You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசு பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அழித்து கலைஞர் நூலகம் கட்டுகிறதா?
மதுரையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் நினைவு இல்லத்தை அகற்றிவிட்டு `கலைஞர் நூலகம்' அமைக்க உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கலைஞர் நினைவு நூலகம்
மதுரை மாவட்டம் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் `கலைஞர் நினைவு நூலகம்' ஒன்றைக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 70 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த நூலகம் அமைய உள்ளது. இந்நிலையில், பெரியார்-வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், "கலைஞர் நினைவு நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லம் உள்ளதால் அதனை அகற்றிவிட்டு நூலகத்தைக் கட்டக் கூடாது' எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், "விவசாயிகளின் துயரைத் துடைத்த பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றிவிட்டு நூலகம் கட்டும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்," எனத் தெரிவித்திருந்தனர்.
விவசாயிகளின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்ட அறிவிப்பில், "மதுரையில் 70 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 2 லட்சம் சதுர அடியில் 8 மாடிக் கட்டடமாக இது அமைய உள்ளது. இதற்காக மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர் குடியிருப்பு வளாகம் போதுமான வசதியுடன் இருப்பதால் நூலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
பென்னிகுயிக் வாழ்ந்த இல்லமா?
மேலும், "இங்குள்ள குடியிருப்பில் முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்ததாகக் கூறப்பட்டது. 15.1.1841 அன்று பிறந்து 9.3.1911 அன்று பென்னிகுயிக் மறைந்தார். ஆனால், ஆவணங்களைப் பரிசீலித்துப் பார்த்தபோது நூலகத்துக்குத் தேர்வாகியுள்ள கட்டடமானது, 1912 ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு 1913 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது பொதுக் கட்டடப் பதிவேடு எண் 159/1-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கட்டடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை," எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. "பென்னிகுயிக்கின் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க போராட்டத்தில் ஈடுபடும்," என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
இபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை
இதுதொடர்பாக, அ.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய ஜான் பென்னிகுயிக்கின் நினைவு இல்லம் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
"இதனை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பென்னிகுயிக் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு விவசாயிகளோ இதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவிக்கிறார்கள். மதுரை மாநகரின் நத்தம் செல்லும் சாலையில் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்ததாகவும் அதற்கு ஆதாரமாக தன்னுடைய உடைகளை சுவற்றில் தொங்க விடுவதற்கான ஸ்டாண்ட், பெரியாறு இல்லம் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருந்ததாகவும் இது உண்மை என்பதால்தான் மதுரை மாநகர பொதுப்பணித்துறை வளாகத்தில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜான் பென்னிகுயிக்கின் முழு உருவச்சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.
மேலும், அந்தக் கல்வெட்டில், `இப்புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான்; எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும், அதனை உடனே நிறைவேற்ற வேண்டும், இதை தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை' என்று பொறிக்கப்பட்டுள்ளது. `இந்த சொற்களுக்குச் சொந்தக்காரர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான்' என்று அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.
எனவே, முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய ஜான் பென்னிகுயிக்கின் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு அங்கு கலைஞரின் பெயரில் நூலகம் அமைப்பது என்று முடிவு சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம். அந்த முடிவை மறுபரிசீலனை செய்து யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் கொதிப்பு
இதையடுத்து, பாட்டாளி மக்கள் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ` மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் வாழ்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
கலைஞர் பெயரில் அறிவை வளர்க்கும் கருவியான நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடிப்பது முறையல்ல. பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் வசிப்பிடமாக உள்ள அந்த இல்லத்தை பென்னிகுயிக் நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும். மதுரை பாண்டி கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக உள்ளன. அங்கு இப்போது திட்டமிடப்பட்டதைவிட இன்னும் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கலாம். அதற்காக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்