You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி: பள்ளி, கல்லூரி பற்றிய அறிவிப்பு என்ன? பிற கொரோனா ஊரடங்கு தளர்வுகள் என்ன?
50 சதவீத பார்வையாளர்களுடன் தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. மேலும், கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தற்போது தமிழ்நாட்டில் அமலில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளுக்கான காலம் திங்கள் கிழமை காலை ஆறு மணியோடு முடிவடையும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தின் முடிவில் பல்வேறு தளர்வுகளுடன் சில கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் ஆறாம் தேதிவரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
அதன்படி, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மதிய உணவுத் திட்டமும் செயல்படுத்தப்படும். இந்த வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், 15ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளும் செயல்பட அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல அனைத்துக் கல்லூரிகளிலும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல பட்டய படிப்புகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்கப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர். அங்கு கடை வைத்திருப்பவர்கள் தடுப்பூசிகள் போட்டிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. மேலும், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவையும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கடைகளும் இரவு 9 மணிவரையே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி பத்து மணிவரை கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்கள் சத்துணவு வழங்குவதற்காக செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திறந்திருக்க அனுமதிக்கப்படும். பணியாளர்கள் தடுப்பூசி போட்டிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். தனியார் மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொதுப் பேருந்து வசதிகள் துவங்கப்படும்.
நீச்சல் குளங்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படலாம். பயிற்சியாளர்களும் 18 வயதுக்கு மேற்பட்ட வீரர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளின் மதுபானக் கூடங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர பிற கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்