You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காற்று மாசு மிகுந்த நகரங்களில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஆபத்து அதிகம்: டெல்லிக்கு அபாய மணி அடிக்கும் ஆய்வு
டெல்லி போன்ற காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களில் வசிக்க நேரும் குழந்தைகள் உடற்பருமன் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும் என்றும், அவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்றும் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
உடற் பருமன் மிகுந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கு 79 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தீங்கு விளைவிக்கும் காற்று மாசுபாடு பிரச்சனையை எதிர்கொள்ளும் இந்தியத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு + உடற்பருமன் என்ற இந்தக் காரணிகளின் சேர்க்கை அதிகம் இருக்கிறது.
குழந்தைகளுக்கு உடற்பருமன் பிரச்சனை ஏற்பட பல காரணிகள் உண்டு. ஆனால், "காற்று மாசுபாடு இதற்கான ஒரு முக்கியக் காரணி", என்கிறது அந்த ஆய்வு.
காற்றுமாசுபாடு, பருமனான குழந்தைகள், ஆஸ்துமா ஆகிய இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும் முதல் இந்திய ஆராய்ச்சி இது.
நீண்ட காலத்துக்கு மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் நிலையில் சுவாச நோய்கள் தோன்றும், குறிப்பாக இதில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.
டெல்லி - தென்னிந்திய நகர குழந்தைகள்
லங் கேர் ஃபௌன்டேஷன் மற்றும் பல்மோகேர் ரிசர்ச் அன் எஜுகேஷன் ஆகிய இரு அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் காற்று மாசுபாடு மிகுந்த டெல்லி மற்றும் ஒப்பீட்டளவில் சுத்தமான காற்று உள்ள கோட்டயம், மைசூர் நகரங்கள் ஆகியவற்றில் உள்ள 12 பள்ளிகளைச் சேர்ந்த 3,157 குழந்தைகளை பரிசோதித்தனர்.
இதில், டெல்லி குழந்தைகளில் 39.8 சதவீதம் பேர் அளவுக்கு மீறிய எடையுடன் காணப்பட்டனர். கோட்டயம், மைசூர் நகரக் குழந்தைகளில் 16.4 சதவீதம் பேர் மட்டுமே அளவுக்கு மீறிய எடையுடன் இருந்தனர்.
பி.எம்.2.5 என்று கூறப்படும் ஆபத்தான காற்று மாசு துகள்கள் எந்த அளவு இந்த நகரங்களில் இருக்கிறதோ அந்த அளவோடு இந்த உடற் பருமன் விகிதங்கள் ஒத்துப் போகின்றன.
உலகில் மிக மோசமாக மாசுபட்ட நகரங்களில் ஒன்று டெல்லி.
உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கும் அளவைப் போல 9 மடங்கு அதிகமான காற்றுமாசுபாடு ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் ஏற்படுகிறது. பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பது, தீபாவளி காலத்தில் பட்டாசுகளைக் கொளுத்துவது ஆகியவை இந்த அதிகபட்ச காற்று மாசுபாட்டுக்கு காரணமாக சொல்லப்படுகின்றன.
கோட்டயம், மைசூர் குழந்தைகளோடு ஒப்பிடுகையில், டெல்லியில் பள்ளிக்குழந்தைகள் மத்தியில் மிக அதிக அளவில் ஆஸ்துமா, ஒவ்வாமை அறிகுறிகள் தென்படுவதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கண்ணில் அரிப்பு, நீர் வடிவது, இறுமல் போன்றவை அந்த அறிகுறிகளில் அடக்கம்.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட குழந்தைகளிடம் சுவாசப் பரிசோதனை நடத்தியதில் டெல்லி குழந்தைகளில் 29.3 சதவீதம் பேரிடம் மூக்கடைப்பு அல்லது ஆஸ்துமா காணப்பட்டது. அதே நேரம், கோட்டயம், மைசூர் குழந்தைகள் மத்தியில் 22.6 சதவீதம் பேரிடமே இத்தகைய பிரச்சனைகள் காணப்பட்டன.
ஆஸ்துமா காரணிகள் தெற்கில் அதிகம் இருந்தாலும்...
ஆஸ்துமாவுக்கு கண்டறியப்பட்ட இரண்டு முக்கியக் காரணிகளான, குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா இருப்பது, குடும்பத்தில் யாராவது புகைப் பிடிப்பது ஆகிய இரண்டுமே கோட்டயம், மைசூர் நகரங்களில் அதிகம் என்றபோதும் டெல்லியில்தான் அதிக குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டன என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
இந்தப் பிரச்சனை குறித்து நம் கண்களைத் திறக்கும் ஆய்வு இது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட லங் கேர் ஃபௌன்டேஷன் நிறுவனர் அறங்காவலர் டாக்டர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.
மூன்று காரணிகளை இணைக்கும் சங்கிலி - காற்று மாசு
"டெல்லி குழந்தைகள் மத்தியில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக சுவாசக் கோளாறு மற்றும் ஒவ்வாமை, ஸ்பைரோமெட்ரி மூலம் கண்டறியப்பட்ட ஆஸ்துமா, உடற்பருமன் ஆகியவை இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
" இந்த மூன்று பிரச்சனைகளையும் இணைக்கும் சங்கிலி காற்று மாசுபாடு," என்றார் அவர்.
"நமது எதிர்காலக் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக, டெல்லியிலும் மற்ற நகரங்களிலும் உள்ள காற்று மாசுபாடு சிக்கலை முறைப்படி சரி செய்தே ஆகவேண்டிய நேரம் வந்துவிட்டது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்