You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றிய வழக்கு: லக்கிம்பூர் கேரியில் மத்திய பாஜக அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது
விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றியது தொடர்பான வழக்கில் மத்திய பாஜக உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றியதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
கார் ஏற்றியதில் 4 விவசாயிகளும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் டிரைவர், 2 பாஜகவினர், ஒரு பத்திரிகையாளர் ஆகிய 4 பேரும் கொல்லப்பட்டனர்.
இது மிகப்பெரிய கொந்தளிப்பையும், அரசியல் புயலையும் கிளப்பியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பார்க்க சென்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா வதேரா தடுத்து வைக்கப்பட்டார். அவர் தங்கவைக்கப்பட்ட அறையை அவரே துடைப்பம் எடுத்து பெருக்குவதைக் காட்டும் புகைப்படம் வைரலானது.
பிறகு, ராகுல், பிரியங்கா இருவரும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை சந்தித்தனர்.
இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட கார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் தொடர்புடையது என்று குற்றம்சாட்டப்பட்டது. அந்த காரில் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
ஆனால், அந்த நேரத்தில் காரில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. அத்துடன், கார் மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தாக்குதல் நடத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து டிரைவர் அவர்கள் மீது காரை ஏற்றிவிட்டதாகவும் பாஜக தரப்பில் கூறப்பட்டது.
காரை விட்டு ஏற்றியவர்களை கைது செய்யாத உத்தரப்பிரதேச அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்க்கச் சென்ற காங்கிரஸ் தலைவர்களை சட்டவிரோதமாக பிடித்துவைத்திருப்பதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அத்துடன் மத்திய உள்துறை இணையமைச்சர் பொறுப்பில் இருந்து அஜய் மிஸ்ரா அகற்றப்படவேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துவந்தன.
லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் விசாரணை நடத்துவார் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது வேகமாக வந்த கார் ஏறிச்செல்வதைக் காட்டும் காணொளியை பிரியங்கா பகிர்ந்தார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
கடுமை காட்டிய உச்சநீதிமன்றம்
இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்ட நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறியது. நாட்டில் வேறு கொலை வழக்குகள் தொடர்பில் இப்படித்தான் நடந்துகொள்வார்களா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
12 மணி நேர விசாரணைக்குப் பின் கைது
சனிக்கிழமை லக்கிம்பூர் கேரி போலீஸ் நிலையத்தில் ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது என்றும், அவர் மீது கொலை, கொலை என்று சொல்லமுடியாத மனித இறப்புக்கு காரணமாக அமைதல், கொலைச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லக்கிம்பூர் கேரியில் இருந்து பிபிசிக்காக செய்தி சேகரிக்கும் அனந்த் ஜனானே கூறுகிறார்.
விசாரணையின்போது அவர் சரிவர பதில் சொல்லவில்லை; விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார் என்றும் அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார் டிஐஜி உபேந்திர அகர்வால். காவலில் எடுப்பதற்காக அவர் நீதித்துறை நடுவர் (மேஜிஸ்திரேட்) முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார்.
பிற செய்திகள்:
- அமேசான் மழைக்காடுகள் சட்ட விரோத விற்பனை: பிபிசி புலனாய்வும் ஃபேஸ்புக் நடவடிக்கையும்
- தொடரும் நிலக்கரி பற்றாக்குறை, சிக்கலில் மின் உற்பத்தி: என்ன செய்யப்போகிறது இந்தியா?
- காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா??
- மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :