You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேட் பேங்க்: இந்திய வங்கிகளை சூழ்ந்திருக்கும் கடன் பிரச்னைக்கு அரசின் திட்டம் தீர்வாகுமா?
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்
1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளோடும், 2 லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு நிகரான டெபாசிட் பணத்தோடும், 100 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களோடும் இயங்கும் இந்திய வங்கித் துறையை காகிதங்களில் பார்த்தால் பிரமாதமாக இருக்கும்.
ஆனால் யதார்த்தத்தில், இந்திய வங்கிகள் சிக்கலில் இருக்கின்றன.
பல வங்கிகளில் பல்லாயிரம் கோடி வாரா கடன்கள் இருக்கின்றன. அதிலும் 60 சதவீத வாரா கடன்கள் அரசு வங்கிகளில்தான் இருக்கின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை ஐந்து வங்கிகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
வாரா கடன்களை வசூலிப்பது பாரம்பரியமாக மூன்றில் ஒரு பகுதி என குறைவாகத் தான் இருந்து வருகிறது. தற்போது நொடிப்பு நிலை சட்டங்கள் வந்த பின், கடன் வாங்கியோரின் சொத்துக்களை விற்று பணத்தை திரட்டுவதை அது அனுமதிப்பதால், 40 - 45 சதவீத அளவுக்கு கடன்கள் வசூலிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது.
தற்போது பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கடன்தாரர்கள், வரும் மாதங்களில் நொடித்துப் போகவும், அது இந்திய வங்கிகளின் வாரா கடன்களின் அளவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
2005 - 2009 வரையான காலத்தில் மட்டும், தத்தளித்துக் கொண்டிருந்த வங்கிகளைக் காப்பாற்ற, 35 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான பணம், வங்கி அமைப்புகளில் உட்செலுத்தப்பட்டது. ஆனால் அது பெரிய அளவில் உதவவில்லை.
2022ஆம் ஆண்டுக்குள் 15 - 58 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதியை, இந்தியாவில் தடுமாறிக் கொண்டிருக்கும் வங்கிகளுக்கு புதிய முதலீடுகளாக உட்செலுத்த வேண்டும் என கடந்த ஜூலை மாதம் ஃபிட்ச் என்கிற தரமதிப்பீட்டு நிறுவனம் கூறியது.
தற்போது அரசு நீண்ட காலமாக பேசிக் கொண்டிருந்த 'பேட் பேங்க்' எனப்படும் வாரா கடன்களை நிர்வகிக்கும் வங்கியை நிறுவ திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வங்கி இந்திய வங்கித் துறையில் இருக்கும் 27 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான வாரா கடன்களை குறைக்கவும், வணிக வங்கிகளின் நிதி நிலைகளிலிருந்து வாரா கடன்களை நீக்கவும் உதவும்.
இந்த 27 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது, இந்திய வணிக வங்கிகளில் வாரா கடன்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள 100 பில்லியன் அமெரிக்க டாலரில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே. இதன் விளைவாக கடன் கொடுப்பது குறைந்து வங்கித் துறை பாதிக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
ரிஸ்க் எடுக்க விரும்பாத வங்கிகள் கடன் கொடுக்க முன்வராததால், தனியார் துறையிலிருந்து வரும் முதலீடுகள் சரிந்துள்ளன.
மோசமான கடன்களை நிர்வகிக்கும் வங்கியானது, வணிக வங்கிகளிடமிருந்து கடன்களை ஒரு ஒப்புக் கொள்ளப்பட்ட விலையில் வாங்கும். அதன் பின், கடன் வாங்கியோர், கடன் வாங்கும் போது பிணையாக கொடுத்திருந்த சொத்துகள் உள்ளிட்டவற்றை விற்று கடனை வசூலிக்கும்.
இந்தியா மோசமான கடன் பிரச்னைகளை சந்திப்பதோ, இப்படி மோசமான கடன்களை நிர்வகிக்கும் வங்கியை அமைப்பதோ இது முதல்முறையல்ல. இப்படி கடந்த 20 ஆண்டுகளில் 28 தனியார் நிறுவனங்கள் இந்த வேலையை செய்தன. ஆனால் பெரிதாக அந்நிறுவனங்களால் கடன்களை வசூலிக்க முடியவில்லை.
இந்த முறை அரசு இரு நிறுவனங்களை அமைத்திருக்கிறது. அதில் ஒரு நிறுவனம் வாரா கடன்களை கையகப்படுத்தும், இது அரசுக்குச் சொந்தமானது. மற்றொரு நிறுவனம் கடன் சார் சொத்துக்களை விற்க முயலும், அதில் தனியாரும் ஒரு பகுதியாக இருக்கும்.
மோசமான கடன்களிலிருந்து வணிக வங்கிகள் எதிர்பார்க்கும் தொகைக்கும், உண்மையிலேயே யதார்த்தத்தில் வசூலிக்கும் தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு கொடுக்கும்.
இது கேட்க எளிதாக இருந்தாலும், யதார்த்தத்தில் அத்தனை எளிதல்ல.
முதலில் வங்கிகள் கடன் மீதான மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
"உதாரணத்துக்கு ஒரு நிறுவனத்துக்கு 20 வங்கிகள் கடன் கொடுத்திருக்கிறது என்றால், அவர்கள் அனைவரும் பல விஷயங்களில் ஒத்துப் போக வேண்டி இருக்கும். கடன்களின் இன்றைய மதிப்பு என்ன? கடன் வாங்கியவரின் சொத்துக்களின் இன்றைய மதிப்பு என்ன? நஷ்டத்துக்கு வங்கிகள் கொடுத்த கடனை விற்பது என்பது மிகப் பெரிய சவால்" என்கிறார் இக்ரா என்கிற தரமதிப்பீட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் அனில் குப்தா.
"பொதுவாக வங்கிகள் கடன் கொடுப்பதில் தேர்ந்தவர்கள், கடனை திருப்பி வசூலிப்பது மற்றும் மோசமான கடன்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அல்ல"
இந்த இடத்தில்தான் இரண்டாவது நிறுவனத்தின் பணி வருகிறது.
இந்நிறுவனம் தத்தளித்துக் கொண்டிருக்கும் மற்றும் செயல்படாத நிறுவனங்களை ஏலத்தில் எடுக்கும். ஆறு துறைசார் கடன் கணக்குகள்தான் சுமார் 80 சதவீதத்துக்கும் அதிக வாரா கடன்களைக் கொண்டுள்ளது. அக்கணக்குகள் இரும்பு மற்றும் ஸ்டீல், விமானப் போக்குவரத்து, சுரங்கம், சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு துறைகளைச் சார்ந்தவை.
நீண்ட கால அடிப்படையில், இந்தியா தனது வங்கித் துறையை தீவிரமாக சரி செய்ய வேண்டும். ஜிடிபி விகிதத்தில் இந்தியாவின் கடன் 60 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாலும், இந்தியாவின் வங்கிகள் உலகிலேயே மிக அதிகமாக செயல்படாத கடன்களைக் கொண்டுள்ளன.
2006 மற்றும் 2008 ஆண்டுகளுக்கு இடையில் கடன்கள் குவியத் தொடங்கின, அப்போது வளர்ச்சி மிதமாக இருந்தது மற்றும் கடன் பெறுவது எளிதாக இருந்தது.
2007 - 08 ஆம் ஆண்டில் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை, இந்தியாவை ஒப்பீட்டளவில் பாதிக்கவில்லை. முதலீடு செய்வதற்கான உற்சாகமும் பெரிதாக குறையவில்லை.
"நல்ல காலங்களில் மோசமான கடன்கள் விதைக்கப்படுகின்றன" என்று முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சி ரங்கராஜன் கூறுகிறார்.
இதை 'முரண்பாடான உற்சாகத்தின் உன்னதமான விஷயம்' என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக கடன் வளர்ச்சி இருக்கின்ற போதும், அதிகப்படியான பொருளாதார வளர்ச்சி, குறைவான பணவீக்கம், குறைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை ஆகியவை வங்கிகள் மற்றும் நிறுவனங்களை ரிஸ்க் எடுக்க வைத்தது என்கிறார் தமல் பந்தோபாத்யாய. இவர் 'பேண்டமோனிய: தி கிரேட் இந்தியன் பேங்கிங் ட்ராஜிடி' என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதீத நம்பிக்கையில் இருந்த வங்கியாளர்கள் பல கடன் கணக்குகளை முறையாக பரிசோதிக்கவில்லை. வங்கிகள் நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தன. செயற்கையான லாபத்தைக் காட்ட வங்கிகள் புதிய கடன்களைக் கொடுத்து, பழைய கடன்களின் வட்டியை வசூலித்துக் கொண்டிருந்தன.
"இந்தியாவின் க்ரோனி கேப்பிட்டலிஸ்ட்கள் (அரசாங்கத்தோடு நெருக்கமாக இருந்து பலன்களை அனுபவிக்கும் வியாபாரிகள்) வங்கிக் கடன்களை கடன்களாகவும், ஈக்விட்டி எனப்படும் முதலீடுகளாகவும் பயன்படுத்தி தங்கள் வியாபார திட்டங்களுக்கு பணம் திரட்டினர். முதலாளித்துவ அமைப்பில் வியாபாரிகள் முதலீடுகளைக் கொண்டுவர எதிர்பார்க்கப்படுவார்கள்" என்கிறார் தமல்.
வாரா கடன்களை நிர்வகிக்கும் வங்கி, இந்திய வங்கித் துறையில் இருக்கும் அமைப்பு சார் பிரசனைகளைத் தீர்க்கும் அருமருந்தாக இருக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.
அரசுசார் வங்கிகள் உண்மையிலேயே சுதந்திரமானவைகளாக வேண்டும். மத்திய ரிசர்வ் வங்கியின் மேம்பட்ட நெறிமுறைகள் இதற்கு உதவும். கடன்கொடுப்பதில் இன்னும் வெளிப்படைத்தன்மை தேவை.
"மோசமான கடன்களை நிர்வகிக்கும் வங்கி என்பது சரியான திசையை நோக்கி எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஓரடி" என்கிறார் அனில் குப்தா. ஆனால் அது எப்படி செயல்படும் என்பதை காலம் தான் கூறும் என்கிறார்.
பிற செய்திகள்:
- அவசரமாக நாடாளுமன்றம் செல்லும் ஆசையில் கட்சி தாவினாரா கன்னையா குமார்?
- RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன?
- இந்திய வழக்குகள்: மாநில அரசுகளை மத்திய அரசு விருப்பப்படி கலைக்க முடியாமல் போனது ஏன்?
- கஞ்சா கடத்தினாரா 'பிரபல' யூடியூபர்? 270 கிலோ மூட்டைகள் சிக்கியது எப்படி?
- புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தைக் கொண்டாடும் விமர்சகர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்