You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்: போட்டியிட அனுமதி கிடைத்ததின் பின்னணி என்ன?
- எழுதியவர், ச.ஆனந்தப் பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் 15-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி செப்டம்பர் 22 அன்று நிறைவடைகிறது.
களத்தில் இறங்கும் விஜய் மக்கள் மன்றம்
இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விருப்பமுள்ள வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடவும் நடிகர் விஜய் பெயர் மற்றும் மன்ற கொடியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றதாக மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் விஜய் அன்பன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள்?
இது குறித்து மேலும் தகவல்களை விஜய் அன்பன் பகிர்ந்து கொண்டார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 20 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், செல்வாக்கும் உள்ளதால் அங்கு நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். நிர்வாகிகள் விருப்பத்தை கேட்டறிந்த நடிகர் விஜய் நீண்ட யோசனைக்கு பிறகே இதற்கு அனுமதி கொடுத்தாராம்.
அனுமதி கொடுத்ததன் பின்னணி என்ன?
மன்ற நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நடிகர் விஜய் அனுமதி கொடுத்ததன் பின்னணி என்ன என்பது குறித்ததும் விஜய் அன்பன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். "விஜய் ரசிகர்களும் சரி, மன்ற நிர்வாகிகளும் சரி அரசியலில் ஆர்வம் உடையவர்கள்தான். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவருடைய விருப்பமும். ஆனால், அவர் இன்னும் வரவில்லை. அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் அவரது பெயரை சொல்லி அரசியலில் ஈடுபட வேண்டும் என விருப்பம் தெரிவித்தபோது சம்மதித்தார்" என்கிறார்.
மேலும், தனது பெயரையும், மக்கள் மன்ற கொடியையும் பயனடுத்திக்கொள்ளவும் நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பனையூர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
சுயேச்சை முடிவு ஏன்?
மேலும், உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சுயேட்சையாக களம் இறங்குவது ஏன் என்பது குறித்து விஜய் அன்பன் விளக்கினார். "இதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தங்களது சுய லாபத்திற்காக நடிகர் விஜய் பெயர் சிலரால் தவறாக பயன்படுத்தப்பட்டது.
நம்முடைய வேட்பாளர் நிற்பது என்பது வேறு. மற்ற கட்சியை சேர்ந்தவர்களுக்கு நாம் ஆதரவு தருவது என்பது வேறு. பிறரிடம் பணத்தை வாங்கி கொண்டு விஜய் அவர்களது பெயரை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது. அதற்காகதான் முன்பு அதுபோன்று அறிக்கை விடப்பட்டது. வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு என்பது போன்ற பிம்பம் வந்து விடக்கூடாது என்பதற்காகதான் சுயேட்சை முடிவும்.
தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் தலைவர், கவுன்சிலர், வார்டு மெம்பர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடியாக போட்டியிடுகிறார்கள். இது முழுக்க முழுக்க ரசிகர்கள் விருப்பத்திற்கு நடிகர் விஜய் கொடுத்துள்ள அனுமதிதான். நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்கிறார் நம்பிக்கையாக.
இயக்குனர் எஸ்.ஏ.சி. மீதான வழக்கு
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் ரசிகர்களை இணைத்து அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சி தொடங்கப்பட உள்ளதாக அறிவித்தார். மேலும் கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார்.
இதற்கு கடுமையான ஆட்சேபணை தெரிவித்த நடிகர் விஜய். தனது பெயரில் கட்சி தொடங்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி இயக்குனர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா உள்ளிட்ட பதினோரு பேர் மீது சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அவர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணைதான் இந்த மாதம் 27ம் நடைபெற உள்ளது.
இதற்கும், உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட எடுத்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் விஜய் அன்பன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? சர்வதேச அரங்கில் இனி என்ன நடக்கும்?
- பதவி விலகிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்: "மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன்"
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்