அஜய் சோன்கர்: முத்து வளர்ப்பில் ஜப்பானிய ஆதிக்கத்திற்கு சவால் விட்ட இந்தியரின் கதை

அஜய் சோன்கர்

பட மூலாதாரம், AJAY KUMAR SONKAR

    • எழுதியவர், பிரதீப் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இது ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து அசாதாரண சாதனைகளை படைத்து வரும் ஒரு மனிதரின் நம்பமுடியாத கதை.

அலகாபாத்திலிருந்து வெளியே வந்து இந்தியாவின் பெயரை உலகெங்கும் ஒளிரச் செய்த முத்து வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் சோன்கர், சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் செயற்கை முத்து தயாரிக்கும் நாடுகளில் இந்தியாவின் பெயர் இணையும் அதிசயத்தை நிகழ்த்திக்காட்டினார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நீடிக்கும் தனது தொழில்முறை வாழ்க்கையில், சோன்கர் முத்து வளர்ப்பில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். ஆனால் உலகெங்கிலும் உள்ள நீர்வாழ் உயிரினம் தொடர்பான விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அவரது புதிய பணி பற்றி முதலில் பேசுவோம்.

திசு வளர்ப்பின் மூலம் முத்துக்களை பிளாஸ்கில் வளர்க்கும் பணியை டாக்டர் சோன்கர் செய்து காட்டியுள்ளார். எளிமையாகச் சொன்னால், சிப்பிகளுக்குள் இருக்கும் திசுக்களை வெளியே எடுத்து, செயற்கை சூழலில் முத்து வளர்க்கும் அதிசயத்தை அவர் நிகழ்த்தியுள்ளார். அதாவது, முத்து வளர சிப்பிகளைச் சார்ந்திருப்பது முடிந்துவிட்டது, இதனுடன் சிப்பிக்கான கடல் சூழலும் தேவையில்லை.

கடல் உயிரினங்களின் உலகத்தை மையமாகக் கொண்ட 'அக்வா கல்ச்சர் ஐரோப்பா சொசைட்டி' என்ற அறிவியல் இதழின் 2021 செப்டம்பர் பதிப்பில், டாக்டர் அஜய் சோன்கரின் இந்த புதிய ஆராய்ச்சி, வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் படி, டாக்டர் அஜய் சோன்கர், அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் சிப்பி திசுக்களில் இருந்து முத்து வளர்க்கும் வேலையை, பிரயாக்ராஜில் உள்ள தனது வீட்டு ஆய்வகத்தில் செய்துள்ளார்.

சிப்பியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட திசுக்கள், கடலின் இயற்கையான சூழலில் தான் செய்யும் அதே வேலையை சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் கூட , அதே போல செய்யமுடிந்தது.

அஜய் சோன்கர்

பட மூலாதாரம், DR. AJAY KUMAR SONKAR

"பிங்க்டடா மார்கரிட்டிஃபெரா சிப்பிகள் உப்புத்தன்மை அதிகமாக உள்ள கடலில் காணப்படுகின்றன. அவற்றின் மேலுறையை அகற்றிய பிறகு, நான் அவற்றை இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரயாக்ராஜில் எனது ஆய்வகத்திற்கு கொண்டு வந்தேன். அவற்றை பாதுகாப்பாக வைக்க எல்லா நடவடிக்கைகளையும் செய்தேன். பிரயாக்ராஜுக்கு அவற்றை கொண்டு வர 72 மணிநேரம் ஆனது. ஆனால் அவை முழுமையாக உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருந்தன. பின்னர் அதை வளர்த்து ஊசி போட்டேன். அவை முத்து கூறு தயாரித்தது மட்டுமல்லாமல் அவற்றிலிருந்து முத்தும் தயாரானது," என்று தனது ஆராய்ச்சி பற்றி டாக்டர் அஜய் குமார் சோன்கர் கூறினார்.

அவரது புதிய தொழில்நுட்பம் மிக முக்கியமானது என்று இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் லக்னோவை தளமாகக் கொண்ட தேசிய மீன் மரபணு ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் டாக்டர் குல்தீப் கே லால் தெரிவித்தார்.

"நிச்சயமாக டாக்டர் சோன்கரின் புதிய பணி மிகவும் முக்கியமானது. முத்து தொழில்நுட்பத்தில் இது செயற்கரிய மாற்றமாக இருக்கலாம். முத்து வளரும் தொழில்நுட்பம், கடலைச் சார்ந்து இருக்காது. இது ஒரு வியத்தகு பணி," என்று அவர் குறிப்பிட்டார்.

இப்போது வரை, கடலில் காணப்படும் சிப்பிகள் மற்றும் தோடு சிப்பிகள் இல்லாமல் செயற்கை முத்து வளர்ப்பை கற்பனை கூடச் செய்யமுடியாது. சங்கு, தோடு சிப்பி போல முத்துக்களும் , சிப்பிகள் அல்லது நீரில் இருக்கும் மீன் குழுவின் பிற உயிரினங்களின் உயிரியல் பொருட்கள் ஆகும்.

இந்த உயிரினங்கள் சுவாசிக்க வாயைத் திறக்கும்போது, சில நேரங்களில் வெளியில் இருந்து ஏதாவது உள்ளே செல்கிறது. முதலில் அதை உடலில் இருந்து வெளியேற்ற அவை முயற்சிக்கின்றன, ஆனால் அது வெற்றியடையாதபோது, அசெளகர்யத்தை குறைக்க, உடலில் இருந்து ஒரு சிறப்பு ரசாயனத்தை வெளியிடுகின்றன. அந்தப்பொருள் மீது ஏற்படும் ரசாயனத்தின் தாக்கத்தால், காலப்போக்கில் அது ஒரு முத்தாக மாறும். இயற்கையில் முத்து உருவாக்கம் 10 லட்சம் சிப்பிகளில் ஒன்றில்தான் நிகழ்கிறது.

ஆனால் செயற்கை முத்துக்களை வளர்க்கும் தொழில்நுட்பம் முத்துக்களின் உலகத்தை நிறைய மாற்றியுள்ளது, அஜய் சோன்கரின் புதிய கண்டுபிடிப்பு, அந்த திசையில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. அஜய் சோன்கர் தனது தொழில் வாழ்க்கையின் மிகவும் கடினமான கட்டத்தில் இந்த வேலையைச் செய்துள்ளார். அவரது சிரமத்தின் கதையை அறிவதற்கு முன்பு அவரது வாழ்க்கைப்பயணத்தைப் பற்றி தெரிந்து கொள்வது சுவாரசியமானது.

பிரயாக்ராஜில் இருந்து உலகை திகைக்கவைத்த சோன்கர்

டாக்டர் அஜய் சோன்கரின் புதிய வேலை ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் முத்து வளர்க்கும் உலகில் அவர் இத்தகைய பல புதுமைகளைச் செய்து உலகை திகைக்க வைத்துள்ளார். அவருக்கு முத்து தயாரிப்பதில் ஆர்வம், 1991 ல் அலகாபாத்தின் கட்ராவில் தொடங்கியது.

அஜய் சோன்கர்

பட மூலாதாரம், AJAY KUMAR SONKAR

பள்ளியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்த சோன்கர், வாரங்கலில் உள்ள ரீஜனல் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயின்றார். ஆனால் அந்த நாட்களில் பிற்பகலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட UGC கல்வி நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயம் அவரது வாழ்க்கையை மாற்றியது.

"அந்த கதையில் ஜப்பானின் முத்து வளர்ப்புப் பற்றிச் சொன்னார்கள்.அவர்கள் சிப்பிகளிலிருந்து முத்துக்களைப் பிரித்ததைப் பார்த்தபோது, எனக்கும் அதில் ஆர்வம் வந்தது. இதற்கு காரணம் எங்களிடம் ஒரு குளம் இருந்தது . கூடவே அங்கு சிப்பிகளும் இருந்தன. என்னாலும் முத்துக்களை உருவாக்க முடியும் என்ற என்ண்ணம் என் மனதில் எழுந்தது. ஆனால் இதன் தொழில்நுட்பம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இணையம் என்பது உலகில் அறிமுகமாகியிருந்தது என்றாலும் இந்தியாவில் அது இருக்கவில்லை," என்று அந்த அத்தியாயத்தைப் பற்றி சோன்கர் விளக்கினார்.

டாக்டர் அஜய் குமார் சோன்கர் தனது ஆரம்ப நாட்களைப் பற்றிக்கூறுகையில், "நான் சிப்பிகளை என் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, அலகாபாத் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியரிடம் சென்று, ஐயா, இது என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் தசைகள் என்று கூறினார். அது எப்படித் திறக்கிறது, என்றேன் நான். அவர் அதை தண்ணீரில் கொதிக்க விடுமாறு சொன்னார். அது இறந்துவிடுமே எம்றேன் நான். அது இறந்தபிறகுதான் அதை திறக்கிறார்கள்.. பல்கலைக்கழகத்தில் உள்ள எல்லா சிப்பிகளுமே இறந்தவைதான் என்று அவர் சொன்னார்," என்று குறிப்பிட்டார்.

முத்து வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அஜய் குமார் சோன்கர் அறிந்துகொண்டார். ஆனால் அவர் நம்பிக்கையை கைவிடவில்லை. "அலகாபாத்தில் உள்ள தர்பங்கா காலனிக்கு அருகில் மீன்வளத் துறை அலுவலகம் இருந்தது. பயத்துடன் அங்குள்ள இயக்குநரிடம் 'என்னிடம் ஒரு குளம் இருக்கிறது, எனக்கு முத்து வளர்க்க வேண்டும், ஏதாவது உதவி கிடைக்குமா' என்று கேட்டேன். அவர் மேலும் கீழுமாக என்னைப்பார்த்தார்.'எங்களால் இங்கு மீன் கூட வளர்க்க முடியவில்லை.நீ முத்து வளர்ப்பைப்பற்றி பேசுகிறாய். இது படிக்கும் வயது. முதலில் நன்றாகப்படி. முத்துக்கள் நன்னீரில் வளராது. ஒருநாள் கடலை என்னிடம் கொண்டு வா. அப்போது பார்க்கலாம்' என்று சொன்னார்."

ஆனால் சோன்கர் மனம் தளரவில்லை. செயற்கை முத்து தயாரிப்பது பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணி தொடங்கியது. அப்போதைய உலகில் தகவல்களைப் பெற எளிதான வழி இருக்கவில்லை. ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள்.

முத்து உருவாக்கும் உத்வேகம் எங்கிருந்து கிடைத்தது?

அலகாபாத் ஸ்டேஷனில் உள்ள ஏஎச் வீலர்ஸ் கடையில் தற்செயலாக நேஷனல் ஜியோகிராஃபிக்கின் பழைய இதழ் அவர் கண்ணில் பட்டது. செயற்கை முத்து உற்பத்தி பற்றிய தகவலின் அடிப்படையிலான ஒரு சிறப்பு இதழ் அது. சோன்கர் அதை வாங்கியது மட்டுமல்லாமல் இன்றுவரை அதை பாதுகாத்து வைத்திருக்கிறார்.

அஜய் சோன்கர்

பட மூலாதாரம், DR. AJAY KUMAR SONKAR

இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு, தனது குளத்தின் சிப்பிகளுடன் தனக்கு இருந்த புரிதலுடன் அவர் பரிசோதனை செய்யத் தொடங்கினார். சிப்பிகளைப் பிடித்து பெரிய தொட்டிகளில் வைப்பது மற்றும் அவற்றைப் கண்காணிப்பது சோன்கரின் பொழுதுபோக்காக மாறியது. நடுத்தர வர்க்க சமூகத்தில் இந்த வேலை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

இந்த சிப்பிகள் மூச்சுவிட வாயைத் திறப்பதையும், ஏதேனும் வெளிப் பொருள் அதில் நுழைந்தால் அது முத்தாக ஆகலாம் என்பதையும் விரைவில் அவர் அறிந்தார். "உலகம் முழுவதிலும் முத்து வளர்க்கும் தொழில்நுட்பம் ஜப்பானிடம் மட்டுமே இருந்தது என்பதை நான் அறிந்துகொண்டேன். அவர்கள் மற்ற நாடுகளுக்கு அதைப்பற்றி சொல்லவில்லை. மேலும் சிறந்த முத்துக்களை உருவாக்க ஊசி மூலம் செலுத்தப்படும் மூலப்பொருள் அதாவது கரு, அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில்தான் கிடைக்கிறது என்றும் தெரிய வந்தது. ஆனால் அமெரிக்காவில் தொழில்நுட்பம் இல்லை. எனவே முத்துக்களை உருவாக்க விரும்பினால், அவர்கள் ஜப்பானிடம் இருந்து உதவி பெற வேண்டும்," என்று அவர் கூறினார்.

ஆரம்ப நாட்களில், சிப்பி வாயைத்திறக்கும்போது சிறிய சிமெண்ட் துண்டுகளை அதன் வாயில்போட்டு சோன்கர் தனது பரிசோதனையை தொடங்கினார். அந்த நாட்களை நினைவுகூர்ந்த சோன்கர், "என்ன சொல்வது, யாராவது என்னை சந்திக்கும் போதெல்லாம், அவர்கள் முத்து தயாராகிட்டதா , இப்போதும் முத்து வளர்க்கிறாயா என்று கேலியாக கேட்பார்கள். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக பெற்றோர் சொன்னார்கள். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை," என்கிறார்.

அஜய் சோன்கர்

பட மூலாதாரம், DR. AJAY KUMAR SONKAR

சோர்வை ஏற்படுத்தும், நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகள், சோன்கரின் மன உறுதியை மேலும் வலுவாக்கின. ஒன்றரை வருடங்களுக்குள் அவர் ஜப்பானியர்களின் உதவியின்றி நன்னீரில் செயற்கை முத்துக்களை உருவாக்கி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

செயற்கை முத்து தயாரிப்பில், ஜப்பானுக்கு சவால் விடப்பட்டது இதுவே முதல் முறை. 1993 இல் கிடைத்த இந்த வெற்றி அஜய் சோன்கரை ஒரே இரவில் தலைப்புச் செய்திகளில் கொண்டு வந்தது. முதன்முறையாக, நூற்றுக்கணக்கான சிப்பிகளில், 36 ல் முத்துக்கள் உருவாயின. குடும்ப உறுப்பினர்கள் ஆச்சரியப்பட்டனர், ஆனால் மீதமுள்ளவற்றில் ஏன் முத்துக்கள் உருவாகவில்லை என்று அவர் யோசிக்கத்தொடங்கினார்.

அவரது சாதனை பின்னர் தூர்தர்ஷனில் ,கிரீஷ் கர்னாடின் பிரபலமான நிகழ்ச்சி 'டர்னிங் பாயிண்ட்' இல் ஒளிபரப்பானது. அந்த அத்தியாயத்தின் ஒரு காட்சியை நீங்கள் இங்கே பார்க்கலாம்.

முத்து

பட மூலாதாரம், HUAHINE

1994, மே 14 முதல் 19 வரை, முத்து வளர்ப்பு பற்றிய முதல் சர்வதேச மாநாடு ஹவாய் தீவுகளில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள சோன்கருக்கும் அழைப்பு வந்தது. "அவர்கள் விமான டிக்கெட்டுகளை அனுப்பினார்கள். முதல் முறையாக விமானத்தில் ஏறினேன். நான் அரசு விருந்தினராக அங்கு சென்றேன். நான் ஹவாய் தீவை அடைந்தபோது, அங்குள்ள பலதரப்பட்ட மக்களைக் கண்டு பயந்தேன். நான் அனைவரையும்விட வயதில் மிகவும் சிறியவன். பிறகு ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். யாரையும் நேருக்கு நேர் பார்க்கக்கூடாது என்று நினைத்தேன். மாநாட்டு அரங்கில் என் பேப்பரைப் படித்தபோது, நான் ஒரு முறை கூட அதிலிருந்து என் கண்களை எடுக்கவில்லை. நான் படித்து முடித்ததும், மக்கள் நின்று கைதட்டுவதைக் கண்டேன். அதை இன்றுவரை என்னால் மறக்கமுடியவில்லை," என்று சோன்கர் நினைவு கூர்ந்தார்.

இருப்பினும், அன்று தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது. அஜய் சோன்கர் உலகெங்கிலும் குறைந்தது 68 நாடுகளில் முத்து வளர்ப்பு பற்றி தனது விரிவுரைகளை வழங்கியுள்ளார். அவரது டஜன் கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் பல 'அக்வா கல்சர்' தொடர்பான இதழ்களில் வெளியாகியுள்ளன.

இதற்குப் பிறகு இரண்டு வருடங்களில், 1996 இல் அஜய் சோன்கர் 22 மில்லிமீட்டர் நீள மையக்கருவை(ந்யூக்ளியஸ்) உருவாக்கினார். இது செயற்கை முத்து உற்பத்தி உலகின் மிகப்பெரிய கருவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ந்யூக்ளியஸ் அமெரிக்காவில் சோதிக்கப்பட்டது மற்றும் செயற்கை முத்து தயாரிக்கும் உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானியான டாக்டர் சி. ரிச்சர்ட் ஃபாஸ்லர், அமெரிக்க சந்தையில் அதன் விலை சுமார் $ 30,000 டாலர் என மதிப்பிட்டார். இது ஜப்பானிய மற்றும் அமெரிக்கர்களின் ந்யூக்ளியஸ் மதிப்பை விட ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகம்.

சோன்கரின் பணி பற்றிய பேச்சு உலகம் முழுவதும் பரவியபோது, இந்திய அரசின் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமும் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு அவருக்கு1999 இல் அழைப்புவிடுத்தது.ஆனால் அதற்குள், சோன்கர் தனது ஆய்வு மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடல் பகுதியில் வேலை செய்ய முடிவு செய்திருதார், மேலும் அவர் மத்திய அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியுடன் 2003 முதல் அங்கு வேலை செய்யத் தொடங்கினார்.

அந்தமான் கடல் பகுதியில் பிங்க்டிடா மார்கரிடிஃபெரா என்றழைக்கப்படும் சிப்பி இனங்கள் காணப்படுகின்றன. அதிலிருந்து கருப்பு முத்துக்களை உருவாக்க முடியும். விரைவில் அந்தமானை கருப்பு முத்துக்களின் மையமாக சோன்கர் நிறுவினார்.

அந்தமானின் பெருமையிலிருந்து சிரமங்கள் வரை

DR. AJAY KUMAR SONKAR

பட மூலாதாரம், DR. AJAY KUMAR SONKAR

அவர் தனது வேலையை சுயாதீனமாக செய்துகொண்டிருந்தாலும், அவரது முத்துக்களுக்கான அதிக தேவை,செயற்கை முத்து சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியது. அந்தமான் நிர்வாகம் அவரது சாதனைகளை தனது சாதனைகளாக தொடர்ந்து முன்வைத்தது.

ஆர்.கே.நாராயண், அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் என அவரது பணியை பல இந்திய குடியரசுத்தலைவர்களும் பாராட்டியுள்ளனர். சோன்கர் இவர்களை சந்தித்து தனது பணிகள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து அளித்தார். இந்த வரிசையில், அவர் விநாயகரின் உருவம் போன்ற 43 மிமீ முத்தை உருவாக்கி உலகின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் காலம் எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது என்று சொல்வார்கள். சோன்கருக்கு கஷ்ட காலம் தொடங்கியது.. 2019 ஆம் ஆண்டில் அந்தமான் நிர்வாகம் அவரை கடலில் வேலை செய்வதை நிறுத்துமாறு கூறியது. இதற்காக, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு ஆய்வை நிர்வாகம் மேற்கோள் காட்டியது, அந்தமானில் பிங்க்டிடா மார்கரிட்டிஃபெரா கிடைப்பது வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்று அந்த ஆய்வு குறிப்பிட்டிருந்தது.

இதன் பிறகு, அங்கிருந்த தனது ஆய்வகம் முன்பின்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டடு, அழிக்கப்பட்டதாக சோன்கர் கூறுகிறார். இதை எதிர்த்து, டாக்டர் அஜய் சோன்கர் கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார் நிர்வாகத்தின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதாவது, செயற்கை முத்துக்களைத் தயாரிக்க சோன்கருக்கு மீண்டும் அந்த இடம் கிடைத்தது.

அந்தமான் நிர்வாகம் தனது பெருமையாக முன்வைத்து வந்த சோன்கருக்கு இப்படி ஏன் நடந்தது என்று அவரிடம் கேட்டபோது, "அதிகாரவர்கத்தினர் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினர். இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன்னால்.உள்ளது. கொரோனா கட்டுபாடுகளும் வந்தன. இந்த சூழ்நிலையில், நான் அலகாபாத்தில் எனது பணியைத் தொடர்ந்தேன். திசு வளர்ப்பு வேலை வெற்றியடைந்தது. அதனால் நான் எனது வேலையை எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்." என்று அவர் தெரிவித்தார்.

இந்த முழு விவகாரம் குறித்துப்பேசிய அந்தமான் தெற்கு துணை ஆணையர் சுனில் அஞ்சிபகா,, "நான் ஒரு வருடமாக இங்கு பணியாற்றுகிறேன். இதுபோன்ற எந்த விவகாரமும் என் கவனத்திற்கு வரவில்லை. அஜய் சோன்கருக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் அவர் என்னை சந்தித்துப்பேச வேண்டும். அப்போதுதான் நான் அவரின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும், அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அவருடைய புகாரை தீர்க்கும்படி கூறமுடியும்," என்றார்.

கோவிட் நெருக்கடி முடிந்த பிறகு, அந்தமானில் தனது வேலையை சீர்படுத்த யோசிப்பதாக சோன்கர் கூறுகிறார். இருப்பினும், அதிகாரவர்க்கம் பற்றி அவரது மனதில் நிச்சயமாக ஆழ்ந்த வடு இருக்கிறது. "ஒருபுறம் இந்திய அரசு, மேட் இன் இந்தியா பற்றி பேசுகிறார், மறுபுறம் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறுகிறார்,

இப்போது வரை அஜய் சோன்கர் ஒரு தனியார் நிறுவனமாக தனது வேலையைச் செய்திருந்தாலும், அவர் அரசுடன் இணைந்து தனது திறமைகளை மற்றவர்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறார்.

"அரசு முத்து வளர்ப்பில் மிகவும் தீவிரமாக உள்ளது. அரசு இந்தத்துறையை மேம்படுத்த விரும்புகிறது. நான் சுயாதீனமாக வேலை செய்தேன். அரசு விரும்பினால், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நான் என் பங்களிப்பை தர விரும்புகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்திய முத்து வளர்ப்பு, அஜய் சோன்கரின் நுட்பத்தால் பயனடையலாம். ஆனால் இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன - ஒன்று சோன்கர் தனது நுட்பத்தை எத்தனை பேருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார் என்பது. இரண்டாவது, இது மிகவும் உழைப்பு மிகுந்த வேலை. ஆயிரத்தில் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இதை கற்றுக்கொள்ள முடிகிறது," என்று குல்தீப் கே லால் கூறுகிறார்.

இந்திய முத்து வளர்ப்பு வாய்ப்பு வளங்கள் குறித்து ப்பேசிய சோன்கர், "ஜப்பானிடம் தொழில்நுட்பம் உள்ளது . ஆனால் அதனிடம் அதற்கேற்ற இயற்கை வானிலை இல்லை. அது மிகவும் குளிரான பிரதேசம். ஒரு சுற்று முத்து வளர்ப்பிற்கு, குறைந்தது இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் ஆகும், ஆனால் இங்கே ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை மட்டுமே ஆகிறது. எனவே இந்தியாவுக்கு இது சாதகமாக உள்ளது. நமது முத்துக்களின் தரமும் சிறப்பாக இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :