பெண் ஓதுவார் சுஹாஞ்சனா: இது முடியுமா என கேட்டவர்களுக்கு செயலில் கொடுத்த பதில்

ஓதுவார் சுஹாஞ்சனா

பட மூலாதாரம், MK STALIN

படக்குறிப்பு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து பணி நியமன ஆணையைப் பெறும் ஓதுவார் சுஹாஞ்சனா
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்து சமய அறநிலையத்துறையில் சுஹாஞ்சனா என்ற பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். `` என்னைப் பின்பற்றி பெண்கள் பலரும் ஓதுவார் பணிக்கு வரும் வகையில் என்னுடைய செயல்பாடு இருக்கும்" என்கிறார் சுஹாஞ்சனா.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆகம விதிகளில் பயிற்சி பெற்ற தலித் மாணவர்கள் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து அவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் சுஹாஞ்சனா என்ற 27 வயது பெண்மணி ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

`தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார்' என தகவல் வெளி வந்தாலும், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் (2006-11) திருச்சியை சேர்ந்த அங்கயற்கண்ணி என்பவர் முதல் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுஹாஞ்சனா என்பவர் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சுஹாஞ்சனாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

ஓதுவார்

பட மூலாதாரம், Getty Images

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

``கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்தான் எனது சொந்த ஊர். அப்பா, ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். உடன்பிறந்த அண்ணன் ஒருவர் இருக்கிறார். சிறு வயதிலேயே பக்தி நெறியிலேயே அப்பாவும் அம்மாவும் என்னை வளர்த்தனர். நவராத்திரி விழாவுக்கு செல்லும்போது அங்கு சிலர் பாடுவதைக் கேட்டு நாமும் பாட வேண்டும் என நினைப்பேன். கோயில் விழாக்கள், உறவினர்கள் முன்னிலையில் பாடுவது என செயல்பட்டேன். காலப்போக்கில் அது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது.

பத்தாம் வகுப்பு முடித்தவுடன், `பாட்டுத் துறையிலேயே பயணிக்க வேண்டும்' என நினைத்தேன். இதற்கு வீட்டில் உள்ளவர்களும் சம்மதம் தெரிவித்ததால், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் குமார சாமிநாத அய்யாவிடம் தேவாரம், திருவாசகம் பாடல்களைப் படித்தேன். `இந்தப் பாடல்களை எல்லாம் அடுத்த சந்ததிகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்' என அய்யா சொல்வார்.

ஆண்களாக இருந்தால் கோயிலுக்குப் போய் பாட்டுப் பாடுவார்கள். இந்தப் பணிக்குச் செல்வதற்கு பெண்கள் சற்று தயக்கம் காட்டுவார்கள். எனவே, `அடுத்த தலைமுறைக்கு வகுப்பு எடுங்கள்' என அய்யா சொல்வார். அதையொட்டி வீட்டிலேயே வகுப்புகளை நடத்தி வந்தேன். தொடர்ந்து தனியார் பள்ளி ஒன்றில் அறநெறி ஆசிரியராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்தேன்.

ஓதுவார்

பட மூலாதாரம், Getty Images

கோவை மாவட்டத்தில் `மங்கையர்க்கரசியர் அறநெறி அறக்கட்டளை' என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மகள் அதனை நடத்தி வருகிறார். அங்கு 27 பேர் ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு அறநெறிகளையும் தேவாரம், திருவாசகம் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தோம். இதன்பிறகு திருமணம் ஆகிவிட்டதால் சென்னைக்கு வந்துவிட்டேன்".

கோயில்களில் ஓதுவார்களுக்கான பணிகள் என்ன?

``கோயிலில் சாமிக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு பஞ்ச புராணங்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் ஆகியவற்றை கடவுள் முன்னால் பாடி விண்ணப்பம் செய்வது, பின்னர் அம்பாள் சந்நிதியில் அந்தாதி பாடுவது, முருகன் சந்நிதியில் திருப்புகழ் பாடுவது போன்றவை ஓதுவாரின் பணிகளாக உள்ளன. இறைவனைப் புகழ்ந்து பாடுவது இதன் நோக்கம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உள்ளிட்டவர்கள் பாடிய பாடல்களை கோயிலில் பாடுகிறவர்களை ஓதுவார்கள் என்கின்றனர்."

ஓதுவார்

பட மூலாதாரம், Getty Images

உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கிறதா?

``திருமணத்துக்கு முன்பு, `உனக்கு தெரிந்ததை சிறப்பாகச் செய்' என அப்பாவும் அம்மாவும் ஊக்கம் கொடுத்தனர். திருமணத்துக்குப் பிறகு, `இறைவனுக்கு தொண்டு செய்வது யாருக்கும் கிடைக்காத பணி' எனக் கூறி கணவரின் குடும்பத்தினர் உற்சாகப்படுத்தினர். கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம், `நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் தினசரி கோயிலுக்குப் போகலாம்' என நினைப்பேன். கடவுளை மனதில் நினைத்துப் பாடுவேன். இந்த நிலையில், ஓதுவார் பணிக்கு அறநிலையத்துறையில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டிருந்தது. நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதலமைச்சர் கையால் பணி நியமனம் கிடைத்தது. இப்படியொரு வேலை கிடைக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை".

ஓதுவார்

பட மூலாதாரம், Getty Images

உங்கள் குடும்பத்தில் யாராவது ஓதுவார் பணியில் இருந்துள்ளனரா?

``நான் மட்டும்தான். வேறு யாரும் இந்தத் துறையை தேர்வு செய்யவில்லை."

ஓதுவார் பணிக்கு வந்த பிறகு எதிர்கொண்ட சவால்கள் எதாவது இருக்கிறதா?"

``கோயிலுக்குச் சென்று பாட்டுப் பாடுவது என்பது மிகவும் புதிது. `இதை உன்னால் செய்ய முடியுமா?' எனப் பலரும் கேட்பார்கள். ஆனால் உற்சாகப்படுத்துவதை யாரும் நிறுத்தவில்லை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு பலரும் மருத்துவம், பொறியியல் என விரும்பிப் படிப்பார்கள். நான் பாட்டுத்துறையை தேர்வு செய்தேன்".

இந்தத் துறையில் உங்களின் அடுத்த இலக்கு என்ன?

``என்னைப் பார்த்து நிறைய பேர், `நாமும் ஓதுவார் பணிக்குச் செல்ல வேண்டும் என விருப்பப்படும் அளவுக்குச் செயல்பட வேண்டும்' என நினைக்கிறேன். முதலமைச்சர் கையால் பணி நியமன ஆணை பெறும்போது அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :