You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹேக் செய்யப்பட்ட பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட பிரபலமான யூடியூப் சேனல்கள் சமீபத்தில் முடக்கப்பட்டன. இதற்கு என்ன காரணம்? பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நம்முடைய சமூக வலைதள கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை எப்படிப் பாதுகாப்பாக கையாள்வது என்று விளக்குகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் வினோத் ஆறுமுகம்.
தமிழகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய சேனல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம்?
பிரபலமான சேனல்களை ஹேக் செய்வது ஒரு புறம் இருக்க, அதை வைத்து ஹேக்கர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம். ஹேக் செய்யப்பட்ட சேனல்களில் கிரிப்டோ பற்றி நேரலை வீடியோவை ஒளிபரப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கிரிப்டோ ப்ராண்டை விளம்பரம் செய்ய இந்த சேனல்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
நேற்று அந்த சேனல்களில் 3,200 நபர்கள் ஒரே சமயத்தில் நேரலையில் இருந்தனர். மக்களுக்கு ஹேக்கிங் குறித்து அந்த சமயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாதா?
அந்த சமயத்தில் கண்டிப்பாக முடியாது. ஆனால் குறிப்பிட்ட அந்த சேனல்களின் உரிமையாளர்கள் மற்றொரு சமூக வலைதளங்கள் மற்றும் நண்பர்களின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து பார்வையாளர்களுக்கு நாங்கள் அந்த பொருட்களை விளம்பரம் செய்யவில்லை என்று குறிப்பிட முடியும். ஒருவேளை முன்னரே ஹேக் செய்யாமல் இருக்க வழிமுறைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அல்லது யூடியூப் நிறுவனத்திற்கு தெரிவித்து விட்டு அடுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். ஆனால் அதற்கும் நேரமாகும்.
ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்ட சேனல்களை முடக்கும் இவர்கள் தனிநபரா அல்லது குழுவாக செயல்படுகிறார்களா?
ஹேக்கர்கள் தனிநபராகவோ, குழுவாகவோ இருக்கலாம். அல்லது கட்சி சார்ந்த தகவல் தொழில் நுட்பக் குழுவாகவும் இருக்கலாம். நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது அது ஒரு குழுவாக இருக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில் அவர்கள் பொருட்களைத்தான் விளம்பரம் செய்தார்கள்.
அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட சேனலை முடக்கும்போது அதை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
நேற்று ஹேக்கிங் நடந்த சேனல்களில் திடீரென்று நடந்த செயல்பாடுகளைப் பார்த்து யூடியூப் தளமே அதன் அல்கோரிதம் அடிப்படையில் சேனல்களை முடக்கியிருக்கிறது. திடீரென சேனல்களில் வீடியோக்கள் நீக்கப்படும்போது, தலைப்புகள் மாறும்போது யூடியூப் அதற்குரிய தரவுகளைக் கொண்டு சேனல்களை முடக்கி விடும். நீங்கள் உங்கள் விவரங்களை முழுமையாக யூடியூபிடம் கொடுத்து சேனலை மீட்க முடியும்.
இரண்டாவதாக உங்களுடைய சேனல்களில் பொருட்களை விளம்பரம் செய்கிறோம் என்று சொல்லி பொறுமையாக உங்களிடம் பேசி பேசி ஹேக் செய்வார்கள். ஆனால் அது நமக்கு தெரியாது. Social engineering-படி அனைத்து தரவுகளையும் சரியாகப் பயன்படுத்தி உங்கள் சேனலை முடக்கினால் அதைத் திரும்ப பெறுவது மிகவும் கடினம்.
ஹேக்கிங் நடந்த சேனல்கள் அனைத்துக்கும் மில்லியன் கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் இருப்பதால் இரண்டடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருந்திருக்கும். இருந்தும் எப்படி ஹேக் செய்யப்படுகிறது?
இதை ஃபிஷ்ஷிங் என்று சொல்வோம். உங்கள் செயல்பாடுகளைக் கணித்து நீங்கள் லிங்கை க்ளிக் செய்யும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். நேற்று ஹேக் செய்யப்பட்ட 4 சேனல் தரப்பில் நான் பேசிய வரையில் யூடியூபில் இருந்து ஒரு படிவம் வந்ததாகவும் அதை அவர்கள் நிரப்பியதாகவும் சொல்கிறார்கள். முழுமையான சைபர் தடயவியல் அறிக்கை வரும் வரை எதையும் நாம் முழுமையாகக் கணிக்க முடியாது.
புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்து மெயில் வரும்போது அதை முழுமையாக நம்புவது எப்படி?
நீங்கள் எந்த நிறுவனம் வைத்திருந்தாலும் இன்று அனைவரும் டிஜிட்டலில் இருப்பதால் உங்கள் நிறுவனத்தற்கு சைபர் செக்யூரிட்டி பிரதிநிதி இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான செயலிகள் சிலவற்றைக் கொடுப்பார்கள். அதைக் கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு வந்திருக்கும் மெயில்கள், இணைப்புகள் போன்றவற்றில் வைரஸ் இருக்கிறதா அல்லது நன்றாக இருக்கிறதா என்பதை அறியமுடியும்.
நீங்கள் தொழில்முறை யூடியூப் சேனல்கள் தொடங்குவதாக இருந்தால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது, தொழில்முறை சைபர் பாதுகாப்பு ஆலோசகரிடத்தில் ஆலோசனை பெறுவதுதான்.
சமூக வலைதள கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி?
அனைத்து சமூக வலைதள கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் விவரங்களை உங்கள் கணினியில் மட்டுமே வைக்காதீர்கள். ஏதாவது ஒரு நோட்டில் ''உங்கள் கைகளில் கணக்கு விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டுகளை எழுதி அதை பாதுகாப்பாக'' வைக்கவும்.
அதேபோல் பாதுகாப்பு கேள்விகளையும் நோட்டில் எழுதி வைக்கவும். ஒருவேளை உங்கள் கணினியையும் ஹேக் செய்துவிட்டால் நீங்கள் கையால் எழுதி வைத்த விவரங்களைக் கொண்டு உங்கள் கணக்குகளை விரைவாக மீட்கமுடியும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்