்ன?
கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவின் துணை கண்காணிப்பாளர் பாலகுமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், `ஆல்ஃபா முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தற்போது தான் பணத்தை இழந்தவர்கள் முன்வந்து புகார் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களிலிருந்து புகார் வந்துள்ளது. வழக்குப் பதிவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ள விமல் தலைமறைவாக உள்ளார். உரிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் பணத்தை முதலீடு செய்யும்போது நம்பத்தகுந்த அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள், நிறுவனங்களில் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். அதிக லாபம் எனக் காட்டப்படும் விளம்பரங்களை நம்பி ஏமாறக்கூடாது.` என்றார்.
விமல் குமாரின் தொடர்பு எண்கள் என பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய இரண்டு எண்களை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன.
நிலுவை வழக்குகள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 2020 வரை 13,822 பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்திலும் 11,436 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் நிலுவையில் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 2,892 பொருளாதார குற்ற வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் 56 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்