"சூரிய நமஸ்காரம் முஸ்லிம் தனி நபர் சட்டத்திற்கு எதிரானது" - வெளியேறிய மாணவர் கருத்து

சூரிய நமஸ்காரம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய சுதந்தரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் நடத்துவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரை மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் நடத்த மத்திய அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சுதந்தரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடப்படுகிறது.

'இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்' என, 'சூரிய நமஸ்காரம்' தொடர்பான உத்தரவுக்கு, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மௌலானா காலித் சைபுல்லா ரஹ்மானி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

என்ன அறிவிப்பு?

இந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா ஒரு மதசார்பற்ற, பல மதங்கள் மற்றும் பல கலாசாரங்களை உள்ளடக்கிய நாடு. இந்த கொள்கைகளின் அடிப்படையில்தான் நமது அரசியலமைப்பு எழுதப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

"அரசியலமைப்பு சட்டம் குறிப்பிட்ட மதம் சார்ந்த எந்த ஒரு விஷயத்தையும் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கவோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கையின் அடிப்படையில் விழாக்களை நடத்தவோ அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போதைய அரசு இந்தக் கொள்கையிலிருந்து விலகி, இந்த முயற்சியில் இறங்கியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. நாட்டின் பெரும்பான்மை பிரிவினரின் சிந்தனை மற்றும் பாரம்பரியத்தை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் மீதும் திணிக்கும் முயற்சி இது."

சூரிய நமஸ்காரம்

பட மூலாதாரம், TWITTER/@AIMPLB_OFFICIAL

"இந்திய அரசின் கல்வி அமைச்சகம், 75வது சுதந்தர தினத்தை முன்னிட்டு 30 மாநிலங்களில் சூரிய நமஸ்காரம் திட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது, இதில் முதல் கட்டமாக 30 ஆயிரம் பள்ளிகளில் ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை இந்த திட்டம் முன்மொழியப்பட்டது மற்றும் ஜனவரி 26 அன்று சூர்ய நமஸ்காரம் குறித்த ஒரு இசை நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது," இவ்வாறு அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

'நாட்டின் பிரச்னைகளை அரசு கவனிக்கட்டும்'

மேலும் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிச்சயமாக இது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்; தேசபக்தியின் தவறான பிரச்சாரம். சூரிய நமஸ்காரம் என்பது சூரிய வழிபாட்டின் ஒரு வடிவம். இஸ்லாம் மற்றும் நாட்டின் பிற சிறுபான்மையினர் சூரியனை தெய்வமாக கருதுவதில்லை. தவிர இந்த வழிபாட்டை அனுமதிப்பதில்லை. எனவே இத்தகைய அறிவுறுத்தல்களைத் திரும்பப் பெறுவதும், நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு மதிப்பளிப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"தேசத்தின் மீதான அன்பை வளர்க்கும் வகையில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று அரசாங்கம் விரும்பினால், நாட்டை நேசிக்கும் உரிமையை அரசாங்கம் செலுத்த விரும்பினால், உண்மையான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்று வாரியம் கூறியுள்ளது.

"நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து, பணவீக்கம், பணமதிப்பிழப்பு, வெறுப்புப் பிரச்சாரம், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கத் தவறியது, பொதுச் சொத்துகளைத் தொடர்ந்து விற்பனை செய்வது ஆகியவை அரசாங்கத்தால் கவனிக்கப்பட வேண்டிய உண்மையான பிரச்னைகளாகும்," என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

சூரிய நமஸ்காரம் குறித்த சர்ச்சை

சூரிய நமஸ்காரம்

பட மூலாதாரம், Getty Images

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளிதழின்படி, சமீபத்தில் கர்நாடக அரசு, கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 'சூரிய நமஸ்காரம்' தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டது. இது அரசின் 'காவிமயமாக்கல்' திட்டத்தின் ஒரு பகுதியே என்று பல அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளிகளில் காலை வழிபாட்டின் போது, 'சூரிய நமஸ்காரம்' நடத்தவும், அதில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதலில், கல்லூரிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தச் சுற்றறிக்கை, பின்னர், பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள பொது சூரிய நமஸ்கார நிகழ்ச்சிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி, சூரிய நமஸ்காரம் என்ற நிகழ்ச்சியை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் 7.5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக கர்நாடகாவில் பலர் இந்த திட்டத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் எதிர்வினை

முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் அறிக்கை வெளியானதும், சமூக வலைதளங்களில் சூரிய நமஸ்காரம் பற்றிய விவாதம் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யோகா மற்றும் பிராணாயாமம்

பட மூலாதாரம், AFP

ஸ்வாமி கோவிந்த தேவ் கிரி ட்விட்டரில், "உடற்பயிற்சி, யோகா மற்றும் பிராணாயாமம் ஆகியவற்றின் பலன்கள் சூரிய நமஸ்காரத்தில் ஒன்றாகப் பெறப்படுகின்றன. இதுபோன்ற அழகான செயல்முறையைப் புறக்கணிப்பது தனக்கும் தனது சகோதர சகோதரிகளுக்கும் தீங்கு விளைவிப்பதற்கு ஒப்பாகும். விஷயம் தெரிந்தவர்கள் இந்த எதிர்ப்புப் பிரசாரத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளட்டும்" என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால், சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பதன் மூலம், சில உலேமாக்கள் இந்திய முஸ்லிம்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, இஸ்லாத்தின் உலகளாவிய பார்வையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

சூரிய நமஸ்காரம் என்பது என்ன?

சூரிய நமஸ்காரம் என்பது உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு யோகாசனமாகும்.

யோகா ஆசிரியர்களின் கூற்றுப்படி, சூரிய நமஸ்காரத்தில் 12 யோகா ஆசனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆசனத்துக்கும் தனித்தனி முக்கியத்துவம் உள்ளது.

இது செரிமான அமைப்பை மேம்படுத்துவதாக யோகா நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொப்பையை குறைக்கவும், உடலை நெகிழ்வாக வைக்கவும் உதவுகிறது.

இதை சூரிய வழிபாட்டுடன் இணைப்பதால் தான் கருத்துகளில் மோதல் ஏற்படுகிறது.

'யோகா லண்டன்' இணை நிறுவனர் ரெபேக்கா பிரெஞ்ச், "இது சற்று மதம் சார்ந்த விஷயம் தான் என்றாலும் அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. மண்டியிட்டு வணங்குதல் என்பது வழிபாட்டுடன் தொடர்புடையதன்று என்று எண்ணிக்கொண்டால் சிக்கலில்லை," என்று கருதுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: