You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நவ்ஜோத் சிங் சித்து: இந்தியாவின் சர்ச்சைக்குரிய முன்னாள் கிரிக்கெட் வீரர், இன்னாள் அரசியல்வாதி
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்
இந்திய கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அணித் தலைவர் முகமது அசாருதீனுடனான சண்டையால் நவ்ஜோத் சிங் சித்து இந்தியாவுக்குத் திரும்பியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அசாருதீன் வேடிக்கையாகக் கூறிய வார்த்தைகள் சித்துவை பாதித்தது என முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஒருவர் தன் சமீபத்தைய நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலாவில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக நடந்த சண்டையில் 65 வயது முதியவர் ஒருவரை நவ்ஜோத் சிங் சித்து அடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த முதியவர் மருத்துவமனையில் இறந்து போனார். 2006ஆம் ஆண்டு நீதிமன்றம் அக்குற்றத்துக்காக சித்துவை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவரை கொலை வழக்கிலிருந்து விடுவித்தது, ஆனால் முதியவரை புண்படுத்தியதற்காக அபராதம் விதித்தது.
57 வயதான, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கக் கூடிய மற்றும் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடிய சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அப்பதவியில் இருந்து கொண்டு தன் முரண்பட்ட கருத்துகளால் தொடர்ந்து ஓர் அரசியல் குழப்ப நிலைக்கு காரணமாகியுள்ளார்.
அப்பதவியை ஏற்று மூன்று மாத காலத்துக்கு பின்னரும், தன் போட்டியாளரான அமரீந்தர் சிங் வெளியேறி சில தினங்களுக்கு பின்னரும், சித்து தன் பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் சரண்ஜீத் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக நியமிக்கப்பட்டதில் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தி அடைந்தார். சித்துவின் நடவடிக்கைகள் காங்கிரஸின் தலைமையை கோபப்படுத்தியது.
"நான் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன், ஆனால் எதற்காகவும் என் கொள்கைகளைவிட்டுக் கொடுக்கமாட்டேன். நான் எந்த பதவிக்காகவும் ஏங்க மாட்டேன்," என தன் பதவியிலிருந்து விலகிய பின் கூறினார். சித்துவின் விமர்சகர்கள் இதை மறுக்கின்றனர்.
கடந்த 17 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் நவ்ஜோத் சிங் சித்து எதிர்காலத்தை குறித்து தீர்க்கமாக யோசிக்காத தன்னை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் அரசியல்வாதியாக இருந்து வருகிறார் என்கின்றனர் அவர்கள்.
"அவர் ஒரு வழக்கமான அரசியல்வாதி அல்ல. அரசியலில் பண்படவில்லை, தனக்கான நேரம் வராத போது பேசுகிறார், ஓர் அணியாக இருக்கத் தெரியவில்லை. நாசுக்காக பேசத் தெரியவில்லை, எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார்" என அரசியல் அறிவியலாளர் அசுதோஷ் குமார் கூறுகிறார்.
சித்துவின் நண்பர்கள், அவரை ஒரு பன்முக வித்தகர் என்று விவரிக்கின்றனர். சித்து பல துறைகளில் தன் தடத்தை பதித்துள்ளார். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக, ஒரு தொலைக்காட்சி வர்ணனையாளராக, இந்தியாவின் மிகப் பெரிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் நிரந்தர விருந்தினராக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கூட கலந்து கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தன் நண்பர் என்கிறார் சித்து. "என் நண்பர் என் வாழ்கையை வெற்றிகரமாக மாற்றிவிட்டார். அவர் மதத்திலிருந்து அரசியலை தனியாக பிரித்துவிட்டார்" என ஒரு முறை கூறினார்.
சித்துவின் கிரிக்கெட் வாழ்கை அவரது பல்வேறு குணநலன்களை வெளிக்காட்டியது. ஒருகாலத்தில் சித்து அதிரடி ஆட்டக்காரராக இருந்தார். 1983 முதல் 1999ஆம் ஆண்டு வரையான காலத்தில் 51 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். அவரது சராசரி 42.13.
"தன் செயல்பாட்டை மேம்படுத்த, அவர் எப்போதும் பார்ட்டிகளுக்கோ சினிமாக்களுக்கோ சென்றதில்லை, அதே போல எந்த தீயபழக்கங்களிலும் ஈடுபடவில்லை" என ஒரு பத்திரிகையில், சித்து பற்றி அறியப்படாத விஷயங்கள் என்கிற தலைப்பில் செய்திகள் வெளியானது. சித்து ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர், அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சித்து ஒரு வர்ணனையாளராக தன் நகைச்சுவை கலந்த வர்ணனைக்கென தனி ரசிகர் வட்டம் பெற்றார் என எழுத்தாளர் அமித் வர்மா கூறுகிறார்..
பின்னர் ஒரு பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரமாதமாக உடையணிந்த விருந்தினராக தோன்றினார், அங்கு அவர் பிரகாசமான தலைப்பாகை மற்றும் அதற்குத் தகுந்தாற் போன்ற சூட்களை அணிந்தார்.
2019 ஆம் ஆண்டில், இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் இந்திய ஆயுதப் படையினர் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் கூறிய சர்ச்சை கருத்துகளால் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
"சில தனிநபர்களின்" முட்டாள்தனத்திற்கு பாகிஸ்தானைக் குறை கூறுவது பயனற்றது - என சித்து கூறிய கருத்து தேசபக்தி அற்றதாக விமர்சிக்கப்பட்டது.
"ஒரு கிரிக்கெட் வீரராகவும் வர்ணனையாளராகவும் தனது பிரபலத்தைப் பயன்படுத்தி மக்களின் வாக்குகளைப் பெறுபவராக" அரசியலில் இறங்கினார் என்று கூறுகிறார் கிரிக்கெட் எழுத்தாளரான அயாஸ் மெமூன். தன் வண்ணமயமான சொற்பொழிவால் கூட்டத்தை ஈர்க்கிறார்.
2004இல், அவர் பாஜகவில் சேர்ந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டில், பாஜக அவருக்கு சீட்டு கொடுக்க மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகினார். அடுத்த ஆண்டு, மாநில தேர்தலுக்கு முன்னதாக, அவர் காங்கிரஸில் இணைந்தார்.
"அவர் மிகவும் லட்சியம் மிக்கவராக இருக்கிறார், அவரது சமீபத்தைய ராஜினாமா மூலம் அவரது நகர்வுகளை அவர் தவறாக கணக்கிட்டதாகத் தெரிகிறது" என்கிறார் டெல்லியில் இருக்கும் கொள்கை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ராகுல் வர்மா.
மாநில தேர்தல்களுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், சித்து பஞ்சாபை காக்க விரும்பும் கொள்கைகளின் அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். விவசாயிகள், சந்தைக்கு ஏற்றவாறு கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
சீக்கியர்களின் புனித நூலான குரு க்ரந்த சாஹிப் கடந்த 2015 ஆம் ஆண்டில் அவமதிக்கப்பட்ட பிரச்னையின் தொடர்ச்சியாக உள்ளூர் மக்களிடையே ஓர் உணர்வுப்பூர்வமான பிரச்னையாக உள்ளது. போதைப்பொருள் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அரசியல் ரீதியாக தொடர்புள்ள கார்டெல் கும்பல்கள் லாபகரமான வணிகங்களை நடத்துவதால், ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது.
சித்து தன் மீது குற்றச்சாட்டுகள் இல்லாதவாறு இருக்கிறார். "நான் குப்பையை அகற்ற வேண்டும் என்றால், நான் குப்பையில் இருக்க வேண்டும்" என்பது அவரது பிரபல நகைச்சுவை வாசகங்களில் ஒன்று.
சமீபத்தைய சர்ச்சைக்குரிய செயல்களால், ஏற்கனவே முடங்கிப்போன அவரது கட்சியை முடிவில்லா தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை முதல்வர் பதவியில் அமர வைக்காததால், சித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர். "
சித்து அவசரப்படுகிறார்" என அசுதோஷ் குமார் கூறுகிறார். "அவர் பொறுமையாக இருக்கவும், எல்லாவற்றுக்கும் பெயர் சம்பாதிக்க முயலாமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்." என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்