கொரோனா: பள்ளிகளை திறக்க அரசு மறந்த விஷயங்களை எச்சரிக்கும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. `பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக அறிவியல்பூர்வமாக அரசு ஆலோசனை நடத்தவில்லை' என்கின்றனர் மருத்துவர்கள். பள்ளிகளைத் திறப்பதால் என்ன சிக்கல்?
கொரோனா தொற்றுப் பரவலால் தமிழ்நாட்டில் கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் இல்லாமல் வீட்டிலேயே பாடம் நடத்தப்படுவதால் பெற்றோருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தவிர, `மாணவர்களின் கற்றல் திறனும் பெரிதாக மேம்படவில்லை' என கல்வியாளர்கள் கூறி வந்தனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பதவியேற்றவுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தவும் பள்ளிகளைத் திறக்கவும் ஆர்வம் காட்டியது.
ஆனால், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் பிளஸ் 2 மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
இதனால், ` பொதுத்தேர்வு நடத்தப்பட்டிருந்தால்கூட இவ்வளவு அதிகப்படியான மதிப்பெண் வந்திருக்காது' என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்திருந்தது.

பட மூலாதாரம், M.K. STALIN
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வரையில் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். முடிவில், பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டார்.
பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images
அதில், `அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகளை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுழற்சி முறையில் ஒரேநேரத்தில் 50 சதவிகித மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பள்ளி நிர்வாகத்தினருடன் இணைந்து செயல்படுமாறு மருத்துவப் பணிகளின் துணை இயக்குநர்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்படக் கூடிய மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது. வைட்டமின் மாத்திரைகளையும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளையும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டும் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்களும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களும் கண்காணிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, `வகுப்பறைகளில் ஆறு அடி இடைவெளிவிட்டு ஒவ்வொரு மாணவரும் அமர வைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகம், ஆசிரியர்கள் ஓய்வு அறை என அனைத்து இடங்களிலும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் காலநிலையைப் பொறுத்து திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தலாம். பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். அனைத்து கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கையின்போது பெற்றோர் அல்லது குழந்தைகளின் காப்பாளர்கள் மட்டும் வந்தால் போதும். மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வருவதற்கு அனுமதிக்கக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல்ரீதியாக ஆராயவில்லை

பட மூலாதாரம், Getty Images
``பள்ளிகளைத் திறப்பதில் அறிவியல்ரீதியான நடைமுறைகளை தமிழ்நாடு பின்பற்றியிருக்க வேண்டும்," என்கிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தை நடத்தி வரும் மருத்துவர் கல்பாக்கம் புகழேந்தி.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` பள்ளிகளைத் திறப்பதன் மூலம் பாதிப்பு குறைவாகவும் பலன்கள் அதிகமாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாகப் பள்ளிகளைத் திறப்பதற்கு பதிலாக கள நிலவரத்தைக் கணக்கில் கொண்டு மாவட்ட அளவில் குறிப்பிட்ட கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை தேர்வு செய்து திறக்க வேண்டும். காரணம், நோய் எதிர்ப்பு புரதம் (Ig G) அதிகமுள்ள இடங்களில் வகுப்பறைகளைத் திறந்த பிறகு அங்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து 2 அல்லது நான்கு வாரங்கள் கழித்து அனைத்துப் பள்ளிகளையும் திறப்பதே சரியானதாக இருக்கும்" என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியாது. காரணம், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதில், 5 முதல் 10 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்புக்கான வாய்ப்பு குறைவு என்பதால் தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதே நல்லது. இங்கிலாந்து நாட்டில் 141 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னரும் 1 மாதம் கழிந்த பின்னரும் ரத்தத்தில் உள்ள புரதத்தை அளந்து பார்த்ததில் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் 0.27 சதவிகிதம் என நிலையாக இருந்துள்ளது. எனவே, தொடக்கப்பள்ளிகளை முதலில் திறப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்ததாக வைரலாஜி நிபுணர் ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.
6 முதல் 9 வயது ஆச்சர்யம்
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு முதலாகவும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பின்னரும் திறக்கப்பட உள்ளது. ஆனால், ஆரம்ப பள்ளிகளுக்கு முதலிலும் மேல் வகுப்புகளை பின்னரும் திறப்பதே அறிவியல்ரீதியாக நன்மை பயக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைவர் பல்ராம் பார்கவா, மருத்துவ நிபுணர் சந்திரகாந்த் லகாரியா போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
காரணம், இளவயதினரைக் காட்டிலும் குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவு என்றும் 6 முதல் 9 வயது வரையில் உள்ளவர்களில் 57 சதவிகிதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு புரதம் உள்ளதுதான். குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உட்புகும் (ACE2 receptor) எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இளவயதினரைக் காட்டிலும் பாதிப்பும் குறைவாக இருக்கும். தவிர, மேல்வகுப்பு மாணவர்களை கட்டுப்படுத்துவது கடினம். எனவே, ஆரம்ப பள்ளிகளை முதலில் திறந்த பிறகு அந்த அனுபவத்தின்படி மேல் வகுப்புகளை திறப்பதே சிறந்தது" என்கிறார்.
சிக்கல் யாருக்கு?

பட மூலாதாரம், JAYAPRAKASH GANDHI FB
``தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதே நல்லது என்பது சரியானதா?" என மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` மருத்துவர்கள் சொல்வது சரியான ஒன்றுதான். அதேநேரம், தினசரி கொரோனா பாதிப்புகளைக் கணக்கிடும்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பாதிப்பு என்பது குறைவாகத்தான் உள்ளது. பள்ளி ஆசிரியர்கள், இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டு முடித்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தவிர, ஒரே நேரத்தில் அனைவரையும் பள்ளிக்கு அழைக்கப் போவதில்லை. சுழற்சி முறையில்தான் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வரவுள்ளனர். இதில், விடுதி மாணவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். அவர்களால் வீடுகளுக்குச் சென்று வர முடியாது. விடுதி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளையே நடத்துவதா என்பதில் குழப்பம் உள்ளது. இதற்கான விரிவான நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். மேலும், மாணவர்களும் வகுப்பறைகளுக்கு வரவேண்டிய நிலையை உணர்ந்துவிட்டனர். அவர்களால் ஆன்லைனில் கவனம் செலுத்திப் படிப்பதில் சிரமங்கள் உள்ளன. நகர்ப்புறங்களில் இணையத்தள வசதிகள் நன்றாக உள்ளன. கிராமப்புறங்களில் அதற்கான வசதிகள் மிகவும் குறைவு. எனவே, தினசரி வகுப்புகளை நடத்துவதே சிறந்தது" என்கிறார்.
அரசின் முடிவு சரியானதா?

பட மூலாதாரம், DR. KULANDAISWAMY
``அறிவியல்பூர்வமாக அரசு முடிவெடுக்கவில்லை என்கிறார்களே?" என தமிழ்நாடு அரசின் கோவிட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநருமான குழந்தைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அரசின் முடிவு சரியானது. கோவிட் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியமாகிறது. அரசுப் பள்ளிகள் காற்றோட்டமான வசதியுடன் உள்ளன. இதில், சுழற்சி முறையில் மாணவர்கள் வகுப்பறைக்கு வர வேண்டும் எனக் கூறியிருப்பதால் 50 சதவிகிதம் பேர்தான் பள்ளிக்கு வருவார்கள்.
ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுள்ளனர். மாணவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதனால், பள்ளிகளைத் திறப்பதால் எந்தவித சிக்கலும் இல்லை. அதேநேரம், சிறப்புக் குழந்தைகள், நீரழிவு பாதிப்பு என தொற்று பாதிக்கக் கூடிய குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் காலம் வரையில் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்" என்கிறார்.
``இளம் வயதில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகப்படியாக உள்ளது. 40 வயது வரையில் பெரிதான பாதிப்புகள் வருவதில்லை. தற்போதுள்ள சூழலில் யாருக்கு வகுப்பறைகளைத் திறக்க வேண்டும் என்பது முக்கியமானது. 9 முதல் 12 ஆம் வகுப்பு, கல்லூரி இறுதியாண்டு ஆகியவற்றுக்கு வகுப்புகளைத் திறப்பது அவசியமான ஒன்று. முதுகலை மாணவர்களில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பறைகளைத் திறக்க வேண்டும். எவ்வளவு நாள்களாக நம்மால் வகுப்பறைகளைத் திறக்காமல் இருக்க முடியும்? தற்போது கொரோனா பாதிப்புகளும் குறைவாக உள்ளன.
தடுப்பூசி செலுத்தும் பணியும் சென்று கொண்டிருப்பதால் இயல்பு நிலைக்குத் திரும்புவதே சரியானது. பள்ளிகளைத் திறக்காமல் இருப்பதால் குழந்தைகளும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டதால் குழந்தைகளும் வீட்டிலேயே இருப்பதில்லை. அவர்களை துணிக்கடை, நகைக்கடை என அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் இருப்பதாலேயே வைரஸ் தொற்றில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டதாகக் கூற முடியுமா? எனவே, பள்ளிகளைத் திறப்பதில் தவறில்லை" என்கிறார் குழந்தைசாமி.
பிற செய்திகள்:
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
- பாலியல் காணொளி சர்ச்சை; கட்சிப் பதவியில் இருந்து விலகினார் கே.டி. ராகவன்
- அதிகமாக சாப்பிட தோன்றுகிறதா? மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்
- 'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












