ஜனவரி 26 குடியரசு தினம் - முதல் நிகழ்ச்சி எங்கு, எப்படி நடந்தது?

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நளின் செளஹான்
    • பதவி, மூத்த பத்திரிகையாளர்

இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படும் நேரம் இது. ஆனால், நாட்டின் முதலாவது குடியரசு தின விழா டெல்லியில் எங்கு நடத்தப்பட்டது என்று கேட்டால், பலரும் ராஜ்பாத் என்றே பதில் தருவார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி ராஜ்பாத்தில் நடைபெறவில்லை.

இந்தியாவின் முதலாவது குடியரசு தின அணிவகுப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டெல்லி இர்வின் விளையாட்டரங்கில் (இன்றைய தேசிய மைதானம்) நடைபெற்றது. அப்போதைய இர்வின் ஸ்டேடியத்தைச் சுற்றிலும் எல்லைச் சுவர் இல்லாததால், அதன் பின்னால் பழைய கோட்டை தெளிவாகத் தெரிந்தது.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

1950-1954 க்கு இடையில், குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் சில சமயங்களில் இர்வின் ஸ்டேடியம், கிங்ஸ்வே கேம்ப், செங்கோட்டை மற்றும் சில சமயங்களில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றன.

குடியரசு தின அணிவகுப்பு முதன்முறையாக 1955 ஆம் ஆண்டு ராஜ்பாத்தில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டம் இன்றுவரை ராஜ்பாத் பகுதியிலேயே நடைபெறுகிறது.

இந்த பாதையில் குடியரசு தின அணிவகுப்பு எட்டு கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Tara sinha

படக்குறிப்பு, சீன பிரதமருடன் இந்தியாவின் முதலாவது குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்

குடியரசு தலைவர் மாளிகை அமைந்த ரெய்ஸ்னா ஹில் பகுதியில் இருந்து விழா நடைபெறும் ராஜ்பாத், இந்தியா கேட் வழியாக செங்கோட்டையில் அணிவகுப்பு முடிவடைகிறது.

இந்திய தேசிய சுதந்திர இயக்கம் முதல் நாட்டில் அரசியலமைப்பு அமலாக்கம் வரை, ஜனவரி 26 தேதி அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்த நாளில், ஜவாஹர் லால் நேரு தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில், 1930ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்குள் ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கவில்லை என்றால், இந்தியாவுக்கு முழு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என்று ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியரசு தினம்

பட மூலாதாரம், photodivision.gov.in

ஆனால், அந்த தீர்மானம் மீது ஆங்கிலேய நிர்வாகம் கவனம் செலுத்தாத நிலையில், 1929ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் முழு சுதந்திரம் என்ற முடிவை அறிவித்து தீவிர இயக்கத்தை காங்கிரஸ் முன்னெடுத்தது.

அதைத்தொடர்ந்து லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இதுமட்டுமின்றி, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி பூர்ண ஸ்வராஜ் தினமாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த வழியில், சுதந்திரத்திற்கு முன்பே ஜனவரி 26 நாட்டின் சுதந்திர தினமாக மாறிவிட்டது.

அதனால்தான் அன்று முதல் 1947இல் சுதந்திரம் அடையும் வரை ஜனவரி 26ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டது.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

1950ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி, ஜனவரி 26ஆம் தேதி காலை 10.18 மணிக்கு இந்தியாவை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்தார்.

பின்னர் ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். அப்போதைய அரசு மாளிகை மற்றும் இன்றைய ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் அரங்கில் அவர் பதவியேற்ற பிறகு, 10:30 மணிக்கு ராஜேந்திர பிரசாதுக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

அந்த பாரம்பரியம் 70களை கடந்து இன்றும் பராமரிக்கப்படுகிறது.

குடியரசு தினம்

பட மூலாதாரம், RAVEENDRAN/Getty Images

பிற்பகல் 2.30 மணியளவில் அரசு மாளிகையில் இருந்து இர்வின் மைதானத்திற்கு குடியரசு தலைவரின் வாகனம் புறப்பட்டது.

அந்த வாகனம் டெல்லி கன்னாட் பிளேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சுற்றி மாலை 4.45 மணியளவில் வீர வணக்க மேடையை அடைந்தது. பின்னர் ராஜேந்திர பிரசாத் ஆறு ஆஸ்திரேலிய குதிரைகள் பூட்டிய சாரட் அலங்கார வாகனத்தில் ஏறினார்.

அந்த காலத்தில் இர்வின் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முக்கிய குடியரசு அணிவகுப்பைக் காண 15 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

அந்த வகையில், நவீன குடியரசின் முதல் குடியரசு தலைவர் இர்வின் மைதானத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அப்போது நடைபெற்ற அணிவகுப்பில் முப்படை வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பில், கடற்படை, காலாட்படை, குதிரைப்படை, சர்வீசஸ் ரெஜிமென்ட் தவிர, ராணுவத்தின் ஏழு அமிகள் பங்கேற்றன. இன்றும் இந்த வரலாற்று பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Reuters

முதல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர் யார்?

முதல் குடியரசு தின விழாவில் இந்தோனீசிய அதிபர் சுகர்னோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதுமட்டுமின்றி, முதன்முறையாக இந்த நாளில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாட்டினரின் அதிக பங்கேற்பிற்காக, 1951 ஆம் ஆண்டு முதல், கிங்ஸ்-வேயில் (இன்றைய ராஜ்பாத்) குடியரசு தின விழா தொடங்கியது.

"சைனிக் நியூஸ்" இதழின் பழைய பதிப்பின்படி, 1951ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் முதல் முறையாக, துணிச்சலான நான்கு வீரர்களுக்கு அவர்களின் அசாத்திய துணிச்சலுக்காக மிக உயர்ந்த பதக்கமான பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது.அந்த ஆண்டு முதல் காலையில் தொடங்கிய அணிவகுப்பு, கோல் மார்க்கெட் அஞ்சலக சந்திப்பில் நிறைவடைந்தது.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1961ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அணிவகுப்பில் நடனமாடும் பள்ளி குழந்தைகள்

பீட்டிங் ரிட்ரீட் திட்டம் (பாசறைக்கு திரும்புதல் நிகழ்வு) 1952ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அதன் ஒரு விழா ரீகல் திரையரங்கின் முன் மைதானத்திலும் மற்றொன்று செங்கோட்டையிலும் நடந்தது.

முதல் முறையாக, ராணுவ இசைக்குழு மகாத்மா காந்தியின் விருப்பமான 'என்னுடன் இருங்கள்' என்ற பாடல் மெட்டுக்கு இசைத்தது, அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் அதே மெட்டு இசைக்கப்பட்டது.

1953இல் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் நாட்டுப்புற நடனம் மற்றும் வாண வேடிக்கை சேர்க்கப்பட்டது. இதையொட்டி ராம்லீலா மைதானத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

அதே ஆண்டில், திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் NEFA (இப்போது அருணாச்சலப் பிரதேசம்) பழங்குடி சமூகங்களின் குடிமக்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்றனர்.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

1955 ஆம் ஆண்டில், டெல்லியின் செங்கோட்டையின் திவான்-இ-ஆமில் குடியரசு தினத்தன்று முஷாயிரா பாரம்பரியம் (புலவர்களால் பாடல் இசைக்கும் நிகழ்வு) தொடங்கியது. பின்னர் முஷாயிரா 10 பத்து மணிக்கு நடந்தது. அடுத்த ஆண்டில், 14 மொழிகளின் கவி சம்மேளனம் முதல் முறையாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

1956இல் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் ஐந்து அலங்கரிக்கப்பட்ட யானைகள் பங்கேற்றன.

விமானத்தின் சத்தத்தால் யானைகள் பயந்து நடுங்குமோ என்ற அச்சத்தை மனதில் கொண்டு ராணுவ அணிவகுப்பு முடிந்து நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் அணிவகுப்பு பாதையில் வருவதற்கு முன்பே யானைகள் கொண்டு வரப்பட்டன. அப்போது யானைகள் மீது ஷெனாய் கலைஞர்கள் அமர்ந்திருந்தனர்.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

1958 ஆம் ஆண்டு முதல் தலைநகரின் அரசு கட்டடங்களில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

1959ஆம் ஆண்டு முதல் முறையாக குடியரசு தின விழாவில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பார்வையாளர்கள் மீது மலர் மழை பொழிந்தது.

1960ஆம் ஆண்டில், அணிவகுப்பில் முதல் முறையாக, துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள் யானை தெப்பத்தில் அமர வைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்கச் செய்து கெளரவிக்கப்பட்டனர். ஆனால், இதற்கு முன்பே இந்த வகை சிறார்களை கெளரவிக்கும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருந்தது.

அந்த ஆண்டு, தலைநகரில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களை சுமார் 20 லட்சம் பேர் பார்த்தனர், அதில் ஐந்து லட்சம் பேர் ராஜ்பாத் பகுதின் இரு புறங்களிலும் கூடினர்.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

குடியரசு தின அணிவகுப்பு மற்றும் பீட்டிங் ரிட்ரீட் விழாவைக் காண டிக்கெட் விற்பனை செய்யும் நடைமுறை, 1962ஆம் ஆண்டு தொடங்கியது.

அந்த ஆண்டு, குடியரசு தின அணிவகுப்பின் நீளம் ஆறு மைல்களாக மாறியது, அதாவது அணிவகுப்பின் முதல் குழு செங்கோட்டையை அடைந்தபோது, ​​​​கடைசி குழு இந்தியா கேட்டில் இருந்தது. அதே ஆண்டில் இந்தியா மீதான சீனா தாக்குதலால் அணிவகுப்பின் அளவு அடுத்த ஆண்டு குறைக்கப்பட்டது.

1973ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக இந்தியா கேட்டில் அமைந்துள்ள அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: