தமிழ்நாட்டில் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை கட்டாயம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, யாரெல்லாம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், யாரெல்லாம் வீட்டுத்தனிமையை நிறைவு செய்துகொள்ள வேண்டும் எனவும் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.
காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லாமலும், அறிகுறிகள் தெரிந்து அல்லது கொரோனா உறுதி செய்யப்பட்டு ஏழு நாட்கள் முடிவுற்று எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் இருந்தால் வீட்டு தனிமையை நிறைவு செய்து கொள்ளலாம். கொரோனா சிகிச்சை மையங்களில் இருந்தும் வீடு திரும்பலாம்.
வீட்டுத் தனிமையை நிறைவு செய்தவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தினத்தந்தி செய்தி கூறுகிறது.
இந்தியாவில் கொரோனா: 5-10% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை
தற்போது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 5-10% பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் காட்டுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா சூழ்நிலை விரைவாக மாறி வருவதால், மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு கொரோனா இரண்டாம் அலை வந்தபோது பாதிக்கப்பட்டவர்களில் 20-23% பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது என்று மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேச நிர்வாகங்களுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நரேந்திர மோதி பஞ்சாப் பயணம் - உச்ச நீதிமன்றம் புதிய முடிவு

பட மூலாதாரம், Ani
பிரதமா் நரேந்திர மோதி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடா்பாக குழு அமைத்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் மத்திய, மாநில அரசுக் குழுக்களின் விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிற செய்திகள்:
- ஏழை நாடுகளை தனது கடன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?
- மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
- இந்தியாவில் பூதாகரமாக உருவெடுக்கும் வேலை இல்லா திண்டாட்டம் - தப்பிக்க வழி என்ன?
- கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டபய வைத்த கோரிக்கை
- "நரகத்தின் நுழைவாயிலை" மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












