சோழர் கால சிலைகள்: திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பித் தரும் ஆஸ்திரேலியா - இந்தியா வரும் வரலாற்று சின்னங்கள்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட அல்லது திருடப்பட்ட 14 கலைப் பொருட்களை மீண்டும் ஒப்படைக்க உள்ளது ஆஸ்திரேலியா.

இவற்றில் ஒரு கலைப் பொருளைத் தவிர மற்ற அனைத்தும், கலைப்பொருள் விற்பனையாளர் மற்றும் கடத்தல்காரர் என்று குற்றம்சாட்டப்படும் சுபாஷ் கபூர் என்பவருடன் தொடர்புடையவை. இந்தியாவில் சட்ட விசாரணையை எதிர்கொண்டுள்ள சுபாஷ் கபூர் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார்.

மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த சிலைகள், புகைப்படங்கள் உள்ளிட்ட 2.2 மில்லியன் டாலர்கள் (சுமார் 15 கோடி இந்திய ரூபாய்) மதிப்பு கொண்ட, இந்தியாவுக்கு சொந்தமான கலைப் பொருட்கள் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திடம் (நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா) உள்ளன.

இவற்றை இந்தியாவிடமே திருப்பித்தரும் பட்சத்தில் "எங்கள் வரலாற்றின் மிக கடினமான ஓர் அத்தியாயம் முடிவடையும்" என இந்த அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் மிட்ஸ்வெச் தெரிவித்தார்.

இதில் சில பொருட்கள் தமிழகத்தின் சோழர் காலத்தை சேர்ந்தவை. 12ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இந்துக் கலைகள் வளர்ச்சியடைந்த போது செய்யப்பட்ட சில சிலைகளும் இதில் அடங்கும்.

இந்த பொருட்கள் அனைத்தும் அடுத்த சில மாதங்களில் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபாஷ் கபூர் மூலம் 2008இல், ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கப்பட்ட இந்து மதக் கடவுள் சிவனின் வெண்கல சிலை ஒன்று உள்பட பல கலைப்பொருட்களை கான்பெர்ராவில் உள்ள கலைப்பொருட்கள் அருங்காட்சியகம் திருப்பி அளித்துள்ளது.

கலைப்பொருட்கள் அனைத்தும் இன்னும் சில மாதங்களில் இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் நிக் மிட்ஸ்வெச் தெரிவித்துள்ளார்.

"நன்னடத்தை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் அசாதாரணமான செயல் இது" என்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் (தூதரகம்) ஆஸ்திரேலிய அரசின் முடிவைப் பாராட்டியுள்ளது.

கலைப் பொருட்களை சட்ட ரீதியான மற்றும் நியாய ரீதியிலான கூறுகளின் அடிப்படையில் மதிப்பிட்டு அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறியும் வழிமுறையை தாங்கள் அறிமுகம் செய்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

கலைப் பொருட்கள் திருடப்பட்டோ, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டோ, வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக ஏற்றுமதி செய்யப்பட்டோ, நியாயமற்ற முறையில் வாங்கப்பட்டோ இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால், அவற்றை தங்கள் அருங்காட்சியகத்தில் இருந்து நீக்கிவிட்டு அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

சுபாஷ் கபூருக்கு எதிராக அமெரிக்காவில் பெரிய அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'ஆப்ரேஷன் ஹிட்டன் ஐடால்' (Operation Hidden Idol) சட்ட நடவடிக்கை மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூறு கலைப்பொருட்கள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

மன்ஹாட்டன் நகரத்தில் 'ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் ' (Art of the Past) எனும் பெயரில் கலைப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று இவர் நடத்தி வந்தார். 2012ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் முறையாக அமெரிக்க அரசு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :