2022-ல் பகுத்தறிவோடு வாழ்வதற்கான மூன்று வழிகள் இதோ

    • எழுதியவர், பேராசிரியர் ஸ்டீவன் பிங்கர்
    • பதவி, ஹார்வர்டு பல்கலைக்கழகம்

பலரும் புத்தாண்டை வாழ்வின் பகுத்தறிவு நிறைந்த, தம் நலன்களுக்காகச் செயல்படக்கூடிய ஒரு புதிய பக்கத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பாகக் கருதுகிறார்கள். இருப்பினும்கூட, இது நாம் நினைப்பதைவிடக் கடினமானது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு நிறைந்த புதிய பக்கத்தை வாழ்வில் தொடங்க நினைப்பவர்கள், பகுத்தறிவற்ற விஷயங்கள் என்ன, அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைத் தெரிந்துகொள்ள மூன்று உதாரணங்களை நான் இங்கு கொடுத்துள்ளேன்.

1. சின்னச் சின்ன மகிழ்ச்சிகளைத் தியாகம் செய்தாக வேண்டுமா?

மக்கள் தாங்கள் என்ன "சிந்திக்கிறார்கள்" என்பதையும் எதை "உணருகிறார்கள்" என்பதையும் வேறுபடுத்திக் காட்டும்போது, பெரும்பாலும் அவர்கள் மனதில் உடனடியாகக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் நீண்டகால மகிழ்ச்சிக்குமான வேறுபாடாகத்தான் அது இருக்கும். உதாரணமாக, இப்போது ஒரு விருந்து உணவு சாப்பிடவேண்டும், அதேநேரம் நாளை ஒல்லியாகவும் இருக்கவேண்டும்; இன்று ஓர் ஆபரணம் வாங்கவேண்டும், அதேநேரம் நாளை வாடகை செலுத்தப் போதுமான நிதி கையிருப்பில் இருக்கவும் வேண்டும்; இன்றைய இரவை மகிழ்ச்சியாகக் கழிக்கவேண்டும், அதேநேரம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு வரக்கூடிய வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கவேண்டும்.

ஒரு நபரே, தொலைக்காட்சி தொடரை ரசிக்கவேண்டும் என்ற ஆசையுள்ள ஒருவராகவும் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்ற அக்கறையுடைய ஒருவராகவும் இரண்டு வேறுபட்ட எண்ணங்களோடு இருப்பார். நமக்குள் இந்த இரண்டுக்கும் இடையிலான போராட்டம் நடப்பதை அனைவருமே உணர்ந்திருப்போம்.

இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது. நம்முடைய எதிர்கால நலனுக்காக நாம் இன்றைய சின்னச் சின்ன மகிழ்ச்சிகளைத் தியாகம் செய்தாக வேண்டுமா?

இதற்குப் பதில் கண்டிப்பாக தியாகம் செய்தாக வேண்டியது இல்லை என்பதுதான். பொருளாதார வல்லுநர்கள் அழைப்பதைப் போல், "எதிர்காலத்தைத் தள்ளுபடி செய்வது," என்பதே ஓரளவுக்குப் பகுத்தறிவுள்ள செயலாக உள்ளது. அதனால் தான், பின்னர் மாற்றாகக் கொடுக்கப்போகும் பணத்திற்கு ஈடாக, இப்போது கொடுத்த பணத்தை ஈடுசெய்ய வங்கியின் வட்டியை வலியுறுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவேளை இறந்துவிட்டால், நிகழ்காலத்தில் செய்யும் தியாகம் ஒன்றுக்கும் பயன் கிடைக்காமல் போய்விடும். வாகனங்களின் பம்பர்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கரில் சொல்வதைப் போல், "வாழ்க்கை சிறியது. முதலில் மகிழ்ச்சியான விஷயங்களைச் செய்யுங்கள்."

ஒருவேளை ஓய்வூதிய நிதி இல்லாமல் போவதைப் போல, வாக்குறுதி அளிக்கப்பட்ட பலன் எதிர்காலத்தில் கிடைக்காமலே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் ஒருமுறை மட்டுமே இளமையாக இருக்கிறீர்கள். விலை உயர்ந்த ஒன்றை வாங்குவதற்காக பல்லாண்டுக் காலம் சேமித்து வைத்து, ஒலிகளில் உள்ள வேறுபாட்டைக் கண்டறிய முடியாத அளவுக்கு வயதான பிறகு அதை வாங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை.

எனவே, நமது பிரச்னை எதிர்காலத்தை நாம் தள்ளுபடி செய்வதி இல்லை. அதற்கு மாறாக, அதை மொத்தமாக ஒதுக்கிவிடுவதுதான் பிரச்னை. இன்னும் சில ஆண்டுகளில் இறந்துவிடுவதைப் போல, சாப்பிட்டு, குடித்து, மகிழ்ச்சியாக இருக்கிறோம். எதிர்காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்கவேண்டும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதேநேரம் இப்போதுள்ள பணத்தை எதற்காவது செலவு செய்தாக வேண்டும் என்ற ஆர்வமும் உந்துகிறது.

ஒரு சிறிய வெகுமதியை இப்போது விரும்பும் மனநிலைக்கும் பின்னாளில் பெரிய வெகுமதியை விரும்பும் மற்றொறு மனநிலைக்கும் இடையிலான போராட்டம், மனித மனநிலையில் பிணைக்கப்பட்டுள்ளது. கலையும் புராணங்களும் நீண்ட காலமாக இதை வைத்து விளையாடுகின்றன. ஏவால் ஆப்பிளை சாப்பிட்டால், அவளும் ஆதாமும் சொர்க்கத்தில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்று கடவுள் எச்சரித்த போதிலும் சரி, ஈசாப் பழங்கதையின் வெட்டுக்கிளி, எறும்பு உணவைச் சேமித்து வைக்கும் வேளையில் தனது கோடைக்காலத்தை பாடிக் கழித்துவிட்டு, குளிர்காலத்தில் பசியோடு வாடிய கதையும் சரி இரண்டும் அதையே காட்டுகின்றன.

ஆனால், புராணங்கள் சுயக்கட்டுப்பாட்டின் ஒரு பிரபலமான உத்தியையும் செயல்படுத்தியுள்ளன. ஒடிசியஸ் தன்னை பாய்மரத்தில் கட்டிக்கொண்டதன் மூலம், கடல் மோகினிகளின் கவர்ச்சிகரமான பாடலால் ஈர்க்கப்பட்டு தனது கப்பலை பாறை மீது செலுத்துவதைத் தடுக்க முயன்றார். அதேபோலத்தான், நம்முடைய தற்போதைய சுயம் அதன் விருப்பங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்கால சுயத்தின் மனநிலையை விஞ்சிவிடுகிறது.

பசி எடுக்கும்போது அதிகமாகச் சாப்பிட்டு விடாமல் இருப்பதற்காக, நாம் இனிப்புகளைத் தூக்கியெறிந்து விடலாம். ஒரு வேலையைச் செய்யும்போது, ஓய்வூதியத்திற்காக சம்பளத்தில் ஒரு பாகத்தைக் கொடுக்க முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குகிறோம். அதனால் மாதக் கடைசியில் எந்த உபரியும் இருக்காது.

நம்முடைய மன உறுதியின் வலிமையை நம்பாமல், சோதனையைச் சமாளிக்க நாம் காரணங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழிதான் இது.

2. வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு

ஹேம்லெட் (ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் டென்மார்க் இளவரசர் கதாபாத்திரம்) மட்டும் "மேகங்களில்" விஷயங்களைப் பார்க்க வானத்தைப் பார்ப்பவர் அல்ல. அது நம் இனத்திற்கான ஒரு பொழுது போக்கு. நாம் அனுபவத்தின் பல்வண்ணக் காட்சிக் கருவியில் வடிவங்களைத் தேடுகிறோம். ஏனெனில், அவை நமக்குத் தேவையான ஒரு மறைக்கப்பட்டிருக்கும் காரணம் அல்லது அறிகுறியாக இருக்கலாம். ஆனால், அது இடையூறான ஓசைக்கு நடுவே போலியான காரணங்களை மாயையில் சிந்திக்கும் அளவுக்கு நம்மைப் பலவீனமானவர்களாக ஆக்குகிறது.

நிகழ்வுகள் சீரற்று நிகழும்போது, அவற்றை வேறுபடுத்திக் காட்டக்கூடிய சில சீரான செயல்முறைகள் இல்லாதபட்சத்தில், அவை தவிர்க்க முடியாமல் நம் மனதில் மொத்தமாகப் பதிந்துவிடும். எனவே, வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனுபவிக்கும்போது, கெட்ட காரியங்கள் நடக்கும்போது மோசமான சகுணத்தில் பிறந்ததாகவும் கடவுள் நம் நம்பிக்கையைச் சோதிக்கிறார் என்றும் நினைக்கத் தொடங்குகிறோம்.

"சீரற்ற தன்மை" என்ற கருத்தில் தான் அபாயம் உள்ளது. உண்மையில் அது இரண்டு கருத்துகளாக உள்ளன.

சீரற்ற தன்மை என்பது ஒரு புரட்சி சார்ந்த செயல்முறையைக் குறிக்கலாம். இது ஒன்றைச் சாதிப்பதற்காக எடுக்கும் ஆபத்தான முயற்சி அல்லது ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு முடிவு எடுப்பதைப் போன்றது.

உதாரணமாக, ஒரு நாணயத்தைச் சுண்டிவிடும்போது, "பூக்கள், தலை, தலை, பூ, தலை, பூ" என்று வந்தால் சீரற்றதாகத் தெரிகிறது. அதேநேரத்தில், "தலை, தலை, தலை, பூ, பூ, பூ," என்று வந்தால் அப்படித் தெரிவதில்லை. ஆனால், இரண்டாவது வகையில் "மூன்று தலைகள், மூன்று பூக்கள்" என சீராகச் சுருக்கிவிடலாம் என்பதால் அல்ல.

சுண்டிவிடும் நாணயத்தின் ஒவ்வொரு வரிசையும் சமமான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், இரண்டாவது வகை குறைவாக இருக்கும் என்று மக்கள் தீர்மானிக்கிறார்கள். நெடுநேரத்திற்குப் பிறகு, நாணயத்தில் பூ விழுந்துள்ளது என்று கூட அவர்கள் பந்தயம் கட்டலாம். அது ஒரு நினைவாற்றல் மற்றும் நியாயமானதாக இருக்கவேண்டுமென்ற ஆசை. பிரபலமடையாத சூதாட்டக்காரர்களுடைய தவறு இது.

நாம் அடிக்கடிப் பாராட்டத் தவறுவது என்னவெனில், ஒரு சீரற்ற செயல்முறை சீரான தரவுகளை உருவாக்க முடியும். உண்மையில், முழு நேரத்தையும் எடுத்துக்கொண்டால் அவை அவ்வாறு செய்யக்கூடும் என்பது உறுதி. தற்செயல் நிகழ்வுகளால் நாம் ஈர்க்கப்படுகிறோம். ஏனெனில், தற்செயல் நிகழ்வுகளுக்கு எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை மறந்துவிடுகிறோம்.

உதாரணமாக, நீங்கள் 24 விருந்தினர்களுடன் ஒரு விருந்தில் இருக்கிறீர்கள். அங்குள்ள இரண்டு பேர் பிறந்தநாளை ஒரே நாளில் கொண்டாடுவதற்கான வாய்ப்பு எந்தளவுக்கு உள்ளது?

50-க்கு 50 என்ற அளவில் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதுவே, 60 விருந்தினர்கள் இருந்தால், அங்கு அதற்கான சாத்தியக்கூறுகள் 99% உள்ளன.

இது நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஏனெனில், ஏதோவொரு விருந்தினர் உங்களோடோ அல்லது கூட்டத்தில் உள்ள மற்றவருடனோ பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறோம். ஆனால், நாம் மறந்துவிடுவது என்னவெனில், எத்தனை பிறந்தநாட்கள் உள்ளன. ஒரு சில ஆண்டுகளில் மட்டும் 366. இதர ஆண்டுகளில் 365. அதைப் பொறுத்து, தற்செயல் நிகழ்வுகளுக்கான வாய்ப்புகளின் விகிதமும் இருக்கும்.

இந்த சாத்தியக்கூறுகளால் வாழ்க்கை நிறைவுகிறது. நமக்கு முன்னால் செல்லும் காருடைய லைசென்ஸ் ப்ளேட் எண், நம்முடைய கைபேசி எண்ணின் ஒரு பகுதியை பின்னோக்கி எழுதலாம். ஒருவேளை ஒரு கனவு அல்லது முன்னறிவிப்பு நனவாகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தகைய கோடிக்கணக்கான விஷயங்கள் ஒவ்வொரு நாளும் மக்களின் மனதில் மிதக்கின்றன.

தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளை உண்மையிலிருந்து நாம் தனிமைப்படுத்தும்போது, தற்செயல் நிகழ்வுகளை மிகையாகப் புரிந்துகொள்ளும் ஆபத்து நிகழ்கிறது. அனைவரும் மறந்துவிட்டதாகக் கருதப்படும் தவறான கணிப்புகள் அடங்கிய நீண்ட பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சரியான கணிப்பைப் பற்றிக் கூக்குரலிடும் வருவதை உரைப்பதாகச் சொல்லக்கூடிய ஒருவரைப் போல, அது இருக்கும். இதை இப்படியும் சொல்லலாம்- சுவரில் தோட்டாவைச் சுட்டுவிட்டு, பின்னர் சுடப்பட்ட இடத்தைச் சுற்றி வட்ட வடிவ இலக்கை வரைந்து, சரியாகச் சுட்டுவிட்ட மாதிரியான தோற்றத்தை உருவாக்குவதைப் போன்றது.

இது மிகவும் கவர்ச்சிகரமானது. நாம் உற்றுக் கவனித்து அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஹேம்லெட்டைப் போல் மேகங்களுக்குள் பார்த்து, அது மரநாயா, ஒட்டகமா, அல்லது திமிங்கலமா என்று சொல்லமுடியும்.

நிதிச் சந்தைகளின் சீரற்ற செயல்பாட்டைக் கண்காணிக்கும்போது, அதை அதீதமாகக் கணித்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. அதேநேரம், சலனங்களைத் தவிர்க்கும்போது, அறிவாற்றல் மிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளருக்கு அது வாய்ப்பளிக்கிறது. அனைத்துமே ஒரு காரணத்திற்காக நடக்கிறது என்று கருதுவதைத் தவிர்த்துவிட்டு, நடைமுறையில் இல்லாத காரணாங்களைக் கற்பனை செய்துகொண்டு எடுக்கப்படும் சொந்த முடிவுகளால் வழிநடத்தப்படுவதைத் தவிர்த்துவிட்டு, வாழ்க்கையை பகுத்தறிவோடு வாழ்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

3. பகுத்தறிவை ஊக்குவிப்போம்

நாம் அறிவார்ந்த விவாதத்தில் ஈடுபடும் போதெல்லாம், உண்மையை ஒருமுகப்படுத்துவதே நம்முடைய குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆனால், மனிதர்களும் ஒரு விலங்கு தானே. அதனால் பெரும்பாலும் வலிமையோடு விவாதிப்பவராக, ஆல்ஃபா விலங்காக மாறுவதே குறிக்கோளாகிவிடுகிறது.

இது வாய்மொழியாக இல்லாமலும் இருக்கலாம் - மேலோட்டமான தோரணை, கடினமான பார்வை, கண்டிப்பான குரல், பதட்டமான தொனி, தொடர் குறுக்கீடுகள் மற்றும் இதர ஆதிக்கத் தோற்றங்கள்.

வாதிடப்படும் விஷயத்திலும் ஆதிக்கம் தொடரலாம். எதிராளியை பலவீனமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட பல மோசமான தந்திரங்கள் பயன்படுத்தப்படலாம். அவை,

  • வாதத்தை விட்டுவிட்டு, தனிமனிதரைத் தாக்கிப் பேசுவது
  • எதிராளியின் வாதத்தைத் திரித்துக் கூறி, பிறகு திரிக்கப்பட்டதையே தாக்கிப் பேசுவது
  • ஒரு வாதத்தில் உள்ள குறைகளை அம்பலப்படுத்துவதைவிட, அதற்கு அனுதாபம் கொண்ட மதிப்பிழந்த நபர்களை கவனத்தில் கொள்ளுதல்

அறிவார்ந்த போர், ஓர் உற்சாகமூட்டும் விளையாக நிச்சயம் இருக்கமுடியும். இலக்கிய இதழ்களின் வாசகர்கள் அறிவார்ந்த வீரர்களுக்கு இடையேயுள்ள கருத்து வேறுபாடுகள் சார்ந்த பதிலுரைகளை ரசிக்கிறார்கள்.

ஆனால், நம் விவாதத்தின் நோக்கம் நம்முடைய புரிதலைத் தெளிவுபடுத்துவதாக இருந்தால், மோசமாக நடந்துகொள்கிறவர்களிடம் தலைவணங்குவதை விட, இந்த கெட்ட பழக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

மக்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பாதுகாக்க கோஷம் எழுப்புவதைவிட, அவற்றைச் சோதிக்கப்பட வேண்டிய கருதுகோள்களாகப் பார்க்கவேண்டும். அதற்காக, அறிவார்ந்த விவாதத்தின் அம்சங்களை மாற்றுவதன் மூலம் நாம் அனைவரும் பகுத்தறிவை ஊக்குவிப்போம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: