You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் திமுக நிர்வாகி படுகொலை - இரவில் நடந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் தி.மு.க வட்டச் செயலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். `கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது' என்கின்றனர் போலீஸார். என்ன நடந்தது?
சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். 38 வயதான இவர், பிப்ரவரி 1ஆம் தேதி இரவில் ராஜாஜி நகர் பிரதான சாலையில் உள்ள அலுவலத்தில் தனது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செல்பேசி அழைப்பு வரவே அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் தள்ளி நின்று செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், செல்வத்தை நோக்கி இரு சக்கர வாகனங்களில் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் செல்வத்தை வெட்டிக் கொன்று விட்டு அதே வாகனங்களில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலால் செல்வத்தின் அலறல் கேட்கவே, தி.மு.கவினர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ரத்தம் சொட்டிய நிலையில் செல்வத்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, மடிப்பாக்கம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்தலில் மனைவியை களமிறக்க திட்டம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் செல்வத்தின் மரணம், அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. `இந்த தேர்தலில் 188 ஆவது வார்டில் தனது மனைவியை வேட்பாளராக நிறுத்துவதற்கான வேலைகளில் இறங்கி வந்தார். இதனை விரும்பாத உள்கட்சிக்காரர்களே இதனைச் செய்திருக்கலாம்' எனவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த விவகாரம் குறித்துப் பேசும் மடிப்பாக்கம் தி.மு.கவினரோ, `` மிகவும் குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் செல்வம் வளர்ச்சியடைந்தார். பத்திரப் பதிவு குளறுபடி தொடர்பான சர்ச்சைகளும் அவர் மீது உள்ளது. நிலம் தொடர்பான பிரச்னையில் அவர் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்,'' என்கின்றனர்.
இருப்பினும், செல்வம் படுகொலையால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சம்பவம் நடந்த இடத்தில் பரங்கிமலை போலீஸ் துணை ஆணையர் பிரதீப், உதவி ஆணையர் பிராங் டி ரூபன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கொலையாளிகளைக் பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
செல்வம் படுகொலை தொடர்பாக, மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராங் டி ரூபனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``சம்பவம் நடந்த இடத்தில் ஆறு பேர் வந்து வெட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் யாரையாவது பிடித்தால்தான் காரணம் என்னவென்பது தெரியவரும். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது'' என்று மட்டும் பதில் அளித்தார்.
பிற செய்திகள்:
- உத்தர பிரதேசத்தின் முசாஃபர் நகரில் நீடிக்கும் கலவர தாக்கம் - கள நிலவரம்
- பட்ஜெட் 2022: நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கிறதா?
- "அதிகரிக்கும் சிலிண்டர் விலை; விறகடுப்பில் சமைக்கும் எங்களுக்கு தீர்வு வேண்டும்" - தேர்தல் குறித்து உ.பி கிராமப் பெண்கள்
- பூமியில் நினைத்ததை விட அதிக அளவில் மர இனங்கள் - எந்த நாடு முதலிடம்?
- யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?
- எளிய மக்களுக்கு பயனளிக்காத பட்ஜெட்டா இது? - ஓர் அலசல்
- நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய சிறுவயது கனவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: