You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடி அகழாய்வில் மகத பேரரசு காலத்தைச் சேர்ந்த வெள்ளிக் காசு
மதுரை நகருக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்துவரும் அகழாய்வில் முத்திரையிடப்பட்ட வெள்ளியிலான காசு ஒன்று கிடைத்துள்ளது. இந்தக் காசு மகத பேரரசைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மதுரை நகருக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் தற்போது ஏழாவது கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் சில நாட்களுக்கு முன்பாக, வெள்ளியினால் ஆன முத்திரையிடப்பட்ட காசு என்று கிடைத்துள்ளது.
146 செ.மீ ஆழத்தில் கிடைத்த இந்தக் காசில் முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரைவட்டம் மற்றும் 'ட' வடிவக் குறியீடுகளும் காணப்படுகின்றன.
இந்தக் காசு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசு, வட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்றுமொறு சான்று" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் முதன் முதலாக அச்சடிக்கப்பட்ட சிறப்பு இந்த முத்திரைக் காசுகளுக்கு உண்டு. இவை கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 3ஆம் நூற்றாண்டுவரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை" என்கிறார் சென்னையைச் சேர்ந்த நாணய ஆய்வாளரான மன்னர் மன்னன்.
இந்த காசில் உள்ள சூரிய - சந்திரன் உருவம், நாயின் உருவம், சக்கர உருவம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தக் காசு மதகப் பேரரைச் சேர்ந்த janapatha என்ற வகையைச் சேர்ந்த முத்திரைக் காசாக இருக்கலாம் என்றும் இவை கி.மு. 300க்கும் 500க்கும் முன்பாக வெளியிடப்பட்டவை என்றும் தெரிவிக்கிறார் மன்னர் மன்னன்.
இந்த காலகட்டத்தைச் சேர்ந்த காசுகள், கீழடியில் மட்டுமல்லாமல், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன என்றும் மகத பேரரசுடன் நடந்த வணிகத்திற்கு இவை சான்றாக இருக்கின்றன என்றும் குறிப்பிடுகிறார் மன்னர் மன்னன்.
கீழடியில் நடந்த அகழாய்வில் இதற்கு முன்பாக சில நூற்றாண்டுகளே பழமையான வீரராயன் தங்க பணம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரிய நாணயம், ரோமானிய நாணயங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
பிற செய்திகள்:
- தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ
- தீ விபத்தால் கடலில் கசிந்த ரசாயனம்: தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா?
- சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்?
- ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: கோடிகளில் வாழ்க்கை, அதிரவைக்கும் சர்வதேச தொடர்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்