You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கே.சி.வீரமணி ரூ.90 கோடி சொத்து குவித்ததாக புகார் - என்ன பின்னணி?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
`மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலத்தை வாங்கி அதன் மதிப்பு 80 லட்சம் என வீரமணி காட்டியுள்ளார். ஆனால், அதன் வழிகாட்டி மதிப்பு 2 கோடி ரூபாய். அந்த நில ஆவணத்தை வைத்து வங்கியில் 15 கோடி ரூபாய் கடனும் வாங்கியுள்ளார்' என்கின்றனர் அறப்போர் இயக்கத்தினர்.
ஆனால், இந்த சொத்துகள் எல்லாம் முறைப்படி வாங்கப்பட்டவை என்கிறார் வீரமணி. தான் அரசியல்வாதி மட்டுமல்ல, பிசினஸ்மேனும்கூட என்கிறார் அவர்.
அறப்போர் இயக்கத்தின் புகார் என்ன?
அ.தி.மு.க அரசில் 2016-21 காலகட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர், கே.சி.வீரமணி. இவர் மீது அறப்போர் இயக்கத்தினர், லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்தப் புகார் மனுவில், ` முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011 முதல் 2021 வரையில் பொது ஊழியராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்துள்ளோம்.
91 கோடிக்கு சொத்து சேர்ப்பு
2011 முதல் 2021 வரையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.சி.வீரமணி, 2016 முதல் 2021 வரையில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
அதற்கு முன்னதாக 2013 முதல் 2016 வரையில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, தமிழ்மொழி, கலாசாரம் மற்றும் சுகாதாரத்துறை போன்ற துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு கே.சி.வீரமணிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள நிகர சொத்து என்பது 7.48 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2011 முதல் 2021 வரையில் அவர் மற்றும் அவரது குடும்பத்தார் சேர்த்துள்ள சொத்து மதிப்பு என்பது 91.2 கோடி ரூபாய் ஆகும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்தப் புகார் மனுவில், "2011 முதல் 2021 வரையில் அவர் வாங்கிய கடன்களைக் கழித்தால், அவர் சேர்த்த நிகர சொத்து 83.65 கோடி ரூபாய் ஆகும். கடந்த பத்து ஆண்டு காலத்தில் அவரது வருமானம் மூலம் சேமித்தது என்பது அதிகபட்சமாக 7 கோடி ரூபாய்தான். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.65 கோடி ரூபாய் ஆகும். இந்த சொத்து மதிப்பை கணக்கிடும்போது பெரும்பாலும் அவர் சொத்தை வாங்கிய விலையாக பதிவுத்துறையில் தெரிவித்திருந்ததையே நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளோம். பெரும்பாலும் இவை அப்போதைய அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பைவிட மிகக் குறைவாக காட்டப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
99 ஆண்டு குத்தகை - ஒரு ரூபாய்
"இவரே பதிவுத்துறை அமைச்சராகவும் இருந்து இவர் துறையிலேயே அதிகாரிகளுடன் சேர்ந்து விலையை குறைத்து மதிப்பீடு செய்து மோசடியும் செய்துள்ளார். எனவே, விசாரணையில் இந்த சொத்துகளின் உண்மையான வாங்கிய விலையை கணக்கீடு செய்தால் இங்கு சொல்லப்பட்ட தொகையைவிட அது பல கோடி ரூபாய் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது. அவை அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையின்போது கணக்கிட வேண்டும்.
மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயரில் உள்ள அசையும் சொத்து மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 43 கோடி ரூபாய் அதிகமாகியுள்ளது. அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் பல ஆசையா சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. பெங்களூர், சென்னை, திருப்பத்தூர் என்று பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்துக்களை வாங்கியுள்ளார்" என மனுவில் குறிப்பிட்டுள்ளனர் அறப்போர் இயக்கத்தினர்.
தொடர்ந்து, "ஒசூர் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்துக்கு வெறும் 1 ரூபாய் குத்தகை என்ற அடிப்படையில் வீரமணி நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 100 ரூபாய்க்கு 0.1 ஏக்கர் நிலம் வீரமணியின் நிறுவனமான ஹோம் டிசைனர்ஸ் அண்ட் ஃபேப்ரிகேட்டர் கம்பெனிக்கு 2017 ஆம் ஆண்டு சிப்காட்டால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் 15 கோடி ரூபாய் செலவில் `ஹோட்டல் ஹோசூர் ஹில்ஸ்' கட்டப்பட்டுள்ளது.
தான செட்டில்மெண்ட் ஏன்?
தவிர, பல நிலங்களை முன்னாள் அமைச்சர் வீரமணி, தனது தாயார் மணியம்மாள், சகோதரி தன்மானம் சுதா சுசீலா பெயரில் வாங்கிவிட்டு அதே நாளிலோ அல்லது சில மாதங்களுக்கு பின்னரோ தன் பெயருக்கு தான பத்திரம் மூலம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்துள்ளார்.
தனது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலத்தை 2015 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். அதேவருடம் ஆர்.எஸ்.கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தானமாக மாற்றிக்கொண்ட ஆதாரமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தன் உறவினர்களைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய்களைச் சேர்த்த ஆதாரங்களையும் இணைத்துள்ளோம்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவர் குடும்பத்தினர் 2011 ஆம் ஆண்டு வெறும் 7.48 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்து கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 76.65 கோடி ரூபாயை வருமானத்துக்கு மீறிய வகையில் சட்டவிரோதமாகக் குவித்துள்ளனர். இதை சரியான வகையில் விசாரித்தால் மேலும் பல கோடி ரூபாய்களை வருமானத்திற்கு மீறிய வகையில் சேர்த்ததை கண்டறிய வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
வீரமணி மீதான புகார் குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஓசூரில் கே.சி.வீரமணிக்கு சொந்தமாக ஓர் ஏக்கர் இடம் உள்ளது. அதன் அருகிலேயே சிப்காட்டிடம் இருந்து 0.1 ஏக்கர் நிலத்தை வாங்குகிறார். அதன் வழிகாட்டி மதிப்பு மட்டும் 35 லட்ச ரூபாய் எனக் காட்டப்பட்டுள்ளது. அந்த நிலத்தை ஆண்டுக்கு 1 ரூபாய் குத்தகை என்ற அடிப்படையில் கே.சி.வீரமணி வாங்கியுள்ளார். அங்கு 15 கோடி ரூபாய்க்கு ஓட்டலையும் கட்டியுள்ளார்.
எப்படி வந்தது 6 கோடி?
அந்த ஓட்டலில் இவர் 64 சதவிகித பங்குதாரராகவும் இயக்குநராகவும் இருக்கிறார். ஆனால், அங்கு எந்தவித வர்த்தகமும் நடக்கவில்லை. அங்கு கடனாக மட்டுமே எட்டு கோடி ரூபாய் வந்துள்ளது. அதனை இயக்குநர்களும் பங்குதாரர்களும் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார். இவர் இரண்டரை கோடி ரூபாய் வரையில் கொடுத்ததாகக் கணக்கு காட்டியுள்ளார். மற்ற 6 கோடி ரூபாயை யார் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இதற்கான பணம் எங்கே இருந்து வந்தது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` கடந்த 10 ஆண்டுகளில் அவர் நிறைய சொத்துகளை சேர்த்துள்ளார். இதைத் தவிர அவரது நிறுவனங்கள் பெயரில் ஓட்டல் ஒசூர் ஹில்ஸ், திருப்பத்தூர் ஓட்டல் ஆகியவற்றைக் கட்டியுள்ளார். `ஹில்ஸ் ஏலகிரி' என்ற பெயரில் நிலமும் வாங்கியுள்ளனர். இதில் பல நிலங்களை அவரது உறவினர் பெயரில் வாங்கி `தான செட்டில்மென்ட்' அடிப்படையில் தனது பெயருக்கு மாற்றியுள்ளார். பொதுவாக பூர்வீக சொத்துகளுக்குத்தான் `தான செட்டில்மென்ட்' கொடுப்பார்கள்.
ஆனால், இவரது அம்மா பெயரில் நிலத்தை வாங்கி அதை ஒரேநாளில் தான செட்டில்மென்ட்டாக காட்டியுள்ளார். அவரது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு தான செட்டில்மெண்ட்டாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு 80 லட்சம் எனக் காட்டியுள்ளார். ஆனால், அதன் வழிகாட்டி மதிப்பு 2 கோடி ரூபாய் ஆகும். இதே நில ஆவணத்தை வைத்து வங்கியில் 15 கோடி ரூபாய் கடனும் வாங்கியுள்ளனர். அதன் உண்மையான மதிப்பு என்ன, இதில் நடந்த முறைகேடுகள் என்ன என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும். நாங்கள் வழிகாட்டி மதிப்பை வைத்துக் கணக்கிட்டதிலேயே இவ்வளவு தொகை வந்துள்ளது. இவரது பத்திரப் பதிவு துறையிலேயே வழிகாட்டி மதிப்பைவிட குறைவான தொகைக்கு நிலத்தைப் பதிவு செய்ததிலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்கிறார்.
கே.சி.வீரமணி சொல்வது என்ன?
அறப்போர் இயக்கத்தினரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான கே.சி.வீரமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எங்கள் தாத்தா, அப்பா காலத்தில் இருந்தே தொழில்களைச் செய்து வருகிறோம். எங்கள் மீதான பொறாமையின் காரணமாக சிலர் புகார்களைக் கூறலாம். எங்களிடம் முறையாக கணக்கு வழக்குகள் உள்ளன. நாங்கள் தொழில்களையும் முறையாக நடத்தி வருகிறோம்" என்கிறார்.
``ஓசூர் ஹில்ஸ் ஓட்டல் குறித்தும் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனரே?" என்றோம். `` அவர்கள் எதைச் சொன்னாலும் பரவாயில்லை. என்னிடம் அனைத்துக்கும் முறையான ஆவணங்கள் உள்ளன. நான் அரசியல்வாதி மட்டுமல்ல. பிசினஸ்மேனாகவும் இருக்கிறேன். அரசியலுக்காக வியாபாரத்தை எங்களால் கைவிட முடியாது. அரசியல் என்பதை ஒரு சேவையாக செய்து வருகிறோம். மக்களுக்குப் பணியாற்றுவதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அது வேறு, தொழில் என்பது வேறு. இந்தப் புகாரை யார் கொடுத்திருந்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறேன். என்னுடைய சொத்துகளில் ஒன்றுகூட முறைகேடாக வாங்கப்படவில்லை" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்