ஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக எப்போது அறிவிக்கும் இந்திய அரசு?

    • எழுதியவர், மு. பார்த்தசாரதி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக அறிவிக்க அதை மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார் இந்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி.

மாநிலங்களவையில் இது தொடர்பாக திமுக உறுப்பினர் வில்சன் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு சமீபத்தில் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள அமைச்சர் கிஷண் ரெட்டி, "தமிழ்நாட்டில் உள்ள 412 சின்னங்கள் உள்பட மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை பராமரிக்கும் பணி தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவை, நிதி, வளங்கள் போன்றவற்றுக்கு ஏற்ப இந்த பணி நடந்து வருகிறது," என்று கூறியுள்ளார்.

மேலும், பாதுகாக்கப்பட்ட சின்னங்களில் சுற்றுலா வசதிகள் வழங்குவதையும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் சின்னங்களை மேம்படுத்துவதும் கூட தொடர்ச்சியான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள ஏழு சின்னங்கள் ஆதர்ஷ் சின்னங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த இடங்களில் வைஃபி வசதி, தேநீரகம், மொழிபெயர்ப்பு மையம், பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் உணரும் வசதி, ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் போன்ற கூடுதல் வசதிகள் நிறுவப்படும். தமிழ்நாட்டில் அத்தகைய ஓர் இடமான ஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக மேம்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.

அத்துடன் இந்தியாவில் 2021, ஜூலை மாத நிலவரப்படி 21 இடங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை ஏன்?

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் எழுப்பியதை போல, மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி ஆதிச்சநல்லூரை குறிப்பிட்டு அந்த இடத்தை முக்கிய சின்னமாக அறிவிக்கும் நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்று கேட்டிருந்தார்.

அதற்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ள அமைச்சர் கிஷண் ரெட்டி, "ஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக மேம்படுத்த, அங்கு சுற்றுச்சுவர், கழிவறைகள், குடிநீர் வசதிகள், சூரிய ஒளி தகடுகள், நினைவு புத்தக கடைகள், தேநீரகங்கள், ஒலி-ஒளி நிகழ்ச்சிக்கான வசதிகள், பொது அறிவிப்பு பலகைகள், சுற்றுலா பயணிகளுக்கான பாதை போன்ற வசதிகள் செய்யப்பட்டோ செய்யப்படும் நிலையிலோ உள்ளன," என்று கூறியுள்ளார்.

அந்த தளத்தில் திறந்தவெளியில் உள்ள சில பகுதிகள் அல்லது பூமிக்குள் புதைந்திருக்கும் பொருட்களை மேலும் அகழாய்வு செய்யும் பணி தேவைப்படும்போது மேற்கொள்ளப்படும். அந்த இடத்தில் அருங்காட்சியகம் மற்றும் தளத்தின் தன்மை, வரலாறு போன்றவற்றை பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையிலான மொழிபெயர்ப்பு மையம் போன்ற வசதிகளை வழங்குவது குறித்து மாநில அரசுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும்," என்று அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கனிமொழி குற்றச்சாட்டு, மறுப்பு தெரிவித்த தொல்லியல் துறை

ஆனால், அமைச்சரின் பதிலால் திருப்தியடையாத கனிமொழி, அமைச்சரின் பதில் அடங்கிய மக்களவை ஆவணத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அமைச்சர் அளித்துள்ள பதிலைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். அவர் குறிப்பிட்டுள்ள எந்தவொரு வசதியையும் எங்களால் பார்க்கவோ கண்டுபிடிக்கவோ முடியவில்லை. அங்கு அருங்காட்சியகத்தை நீங்கள் நிறுவவே நாங்கள் விரும்புகிறோம்," என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கனிமொழியின் பதிலுக்கு ஆட்சேபம் தெரிவிப்பது போல, இந்திய தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரை முக்கியத்துவம் வாய்ந்த அடையாளச் சின்னமாக மாற்றும் நடவடிக்கையில் உளப்பூர்வமாக ஈடுபட்டு வருகிறோம். அறிவிக்கப்பட்ட பகுதியான 125 ஏக்கரையும் உருக்கு கம்பி தடுப்பு மூலம் பாதுகாத்து வருகிறோம். கலாசாரத்துறை தகவல் பலகையையும் பார்வையாளர்களுக்கான குறிப்பு அடங்கிய தகவலையும் அங்கு நிறுவியுள்ளோம் என்று கூறி அதற்கான படங்களையும் தொல்லியல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கி.மு 1600 வருடங்களுக்கு முந்தைய நாகரிகமாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், உலகில் நாகரிகம் தோன்றிய முதல் இடமாக விளங்குவதாக தொல்லியல்துறை அறிஞர்கள் நம்புகின்றனர்.

2004ஆம் ஆண்டில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி.சத்யமூர்த்தி ஆதிச்சநல்லூரில் 600 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின்போது 178 முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டன. அதன்பிறகு உலகத்தின் பார்வை ஆதிச்சநல்லூர் பக்கம் திரும்பியது.

2020 ஆம் ஆண்டு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன், கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி மாநில தொல்லியல் துறையினர் மீண்டும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் அகழாய்வு பணியை தொடங்கினர். செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்தப் பணியை இந்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரியும் அவர் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்தனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வுத் தலம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வலதுபுற கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர் புதைமேடு. இந்த இடத்தை முதலில் கண்டுபிடித்தது பெர்லினைச் சேர்ந்த எஃப். ஜகோர் என்பவர். 1876ல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஸ்டூவர்ட்டும் இவருடன் சேர்ந்து இந்த ஆய்வில் ஈடுபட்டார். இந்த அகழாய்வில் பல மண் பாண்டங்கள், இரும்பினாலான பொருட்கள், எலும்புக்கூடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

உண்மையில், அந்த சமயத்தில் அகழாய்வு செய்ய வேண்டுமென அந்த இடம் தோண்டப்படவில்லை. ரயில் பாதை அமைப்பதற்கு சரளைக் கற்களை தோண்டி எடுப்பதற்காக குழிகளை வெட்டியபோது பானை ஓடுகளும் பிற பொருட்களும் தென்பட்டதால், அந்தப் பணி நிறுத்தப்பட்டு, அகழாய்வு செய்யப்பட்டது. ஜகோரும் ஸ்டூவர்டும் பல தொல்லியல் பொருட்களை இங்கிருந்து சேகரித்தனர். பிறகு இந்தப் பொருட்கள் பெர்லினுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இதற்குப் பிறகு, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியத் தொல்லியல் துறையை சேர்ந்த டாக்டர் அலெக்ஸாண்டர் ரியா, ஆதிச்சநல்லூரைப் பற்றிக் கேள்விப்பட்டு 1899-1900ல் அங்கு சென்று பார்த்தார். அப்போது சிறிய அளவிலேயே குழிகளைத் தோண்டி அவர் ஆய்வுசெய்தார். பிறகு 1903-04ல் திரும்பி வந்த ரியா, அங்கு பெரிய அளவிலான அகழாய்வுகளை மேற்கொண்டார். சரளைக் கற்களைத் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றியே இவரது அகழாய்வுக் குழிகள் அமைந்திருந்தன. பாரீசைச் சேர்ந்த லூயி லாபிக்கும் இந்த ஆய்வில் இணைந்துகொள்ள, பெரிய அளவில் பொருட்கள் இங்கிருந்து சேகரிக்கப்பட்டன. அலெக்ஸாண்டர் ரியா செய்த ஆய்வின் போது கிடைத்த பொருட்கள், தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தாமிரபரணிக் கரையில் உள்ள தொல்லியல் தலங்களை அடையாளம் காண பாளையங்கோட்டையிலிருந்து தாமிரபரணி கடலில் கலப்பது வரை நடந்துசென்று 38 இடங்களை அடையாளம் கண்டார் ரியா.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடந்த இடமென்பது இறந்தவர்களை புதைக்கும் இடம். இந்த இடத்திற்கு அருகில் மக்கள் வாழ்ந்த இடமாக தாமிரபரணி ஆற்றின் வடபகுதியில் உள்ள கொங்கராயங்குறிச்சி அடையாளம் காணப்பட்டது. இந்தப் பகுதியில் கிடைத்த மண்பாண்டங்கள் வேறு விதமாக இருந்தன. இதன் மூலம், இறுதிச் சடங்குகளுக்கெனவே தனியாக பானைகளைச் செய்யும் பழக்கம் இருந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆதிச்சநல்லூர் ஒரு வணிகத் தலமாக இருந்திருக்கலாம் எனக் கருதினார் ரியா.

ஆதிச்சநல்லூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மேற்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலை ஆதிச்சநல்லூர் குன்றை அறுத்துச் செல்கிறது. ஆதிச்சநல்லூர் மட்டுமல்லாமல், கருங்குளம், கல்வாய் பகுதிகளிலும் இந்த இடம் பரந்து விரிந்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :