You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபின் ராவத்தை நினைவு கூறும் சொந்த கிராமம்: "ஊருக்கு வரும்போதெல்லாம் கர்வாலி மொழியில்தான் பேசுவார்"
- எழுதியவர், ஷபாஸ் அன்வர்
- பதவி, பிபிசி இந்திக்காக
"ஜெனரல் பிபின் ராவத் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டவர். ஆனால், அவர் தன் கிராமத்தின் ஆன்மாவிலிருந்து விலகவில்லை. இந்த கிராமம் வளர்ச்சி அடைய வேண்டும் என அவர் விரும்பினார். இப்போது அவர் அங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய சொந்த கிராமத்தில் பிபின் ராவத் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இங்கு ராவத் பெயரில் ராணுவப் பள்ளி அல்லது மருத்துவமனையை அரசு அமைக்க வேண்டும்".
உத்தரகண்ட் மாநிலம் பவ்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள துவாரிகல் வட்டத்தில் அமைந்துள்ள ஜாவத் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சிங் தோமர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரகாஷ் சிங் தொழில்ரீதியாக ஒப்பந்ததாரராக உள்ளார். பிபின் ராவத்தின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான சத்ய பிரகாஷ் கண்ட்வாலும், பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியின் மரணத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளார்.
"ஜெனரல் பிபின் ராவத் எங்களின் பெருமை. அவருடைய மரணத்தால் நாங்கள் உடைந்து போயுள்ளோம். அவர் மிக எளிமையான மனிதர். நானும் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவன். இந்த சூழ்நிலையில், பிபின் ராவத் மீதான மரியாதை என் பார்வையில் இரட்டிப்பாகியுள்ளது." என அவர் தெரிவித்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவரான சஞ்சய் தோமரும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரும் பிபின் ராவத் மரணத்தால் ஆழ்ந்த கவலையில் உள்ளார்.
"சில காலத்துக்கு முன்பு, லான்ஸ்டவுனில் நான் ஜெனரல் பிபின் ராவத்தை சந்தித்தேன். அவர் இயல்பிலேயே மிக எளிமையானவர். அவருடைய மரணம் நிகழ்ந்திருக்கக்கூடாது. அவர் இறவாதவராகிவிட்டார்." என்றார்.
பிபின் ராவத்தின் சொந்த கிராமமான செயின், துவாரிகல் வட்டத்தில் அமைந்துள்ளது.
அக்கிராமத்தைச் சேர்ந்த யோகேந்திர சிங் கூறுகையில், "துவாரிகல்லில் இருந்து செயின் கிராமத்திற்கு இடையிலான தொலைவு 13 கிமீ. இங்கிருந்து மதன்பூர் துல்கோவன் கிராமத்திற்கு செல்ல பாதை உள்ளது. ஆனால், செயின் கிராமத்திற்கு செல்ல சாலை இல்லை. இரு கிராமத்திற்கும் இடையிலான தொலைவு 1.5 கிமீ முதல் 2 கிலோமீட்டர்." என்றார்.
சஞ்சய் தோமர் கூறுகையில், "மதன்பூர் துல்கோவன் மற்றும் செயின் கிராமத்திற்கு இடையில் தனியாக சாலைவசதி இல்லை. இங்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என பிபின் ராவத் விரும்பினார். ஒரு வாரத்திற்கு முன்பு, பிபின் ராவத்தின் சகோதரரான, வணிக கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுரேந்திர ராவத், மும்பையிலிருந்து இங்கு வந்திருந்தார். அதிகாரிகளை சந்தித்து இங்கு சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஓய்வுபெற்ற பிறகு இங்கு வந்து தங்க வேண்டும் என, பிபின் ராவத் விரும்பினார்."
தற்போது, அந்த கிராமத்தில் பிபின் ராவத்தின் மாமா பாரத் ராவத், தன் மனைவி சுசிலா தேவியுடன் வாழ்ந்துவருகிறார். பிபின் ராவத் மறைவையடுத்து அவர் டெல்லி சென்றுள்ளார்.
ஜெனரல் பிபின் ராவத் இனி இந்த உலகில் இல்லை. ஆனால், அவருடைய கிராம மக்கள் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இங்குள்ள மக்கள் பலரும், ஜெனரல் பிபின் ராவத்தின் எளிமையான குணத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டிருக்கின்றனர் என தெரிகிறது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த யோகேந்திர குமார் கூறுகையில், "மிக உயர்ந்த பதவியில் இருந்ததால், சொந்த கிராமத்திற்கு பிபின் ராவத் வருவது அரிதானது. ஆனால், எப்போது இங்கு வந்தாலும் அம்மக்களிடம் கர்வாலி மொழியில் மட்டுமே பேசுவார்." என தெரிவித்தார்.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், கடந்த புதன்கிழமை (டிசம்பர் 8) ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவ்விபத்தில் மூத்த ராணுவ அதிகாரிகளும், பிபின் ராவத் மனைவியும் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
- முடிவுக்கு வருகிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்: வீடு திரும்ப விவசாயிகள் முடிவு
- ஒமிக்ரான் திரிபு: எவ்வளவு பெரிய ஆபத்து? எவ்வளவு வேகமாகப் பரவுகிறது?
- ஜமால் கஷோக்ஜி கொலை: சௌதியின் முன்னாள் அரச காவலர் பிரான்சில் கைது
- ரூ. 4.05 லட்சம் கோடி மதிப்பிலான பிட்காயின் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு சொந்தமானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: