எடப்பாடி பழனிசாமி: "கொடநாடு கொலையில் என்னை சேர்க்க சதி" - சட்டப்பேரவையில் இன்று நடந்தது என்ன?

கொடநாடு கொலை விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்த சசி நடப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவினர் இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலையில் கூடியதும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசத் தொடங்கினார். ஆனால், இதற்கு சபாநாயகர் அப்பாவு ஒப்புதல் தரவில்லை.

இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பதாகைகளை ஏந்தி அ.தி.மு.கவினர் கோஷங்களை எழுப்பி வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பாக அமர்ந்து கோஷங்களையும் எழுப்பினர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், "மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல், தன்னுடைய அதிகார பலத்தால் எதிர்க்கட்சிகளை மீது பொய் வழக்குப் போட்டு நசுக்கும் கொள்கையை தி.மு.க. கையில் எடுத்திருக்கிறது.

தி.மு.கவின் அராஜகத்தைக் கண்டிக்கும்வகையில் எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுத்தார். அவருக்கு வாய்ப்புத் தரவில்லை, தொடர்ந்து ஏதாவது ஒரு குற்றச்சாட்டை, பொய் வழக்கைக் கொண்டுவந்து எங்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் தி.மு.க. ஈடுபட்டிருக்கிறது.

நேற்றும் இன்றும் அந்த செயல் துரிதமாக நடக்கிறது. எப்படியாவது பொய் வழக்குகளைப் போட்டு, அ.தி.மு.கவை நசுக்க முயல்கிறார்கள். எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். வெற்றியும் பெறுவோம். இன்றும் நாளையும் சட்டமன்ற கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும்" எனத் தெரிவித்தார்.

சயனிடம் வாக்குமூலம்

அதற்கடுத்துப் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கொடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்காக தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆஜராவதாக குற்றம்சாட்டினார். "ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுப்பார். ஜெயலலிதா தங்கும் இல்லத்தில் சயன் உள்ளிட்டவர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தனர். தடுத்த காவலாளி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்திருக்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வழக்கு முடியும் தருவாயில் உள்ள சூழலில் தி.மு.க. அரசு, சயனை வரவழைத்து அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் என்னையும் கழக பொறுப்பாளர்களையும் சிலரையும் சேர்த்திருப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் ஏற்கனவே புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கு 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. அரசு, அ.தி.மு.க. தலைவர்கள் மீது வழக்குகளைப் போட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுத்தவர்கள் தி.மு.க.வினர். குற்றவாளிகளுக்காக தி.மு.க. வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜரானார். ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது குற்றவாளிகளுக்கு ஆதரவாக தி.மு.கவினர் வழக்கு நடத்தினர். உயர்நீதிமன்ரம் சீக்கிரம் வழக்கை முடிக்க காலக்கெடு விதித்துள்ளது.

டிராபிக் ராமசாமி வழக்கு

டிராபிக் ராமசாமி உயிரோடு இருந்தபோது அவர் தி.மு.க. தூண்டுதலின் பேரில் இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கொடநாடு குற்றவாளிகளுக்காக ஆஜரானவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர். சிஆர்பிசி 313 பிரிவின் கீழ் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பிறகு, குற்றவாளிகளிடம் கருத்துகளைக் கேட்டபோது சயன் எதையும் புதிதாக சொல்லவில்லை. மறுவிசாரணை கோரவில்லை. அப்படியிருக்கும்போது தி.மு.க. வழக்கறிஞர்கள் மறுவிசாரணை வேண்டுமென கோரினார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.

இதையெல்லாம் மறைத்து, ஆட்சி அதிகாரித்தில் உள்ள ஸ்டாலின் அரசு என் மீது வீண் பழியை சுமத்தி, பொய் வழக்கை ஜோடித்து பரப்புகிறார்கள்" என இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட விளக்கத்தை அளித்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

'தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம்'

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "எதிர்கட்சித் தலைவர், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போல ஒரு பிரச்னையை எழுப்பியிருக்கிறார். இங்கிருந்து வெளிநடப்பும் செய்திருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தைப் பொருத்தவரை தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் அரசு நிறைவேற்றி வருகிறது.

நள்ளிரவில் நடந்த அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அடுத்தடுத்து நடந்திருக்கும் மரணங்கள், விபத்து மரணங்கள் ஆகியவை பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன. அதனால்தான் அந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என தேர்தல் நேரத்தல் வாக்குறுதி அளித்திருந்தோம்.

அந்த அடிப்படையில் முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடந்துவருகிறது. அரசியல் நோக்கத்தோடு அல்ல. இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ சுத்தமாக இல்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் இதற்கு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார்.

கொடநாடு விவகாரம்

முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரது ஓய்வில்லமாக இருந்த கொடநாடு மாளிகையில் 2017ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதில் அந்த மாளிகையின் பாதுகாவலர் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு அந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தெஹல்கா இதழில் பணியாற்றிய மேத்யூ சாமூவேல் என்பவர் இது தொடர்பாக ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த திருட்டு வழக்கில் தொடர்புப்படுத்தப்பட்டிருந்த இருவர் தோன்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே கொடநாடு மாளிகையில் திருட்டை ஏற்பாடு செய்ததாகக் கூறியிருந்தனர்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இது குறித்து சுந்திரமான விசாரணைகளைக் கோரிய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

மேலும், இந்த வீடியோவை வெளியிட்டவர்களின் பின்னணி விசாரிக்கப்படுமென்றும் அறிவித்தார். இதையடுத்து, அந்த வீடியோவில் பேட்டியளித்திருந்த சயன், மனோஜ் ஆகிய இருவரும் தில்லியில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து புகார் அளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: