முகேஷ் அம்பானியின் டெலிகாம் வணிகத்தில் கொட்டும் பணமழை: மற்ற நிறுவனங்கள் நஷ்டம் ஆவது ஏன்?

    • எழுதியவர், தினேஷ் உப்ரேதி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது தம்பியும், இப்போது குமார மங்கலம் பிர்லாவும் 'கையை சுட்டுக்கொண்ட' தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டிப் பறக்கிறார்.

125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை, ஏழை, பணக்காரர் என்று யாராக இருந்தாலும் ஏறக்குறைய அனைவரது கைகளிலும் மொபைல். நாளுக்கு நாள் மேம்படும் தொழில்நுட்பம். உலகின் மிகப்பெரிய டெலிகாம் சந்தையில் லாபம் சம்பாதிக்க எந்த தொழிலதிபர்தான் ஆசைப்பட மாட்டார்?

ஆனால் இந்த நாணயத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இதே தொலைத்தொடர்பு வணிகம், முதலில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) உரிமையாளர் அனில் அம்பானியின் அழிவின் கதையை எழுதியது. இப்போது நாட்டின் பிரபல தொழிலதிபரும் வோடாஃபோன் இந்தியாவின் உரிமையாளருமான குமார மங்கலம் பிர்லா சிக்கலில் இருக்கிறார்.

ஹிண்டல்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்களை நடத்துபவர் குமார மங்கலம் பிர்லா.

நஷ்டத்தில் இயங்கிய பிர்லாவின் ஐடியா, சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நிறுவனமான வோடஃபோனுடன் கூட்டு சேர்ந்து இந்த துறையில் மீண்டும் வலுவுடன் நுழைந்தது. ஆனால் அவர்களது இந்தத்திட்டமும் பலிக்கவில்லை.

வயர்லெஸ் வணிகத்தில் சுமார் 25 சதவிகித பங்கைக் கொண்ட இந்த நிறுவனம், வங்கிகளிடமிருந்து வாங்கிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பது மட்டுமல்லாமல், 58,000 கோடி ரூபாய் தொகையை அரசுக்கும் செலுத்தவேண்டும். இது AGR எனப்படும் பயன்பாடு மற்றும் லைசென்ஸ் கட்டணம் ஆகும்.

ஏஜிஆர் காரணமாக மூச்சுத்திணறல்

ஏஜிஆர் தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வருகிறது.

எளிமையாகச் சொன்னால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை, அவர்கள் தொலைத் தொடர்புத் துறைக்கும் கொடுக்க வேண்டும். இது தான் ஏஜிஆர். 2005 முதல், இதன் வரையறை தொடர்பாக அரசுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

தொலைத்தொடர்பு வணிகத்திலிருந்து கிடைக்கும் வருவாயை மட்டுமே இந்த நோக்கத்திற்காக கணக்கிட வேண்டும் என்று நிறுவனங்கள் விரும்புகின்றன, ஆனால் அரசு அதை அப்படிப்பார்க்கவில்லை.

தொலைத்தொடர்பு அல்லாத வணிகங்களான சொத்துக்கள் விற்பனை அல்லது வைப்புத்தொகையில் பெறப்படும் வட்டியும் இதில் கணக்கிடப்பட வேண்டும் என்று அரசு கூறுகிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியது . நீதிமன்றம் அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார மங்கலம் பிர்லா, வோடபோன் ஐடியா லிமிடெட்டில் தனது பங்குகளை விற்கத் தயாராக உள்ளார். இந்த நிறுவனத்தில் அவருக்கு 27% பங்குகள் உள்ளன.

இந்த பிரச்சனை குறித்து குமார மங்கலம் பிர்லா, ஜூன் மாத இறுதியில் மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கெளபாவுக்கு ஒரு கடிதம் எழுதி, தனது தொழில் வாழ்க்கையை காப்பாற்ற நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை அரசு அல்லது எந்த ஒரு உள்நாட்டு நிதி நிறுவனத்திற்கோ விற்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

பிர்லா முழு பங்குகளையும் விற்ற பிறகும் அரசு தனக்குச்சேரவேண்டிய பாதித்தொகையை கூட மீட்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் தற்போது நிறுவனத்தின் சந்தை மூலதனம் சுமார் 24,000 கோடி ரூபாய்.

நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம் மேம்பட வேண்டும். இதற்காக அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம்ப வேண்டும். நாட்டின் 27 கோடி மக்கள் வோடஃபோன் ஐடியாவுடன் இணைந்துள்ளனர் என்று குமார மங்கலம் பிர்லா குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, வோடஃபோன் இந்தியாவின் மொத்த ஏஜிஆர் 58,254 கோடி ரூபாய். இதில், நிறுவனம் 7,854 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது, இன்னும் சுமார் 50,399 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க முடியாதது ஏன்?

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் மூன்று தொழிலதிபர்கள் களமிறங்கினர். பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஐடியா. இது தவிர, ஏற்கனவே இரண்டு அரசு நிறுவனங்கள் BSNL மற்றும் MTNL இருந்தன. இந்தத் துறை வளர்ச்சிகாணும் நிலையில் நிறுவனங்களின் லாபமும் அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் இது நடக்கவில்லை.

தொலைத்தொடர்புத் துறையில் நிலையான வளர்ச்சி இருந்தது. ஆனால் கட்டணப் போர், விலை அதிகமான அலைக்கற்றை, தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுவது மற்றும் சில நிறுவனங்களில் தவறான நிர்வாகம் போன்றவை அவற்றின் நிதி நிலையை மோசமாக்கியது.

"அரசு விதிமுறைகள் மற்றும் முறைப்படுத்தல் ஒரே சீராக இல்லாத காரணத்தால் சில நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்கொண்டன. ஆனால் சில நிறுவனங்கள் நன்மைகளைப் பெற்றன. அரசு வேண்டுமென்றே பாகுபாடு காட்டியது என்று சொல்லமுடியாது," என்று தொலைத்தொடர்பு வல்லுநர் மகேஷ் உப்பல் தெரிவித்தார்.

"ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள், மற்ற துறைகளிலும் வியாபாரம் செய்து வந்தன. இதன் காரணமாக நீண்டகால நஷ்டத்தை தாங்கும் நிலையில் இருந்தன. அவர்கள் அழைப்பு விகிதங்கள், தரவு கட்டணங்களை குறைத்து பிற நிறுவனங்கள் மீது அழுத்தம் கொடுத்தனர். இழப்பு இருந்தாலும்கூட போட்டியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் கட்டணங்களை அதிகரிக்க முடியவில்லை,"என்கிறார் மகேஷ் உப்பல்.

தொலைதொடர்பு துறையில் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (அதே எண்ணுடன் இன்னொரு நிறுவனத்திற்கு மாறும் வசதி) புதிய நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

"மொபைல் போர்ட்டபிலிட்டியின் நன்மை என்னவென்றால், எண்ணை மாற்றாமல், வாடிக்கையாளர் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் சேவைகளை பெற முடியும். ஜியோ, 4 ஜி தொழில்நுட்பத்தில் மட்டுமே சேவைகளை வழங்குகிறது. மற்ற நிறுவனங்கள் 2 ஜி, 3 ஜி நெட்வொர்க்கை இயக்குகின்றன. அதனால்தான் ஜியோவின் அழைப்பு கட்டணம் குறைவாக உள்ளது, " என்று மகேஷ் உப்பல் தெரிவித்தார்.

நிறுவனங்கள் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ள மற்றொரு முக்கிய காரணம், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க இயலாமை ஆகும். "பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு எதிரான சட்டப் போராட்டங்களை நம்பியிருந்தன. AGR தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை செலுத்துவதற்கான ஒதுக்கீட்டைக்கூட அவர்கள் செய்யவில்லை," என்று கூறுகிறார் உப்பல்.

இருப்பினும், தொலைத்தொடர்புத் துறையின் மற்றொரு நிபுணரான மனோஜ் கரோலா, விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை விட, நிறுவனங்களின் தவறான நிர்வாகமே அவற்றின் அழிவுக்கு ஒரு பெரிய காரணம் என்று கூறுகிறார்.

"இந்த துறையில் பிரச்சனை இருக்குமேயானால், ஏர்டெல் மற்றும் ஜியோ எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள்? 2 ஜி மற்றும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்தும் பொறுப்பு இல்லாத நேரத்தில் ஜியோ, தொலைத்தொடர்பு துறையில் நுழைந்தது உண்மைதான். ஆனால் அந்த நிறுவனம், தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க்கில் பெருமளவு முதலீடு செய்துள்ளது,"என்று மனோஜ் கரோலா சுட்டிக்காட்டுகிறார்.

ஜியோவின் லாபம் ஏர்டெல்லை விட 10 மடங்கு அதிகம்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ 3,651 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இதே காலகட்டத்தில் பாரதி ஏர்டெல் 284 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக அறிவித்தது. மறுபுறம், முதல் காலாண்டில் வோடஃபோன் ஐடியாவின் இழப்பு 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

"லாபம் சம்பாதிக்கும் அனைத்து நிறுவனங்களின் நிர்வாகமும் சிறப்பாக உள்ளது. அவர்கள் தொடர்ந்து தொழில்நுட்பத்தைப் புதுப்பிப்பதில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் , நிர்வாக சிக்கல்களைக் கொண்டுள்ளன. அதன் காரணமாக அதிக கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்கள் அவர்களிடம் குறைவாக உள்ளனர். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லைப் பொருத்தவரையில், அவை தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடுவதை அரசே விரும்பவில்லை. இந்த நிறுவனங்கள் 4 ஜி அலைக்கற்றை ஏலத்தில் கூட பங்கேற்கவில்லை," என்று கரோலா கூறுகிறார்.

பண மழையில் திளைக்கும் முகேஷ் அம்பானி

2019 ஆம் ஆண்டு வரை, ரிலையன்ஸ் ஜியோ 35 கோடி சந்தாதாரர்களை மட்டுமே கொண்டிருந்தது. வோடஃபோன் ஐடியாவுக்கு ஏற்பட்ட இழப்பின் மிகப்பெரிய பயனாளர் ஜியோ என்று நம்பப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில், ஜியோ அதன் லாபத்தை இரட்டிப்பாக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். அதற்குள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 50 கோடியை தாண்டும்.

தற்போது பிராட்பேண்டில் மொத்த சந்தைப் பங்கில் 54 சதவிகிதம்​​ ஜியோவிடம் உள்ளது. அதே நேரத்தில் மொபைல் சந்தாதாரர்களில் அதன் பங்கு 35 சதவிகிதமாக உள்ளது.

முகேஷ் அம்பானி தனது முதன்மை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் கீழ் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தார். மூன்று-நான்கு ஆண்டுகளுக்குள் இந்த முதலீடு முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு லாபகரமானதாக இருக்கும் என்பதை அவர் காட்டினார்.

"முகேஷ் அம்பானியின் செயல் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முதலில் ஜியோவின் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க்கிங் மீது கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தார். அதன் பலனை உலகம் பார்த்தபோது, ​​அவர் தனது தொலைத்தொடர்பு வணிகத்தில் 3,000 கோடி டாலர்களுக்கும் அதிகமான முதலீட்டை பெற்றிருந்தார்," என்று கரோலா குறிப்பிட்டார்.

ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தவர்களில் ஃபேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ், கே.கே.ஆர் போன்ற ஜாம்பவான்கள் அடங்குவர். முகேஷ் அம்பானியின் இந்த செயல்திட்டம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசை ஒரே அடியில் கடன் இல்லாமல் ஆக்கிவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :