You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் - வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை
தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தைச் சார்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 40 வயதாகிறது.
இவர் தன்னுடைய மனைவி இறந்த நிலையில் தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். வெங்கேடசனின் மூத்த மகள் சென்னையில் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகள் அவலூர்பேட்டையில் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மர்மமான முறையில் கத்தியால் மார்பில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தததாகவும், அதைக் கண்ட அவரது இரண்டாவது மகள் அதிர்ச்சியுற்று கூச்சலிட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
அன்றுதான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது உடன் சென்று வந்திருந்தார் வெங்கடேசன்.
இதனையடுத்து அவலூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலால் இக்கொலை நடந்ததா அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என காவல்துறை விசாரணை செய்தது. பின்னர் கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலிசார் கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களை பிடித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தல் விரோதத்தால் கொலையா என்ற கோணத்தில் விசாரித்த நிலையில் பெற்ற மகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ள தந்தை முயற்சித்துள்ளார். இதனால் மகள் தன்னை தற்காத்துக்கொள்ளக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் எனக் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
என்ன நடந்தது?
இந்த வழக்கு குறித்து விவரம் கேட்டறிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது பேசிய அவர், "இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் தாயார் சுமார் 10 ஆண்டுகளுக்கு உயிரிழந்துவிட்டார். ஆகவே அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளை தந்தை மற்றும் தாய் வழிப்பாட்டி அரவணைப்பில் வளர்ந்தனர். இதற்கிடையில் பாட்டி வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய வெங்கடேசனின் இரண்டாவது மகளுக்கு கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. அவலூர்பேட்டை அருகே உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி பள்ளிக்கு செல்வது சுலபம் என்பதால் கடந்த இரண்டு மாதங்களாக தந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்."
"சிறுமியின் தந்தை வெங்கடேசன் வீட்டில் தனியாக இருக்கும் போது வெளி பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாக இருந்துள்ளார்."
"இந்த சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 20) அதிக மது போதையிலிருந்த சிறுமியின் தந்தை வெங்கடேசன், மகளிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார். குறிப்பாக கடந்த திங்கட்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் அதிக மது போதையில் வீட்டில் படுத்துகிடந்துள்ளார்."
"அன்று மாலை 5.30 மணியளவில் பள்ளி முடிவடைந்து வீட்டிற்கு வந்த மகள் அருகே உள்ள பெண் வீட்டில் தண்ணீர் குழாய் இருப்பதால் அங்கே துணி துவைக்க சென்றுள்ளார். பிறகு வேலைகளை முடித்துவிட்டு சுமார் 6.15 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது தந்தை படுத்திருப்பதை பார்த்துவிட்டு, சாயங்காலம் விளக்கு வைக்க வேண்டிய நேரம் என்பதால் தந்தையை எழுப்பியுள்ளார்."
"அப்போது எழுந்த தந்தை மகளிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார். அதை சுதாரித்துக்கொண்டு சிறுமி தந்தையை தள்ளிவிடுகிறார். பின்னர் மகளிடம் வலுக்கட்டாயமாக மீண்டும் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். அப்போது செய்வதறியாது அருகே இருந்த காய்கறி அறியும் பிளாஸ்டிக் கைப்பிடி கொண்டு கத்தியை எடுத்து தனது இரு கரங்களால் தந்தையைக் குத்தியுள்ளார்,"
இதையடுத்து சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அருகே உள்ள பெண் வீட்டிற்கு சென்ற சிறுமி அங்கேயே இருந்துள்ளார். அங்கு அண்டை வீட்டுப் பெண்ணின் இரண்டாவது மகளுக்கு பசி எடுக்கவே அவர்களது வீட்டில் உணவு செய்ய காலதாமதம் ஆகும் என்பதால், அந்த குழந்தைக்கு உணவு கொடுக்க சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தந்தை கொலை செய்யப்படிருப்பதாக கூறி கூச்சலிட்டுள்ளார்," என்றார்.
"பிறகு காவல் துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு கை ரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் வெங்கடேசனின் மகள் மீது சந்தேகம் எழுந்தது. அதையடுத்து விசாரணை செய்ததில், வீட்டில் தனியாக இருந்தபோது உதவிக்கு யாருமில்லை. தந்தை பலவந்தமாகத் தவறாக நடக்க முயன்றதால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறி அந்த சிறுமி அழுதார்.
உடற்கூறாய்வு அறிக்கையில் இறந்தவரின் நெஞ்சு பகுதியில் சரியாக இதயத்திற்கு நேராக 11 இன்ச் வரை கத்தி உள்ள சென்று, பின்பக்கம் உள்ள முதுகு தண்டுவடத்தில் 2 செ.மீ வரை கத்தி சென்றது தெரியவந்தது," என இளங்கோவன் தெரிவித்தார்.
சிறுமிக்கு அதிக அழுத்தத்திற்கு ஆளானதால் இவ்வாறு நடந்துள்ளதாக செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கூறுகிறார்.
"இதையடுத்து தந்தையிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள மகளே கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கைப் பொறுத்தவரை இந்திய தண்டனைச் சட்டத்தின் 100வது பிரிவின் கீழ் வருவதால் மகள் தன்னை காப்பாற்றிக் கொள்ள தற்காப்பிற்காக இதனை செய்துள்ளார். ஆகவே அந்த சிறுமியை கைது செய்யவில்லை. குறிப்பாக தனது உயிருக்கும், கற்பிக்கும், மானத்திற்கும் பங்கம் ஏற்படும் வகையில் மானபங்கம் செய்பவருக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளச் சட்டத்தில் இடமுள்ளது என்று இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சையிளித்து மற்றும் உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதேபோன்ற வழக்கு முன்னதாக மதுரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக விழுப்புரத்தில் நடந்துள்ளது," என்று செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்டம் விதிப்படி காவல் துறையினர் சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
- உ.பி. இந்து சாமியார் தற்கொலை வழக்கில் ஸ்டைல் ஐகான் சீடர் கைது: யார் இவர்?
- ஆப்கன் பெண்களுக்கு தாலிபன்கள் கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது - இம்ரான் கான்
- மகாத்மா காந்தி 100 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் மேலாடையை துறந்தது ஏன்?
- நிலவில் மனித இனம் காணா இடத்துக்குச் செல்ல தயாராகும் வைபர் ரோவர்
- PBKS vs RR: கையில் 8 விக்கெட்டுகள் இருந்தும் படுதோல்வி அடைந்த பஞ்சாப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்