You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கே.டி.ராகவன் வீடியோ முதல் கொடநாடு கொலை வரை - சீமான் சொன்னது என்ன?
`கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், `நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, `எனது வீடியோவை பார்த்து ரசியுங்கள்' என ராகவன் சொன்னாரா?' எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாயோன் பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ``கே.டி.ராகவனின் அனுமதியில்லாமல் தனிப்பட்ட இடங்களில் அவரை வீடியோ எடுப்பது என்பது சமூக அவலம். உலகில் நடக்காத ஒன்றைச் செய்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சட்டசபையில் ஆபாச காட்சிகளைப் பார்த்துள்ளனர். அவர் தனது தனிப்பட்ட அறையில் செய்த காட்சிகளை வெளியில் விடுவதன் மூலம், கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதை பதிவு செய்து வெளியிடுவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்த காணொளியை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும். உலகின் யாரும் செய்யாத ஒன்றையா அவர் செய்துவிட்டார். சட்டமன்றத்திலேயே ஆபாசப் படம் பார்த்துள்ள சம்பவங்களும் வெளிவந்துள்ளன" என்றார்.
தொடர்ந்து பேசும்போது, ``நாட்டில் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு தனியாருக்கு குத்தகை விடப்போவதாக அறிவித்துள்ளனர். 100 லட்சம் கோடிக்கு சொத்து இருக்கும்போது 6 லட்சம் கோடிக்கு விட வேண்டிய அவசியம் என்ன?
உச்ச நீதிமன்ற நீதியரசர் ரமணா பேசும்போது, `எந்த விவாதமுமின்றி சட்டங்களை இயற்றிக் கொண்டே போகின்றனர்' என்கிறார். அதுதான் நாம் பேச வேண்டிய பிரச்னை. திருச்சி சிவா பேசும்போதும், `20 ஆண்டுகளாக பார்க்கிறேன். எந்த விவாதமும் இல்லாமல் 36 சட்டங்களை இயற்றியுள்ளனர்' என்கிறார். இது சர்வாதிகாரம் இல்லை, கொடுங்கோன்மை. இதையெல்லாம் பற்றிப் பேசாமல் என்னுடைய வீடியோவை பார்த்து ரசியுங்கள் என ராகவன் சொன்னாரா?" எனக் கொதித்தார்.
மேலும், ``லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சியை தனியாருக்கு கொடுக்க உள்ளனர். தனியார் சிறப்பாக நடத்தும் என்றால் அரசு எதற்கு? அரசைவிட தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் சிறப்பாக செய்யும் என்றால் இவர்களின் பணி என்ன? கமுதியில் நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதானி குழுமத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டது. அங்கு வாயில் காவலர் வேலைகூட அம்மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மின்துறையில் ஒரு லட்சம் கோடி இழப்பு உள்ளது. ஆனால், இவர்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை 7 ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதாக அதானியிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்" என்றார்.
சட்டசபையில் ஓ.பி.எஸ் பாடிய பாடல் குறித்து சீமானிடம் கேட்டபோது, ``அதற்கு நான் என்ன சொல்ல முடியும். அவர் தனது நிலைமையை கவிதையாக விளக்குகிறார். அவ்வளவுதான்" என்றார். அடுத்ததாக, குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, ``குடிசை மாற்று வாரிய வீடுகள் தொட்டாலே உதிர்கின்றன என்றால் ஏன் தொட வேண்டும். குடிசையில் படுத்தால் உயிரோடு எழுந்திருப்போம் என்பது நிச்சயம் இல்லை. இந்த வீடுகளில் எல்லாம் ஏழாவது மாடியில் படுத்திருப்பவனின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
மேம்பாலம் கட்டிக் கொண்டு வரும்போதே இடிந்து விழுகிறது. கேட்டால், `மணலில் சிக்கல் உள்ளது' என்கிறார்கள். இவர்கள் அடித்த கொள்ளை அப்படி. 5 லட்சம் கோடி கடன் என்கிறார்கள். இவர்களின் வீடுகளில் எத்தனை லட்சம் கோடிகள் உள்ளன. ஆள்பவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் வைத்துள்ள கோடிகளை எடுத்தால் நமது மொத்த கடனை அடைத்துவிட்டு வரியில்லாத ஆட்சியை நடத்தலாம்" என்றார்.
தொடர்ந்து, கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து கேள்வியெழுப்பியபோது, `` விசாரணை நடக்கும்போது இதைப் பற்றியெல்லாம் நாம் பேச முடியாது. முடிவு வரட்டும். பிறகு பேசுவோம்" என்றார். அடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்துப் பேசிய சீமான், ``பள்ளிகள் திறப்பதை அச்சத்தோடு கவனிக்கிறேன். கேரளாவில் தொற்று எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இரவு 10 மணி முதல் 6 மணி வரையில் ஊரடங்கு என்கிறார்கள். பத்து மணிக்குத்தான் அனைவரும் இயல்பாக தூங்கப் போய் விடுவார்களே. பிறகு எதற்கு ஊரடங்கு?
கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றைத் திறந்தால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை. கேரளாவில் ஓணம் பண்டிகையால் தொற்று அதிகரித்தது. நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்றார் சீமான்.
காங்கிரஸ் எம்.பி விமர்சனம்
இந்த நிலையில், பாஜகவின் கே.டி. ராகவன் செயல்பாடு தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள கருத்தை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.
கே.டி. ராகவன் செயலை நியாயப்படுத்திப் பேசுவதன் மூலம் பாஜகவின் பி அணி தான் என்பதை சீமான் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று ஜோதிமணி கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா: அமெரிக்காவுக்கு புதிய தலைவலி
- குழந்தையை இழுத்துச் சென்ற மலைச் சிங்கம்; போராடி மீட்ட தாய்
- அவனி லெகரா: இந்திய பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம் வென்ற பெண் - 8 முக்கிய தகவல்கள்
- ரத்த தானம் செய்து 88 உயிர்களைக் காப்பாற்றிய நாய்க்கு இனி ஓய்வு
- இஸ்லாமியரை மிரட்டி 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கமிட வைத்த இருவர் ம.பி-யில் கைது
- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா திடீர் தாக்குதல் - விரிவான தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்