மகாராஷ்டிராவில் நிர்வாண நிலையில் கிடைத்த பெண் ஊராட்சித் தலைவர் சடலம்: என்ன நடந்தது?

    • எழுதியவர், ராகுல் கெய்க்வாட்
    • பதவி, மஹட்டிலிருந்து பிபிசி மராத்திக்காக

இன்னும் சில தினங்களில் அவருடைய மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் கவனித்துக்கொண்டிருந்தனர். ஆனால், தன் மகனுடைய திருமணத்தை இனி அவரால் காண முடியாது.

மகாராஷ்டிராவின் ரய்கட் மாவட்டத்தின் மஹட் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தின் பெண் சர்பஞ்ச் (கிராம ஊராட்சித் தலைவர்) சடலம், கடந்த 27ஆம் தேதி புதர்களுக்கிடையே நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.

டிசம்பர் 28 அன்று இந்த செய்தி வெளியானது. இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு நாளே ஆகியிருந்ததால், இது தொடர்பான கூடுதல் விவரங்கள் அப்போது தெரிய வரவில்லை. பிபிசி மராத்தி குழு புனேவிலிருந்து டிசம்பர் 29ஆம் தேதி, இச்சம்பவத்தின் பின்னணியையும் காரணத்தையும் அறிய மஹட்டுக்குப் புறப்பட்டது.

சம்பவம் நடந்த தினத்தன்று என்ன நடந்தது என்பதை மஹட் காவல்துறையினர் விவரித்தனர்.

அன்றைய தினம் என்ன நடந்தது?

கொலையான 48 வயதான பெண் கிராம ஊராட்சித் தலைவர் விறகு சேகரிக்க தனது இல்லத்திலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது, அவருடைய தாயாரும் உடன் இருந்திருக்கிறார்.

இருவரும் பெலோஷி சாலை வழியாக, உபத் அலிக்கு செல்லும் பைபாஸ் சாலைக்கு சென்றனர். பின்னர், தன் தாயை வீட்டுக்குத் திரும்பி செல்லுமாறும், தான் விறகு கட்டைகளை ஏற்றிவரும் வாகனத்தில் திரும்பி வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இதன்பின், விறகு கட்டைகளை சேகரிக்க அவர் தனியே சென்றுள்ளார்.

இந்நிலையில், மதியம் சுமார் 1 மணியளவில், அவ்வழியாக சென்ற ஒருவர் சாலையோரத்தில் சர்பஞ்ச் சடலம் நிர்வாணமாக கிடந்ததைப் பார்த்துள்ளார். இதையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், சாட்சியங்களை விசாரிக்கத் தொடங்கினர்.

காவல் துறையினர் பார்த்தது என்ன?

இக்குற்றத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்க 8 குழுக்களை அமைத்து, சந்தேகத்துக்கிடமான 7 பேரை விசாரித்தனர்.

பெண் கிராமத் தலைவர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஹட் ஊரக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர், மும்பையில் உள்ள ஜே.ஜே.மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்த காவல் துறையினர், நிகழ்விடத்தில் கிடந்த கைரேகைகளையும் சேகரித்தனர்.

சந்தேத்துக்கிடமான நபர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, குற்றவாளிகள் குறித்து காவல் துறையினர் நன்றாக யூகிக்க முடியும். இதன்பின், சந்தேக நபர்களிலிருந்து 30 வயதான அமிர் ஜாதவ்வை காவல்துறையினர் தனியாக பிரித்து, முழுமையான விசாரணையை மேற்கொண்டனர்.

கொலையை செய்ததை அமிர் ஜாதவ் ஒப்புக்கொண்டுள்ளார். முதல்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்தனர்.

அமிர் ஜாதவ் மும்பையில் பணியாற்றி வந்தார். ஊரடங்குக்குப் பின் அக்கிராமத்துக்கு வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட சர்பஞ்சின் உறவினரான இவர், அவருடைய வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்துள்ளார். கொலையான சர்பஞ்ச்சுக்கும் அமிர் ஜாதவுக்கும் இடையே ஏற்கனவே பகை நிலவிவந்ததாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் மரக்கட்டையால் தாக்கப்பட்டு, அதன்பின் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பின்னர், தனது செயலை மறைக்க கல்லால் தாக்கி அவரை கொலை செய்துள்ளார் அமிர் ஜாதவ். பின், அவரது சடலத்தை புதர்களில் கிடத்திவிட்டு, தப்பியோடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மஹட் உதவி காவல் ஆணையர் நீலேஷ் டம்பே கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டுள்ள அமிர் ஜாதவ், செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அமிர், கொலை செய்யப்பட்டவரின் உறவினர். ஆரம்பகட்ட விசாரணையின்படி, கடந்த கால பகை காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது."

"குற்றம்சாட்டப்பட்ட நபர், சர்பஞ்ச்சை மரக்கட்டையால் தாக்கி, பின்னர் அவரை புதருக்குள் கொண்டு சென்று கல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்புணர்வு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னர், இக்குற்றத்தின் தன்மை குறித்து மேலும் தெளிவாகும்," என்றார் டம்பே.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

மஹட் தாலுகாவில் அமைந்துள்ள அந்த கிராமத்தில், 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். எனவே, இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் முதியவர்களே. இந்த கிராமத்தைச் சேர்ந்த 90 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

கடும் விளைவுகள்

இக்கொலைச் சம்பவம் காரணமாக, தீவிரமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலானோர் தங்கள் எதிர்வினையை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ராய்கட் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அதிதி தட்கரே கடந்த திங்கள் கிழமை நள்ளிரவில் அந்த கிராமத்திற்கு சென்றார்.

அவருக்கு இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விளக்கினர். ஊடகங்களிடம் பேசிய அவர், இக்கொலையை செய்தவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த வழக்கில், அரசு சார்பாக திறன்வாய்ந்த வழக்குரைஞர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

பாஜக தலைவர் சித்ரா வாக், அந்த கிராமத்திற்கு கடந்த புதன்கிழமை சென்றார். இந்த வழக்கில், மேலும் சிலரும் குற்றவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: