You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவிட் விஷயத்தில் தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது? புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
தமிழ்நாடு ஆளுநராக சனிக்கிழமை பதவியேற்ற ஆர்.என்.ரவி கோவிட் விஷயத்தை தமிழ்நாடு எப்படி கையாண்டது என்பது குறித்து கருத்துத் தெரிவித்தார்.
பதவியேற்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் வரையறைக்குள் செயல்படுவேன்," என்று கூறினார்.
"உலகின் மிகப் பழமையான காலாச்சாரங்களில் ஒன்றைச் சேர்ந்த மக்களுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நான் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன். நான் சிறிதுகாலம் பத்திரிகையாளராக இருந்திருக்கிறேன்.
நான் இப்போதுதான் பதவியேற்றிருக்கிறேன். இப்போது இங்கே மக்களால் தேர்வுசெ்யயப்பட்ட ஆட்சி நடக்கிறது. அரசை நடத்துவது அரசாங்கம். ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கும் அளவுக்குள்தான் செயல்பட முடியும். அதனை மனதில் வைத்து செயல்படுவேன்.
கோவிட் விஷயத்தி்ல தமிழ்நாடு அரசு சிறப்பாகத்தான் செயல்படுகிறது என நம்புகிறேன். கோவிட்டை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். அரசு கோவிட் நிலையை புரிந்துகொண்டு செயல்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது" என்று தெரிவித்தார்.
நீங்கள் முன்னதாக உளவுத் துறையில் இருந்திருக்கிறீர்கள் அது இந்தப் பணியில் உதவுமா எனக் கேட்டபோது, "நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணியைச் செய்கிறோம். அந்தந்தக் காலகட்டத்தில் அதைச் செய்வோம்" என்று பதிலளித்தார்.
பதவியேற்பு
முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மத்திய அமைச்சர் எல். முருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
யார் இந்த ஆர்.என்.ரவி?
பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.
பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார்.
இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார். அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார்.
உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவல். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது. 2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பிற செய்திகள்:
- யானை தந்தம், தோல், கால், எலும்பு எல்லாவற்றுக்கும் தனி ரேட்: உள்ளூர் முதல் சர்வதேச நெட்வொர்க் வரை
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்