You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு - மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12ஆம் தேதியன்று அன்று முடிவடையும் நிலையில், 19ஆம் தேதிவரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அதன்படி, மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து, பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான தடை தொடரும். திரையரங்குகள், மதுக்கூடங்கள் (பார்கள்), நீச்சல் குளங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.
திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில், 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12ஆம் தேதி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. மேலும் இப்பகுதிகளில், நோய்த் தொற்று பரவலை கண்காணிக்க, குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்