You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: அரசியல் பின்னணி என்ன?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
மேல்மருவத்தூரில் `நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாரை சந்தித்துப் பேசியது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ` பிராமணர் அல்லாத சமயத் தலைவர்களை தன்பக்கம் வைத்துக் கொள்ள தி.மு.க முயல்வதாக இதனைப் பார்க்கலாம். பெரியார் காலத்தில் இருந்தே இது நடந்து வருகிறது' என்கின்றன பெரியாரிய இயக்கங்கள்.
`நம்மைக் காக்கும் 48' திட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் `நம்மைக் காக்கும் 48' என்ற கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் வகையில் விபத்து ஏற்பட்ட முதல் 48 மணிநேரத்துக்குள் கட்டணமில்லாத உயிர்காக்கும் சிகிச்சையாக இது பார்க்கப்படுகிறது. இதற்காக 201 அரசு மருத்துவமனைகள், 408 தனியார் மருத்துவமனைகள் என 608 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விழா நிறைவடைந்த பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நடத்தி வரும் பங்காரு அடிகளாரின் வீட்டுக்கு முதல்வர் சென்றார். அங்கு பங்காரு அடிகளாரிடம் உடல்நலம் விசாரித்துள்ளார். பின்னர், முதல்வருக்கு புத்தகங்களை பங்காரு அடிகளார் பரிசாகக் கொடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது பங்காரு அடிகளார் அருகில் முதலமைச்சர் நின்று கொண்டிருப்பது போன்ற படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமயத் தலைவர்களை சந்திப்பதன் மூலம் பா.ஜ.கவின் மத அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
பங்களாரு அடிகளார்-ஸ்டாலின் சந்திப்பு
``சமயத் தலைவரை சந்திப்பதன் மூலம் ஸ்டாலின் சொல்ல வரும் அரசியல் என்ன?" என மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். ``பங்காரு அடிகளாரை இந்து மதத் தலைவராக மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதுதான் என்னுடைய முதல் கேள்வி. இதை வைத்து அரசியல் செய்வதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. பங்காரு அடிகளாரை `அம்மா' என்றுதான் அந்த பீடத்தின் பக்தர்கள் அழைக்கிறார்கள். வழிபாட்டிலும் சமத்துவப் போக்கை அவர் கடைப்பிடிக்கிறார். சமத்துவமான வழிபாட்டை ஆதரிப்பவரை பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. அண்மைக்காலமாக, தி.மு.கவை குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானவராகக் காட்டி சிலர் அரசியல் செய்ய முனைகிறார்கள். அதேநேரம், இடஒதுக்கீடு உள்பட இதர விவகாரங்களில் அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` தேர்தலுக்கு முன்பாக, `எங்களுடைய கட்சியில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்' என ஸ்டாலின் கூறியிருந்தார். மத நம்பிக்கையுள்ளவர்கள் பலர் தி.மு.கவில் இருக்கிறார்கள். அடிகளாரை சந்தித்ததன் மூலம் புதிதாக யாரையும் தி.மு.க ஈர்க்கப் போவதில்லை. நாத்திகக் கொள்கைகளை கருணாநிதி தீவிரமாக வலியுறுத்தி வந்தார். அவர் காலத்தில் `இந்து என்றால் திருடன்' எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அளவுக்கு நாத்திக கொள்கைகளை ஸ்டாலின் வலியுறுத்தவில்லை. அதுதொடர்பான சர்ச்சைகளுக்குள் செல்லாதது சரியானதுதான். காரணம், தி.மு.க ஒன்றும் நாத்திகக் கட்சி அல்ல. அது மூடநம்பிக்கை எதிர்ப்பு என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்து மதம் ஆதரவு, எதிர்ப்பு என்ற அடிப்படையில் அரசியல் செய்வதை நான் ஆதரிக்கவில்லை. அனைத்து மதங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். ஒரு மதத்துக்கு மட்டும் சார்பாக இருந்துவிடக்கூடாது" என்கிறார்.
மேலும், `` மதச்சார்பற்ற அரசியலை தி.மு.க பின்பற்ற வேண்டும். மத உணர்வுகளுக்கு எதிரான கட்சி அல்ல. முன்பு கருணாநிதியை சந்திப்பதற்கு புட்டபர்த்தி சாய்பாபா வந்தபோது, சமமாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதேநேரம், பங்காரு அடிகளாரை சந்திக்கும்போது முதலமைச்சருக்கு நாற்காலி போடாததை நான் ரசிக்கவில்லை. அது தவறான விஷயம்" என்கிறார்.
நாற்காலி சர்ச்சை சரியா?
பெரியார் காலத்தில் இருந்து இதுபோன்று நடப்பதாகக் குறிப்பிடும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, `பிராமணர் அல்லாத சமயத் தலைவர்களை தன்பக்கம் வைத்துக் கொள்ள தி.மு.க முயல்வதாக இதனைப் பார்க்கலாம். நாங்கள் நடத்திய மாநாட்டிலும் பேரூர் மருதாச்சல அடிகளார், புலிப்பாணடி அடிகளார், சக்திவேல் முருகனார் ஆகியோரை அழைத்திருந்தோம். முதலமைச்சரின் வருகையில் பங்காரு அடிகளாரின் பார்வை என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை" என்கிறார்.
நாற்காலி தொடர்பான சர்ச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கொளத்தூர் மணி, `` ஆதினங்களை பொறுத்தவரையில், `இருக்கையில் இருந்து சந்நிதானம் எழுந்திருக்கக் கூடாது' என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். ஒரே இடத்தில் சமமாக இருக்கைகள் போடப்பட்டபோதும் அதில் பெரியார் அமரவில்லை. இதனை ஸ்டாலின் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் விஷயம். பங்காரு அடிகளார் இயல்பான துறவி ஒன்றும் இல்லை. பங்காரு அடிகளாரிடம் முதலமைச்சர் தனது பணிவைக் காட்டுகிறார் என்றால், அதைவிட கூடுதல் பணிவை அவர் காட்டியிருக்க வேண்டும். அதேநேரம், அவருக்கு உடல்நலம் இல்லாமல் இருந்திருந்தால் பெரிய விஷயமாகப் பார்க்க வேண்டியதில்லை. புட்டபர்த்தி சாய்பாபா வந்தபோதுகூட கருணாநிதியும் அவரும் சமமாக அமர்ந்துதான் பேசினர்'' எனச் சுட்டிக் காட்டுகிறார்.
`` மேல்மருவத்தூரில் அரசின் நலத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் சென்றுள்ளார். பங்காரு அடிகளாரை அவர் சந்தித்ததை, ஆன்மிக சந்திப்பாக கருத முடியாது. அடுத்ததாக பிராமணர் அல்லாத சமயத் தலைவராக பங்காரு அடிகளார் இருக்கிறார். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்கும்போது குன்றக்குடி ஆதினம், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் ஆகியோரை வைத்துத்தான் முதலமைச்சர் நியமனமே செய்தார். இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களுக்குமான முதல்வராக ஸ்டாலின் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்.
பிற செய்திகள்:
- 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த கென்டக்கி சூறாவளியால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
- திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்