You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு குழு அமைக்கும் முன்பு உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றீர்களா?" தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
`நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு குழு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா?' என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், `உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது' எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
84,000 தரவுகள்
தமிழ்நாட்டில் கொரோனா பேரிடர் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், `நீட் தேர்வில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?' என்பது குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவை அமைப்பது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் பொதுமக்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து தரவுகளைப் பெற்று வருகின்றனர். இதுவரையில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து தரவுகள் வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
`தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்கான மாற்று வழி என்ன?' என்பது குறித்து ஆராய்ந்து அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஒரு மாதத்துக்குள் ஏ.கே.ராஜன் குழு அளிக்க உள்ளது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழுவினரை நியமிக்கும் அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி பா.ஜ.கவின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
பா.ஜ.க தொடர்ந்த வழக்கு
அவர் தனது மனுவில், ` நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது நாடு முழுவதற்கும் பொதுவானது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதன்படி, மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை அந்தக் குழுமத்திடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இதனை மீறும் வகையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்க ஒன்று அல்ல' எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ` நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசால் செயல்பட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய நலன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இதனை அரசியல் ஆக்கக் கூடாது' எனவும் தெரிவித்திருந்தார்.
கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வு நடைமுறைக்கு எதிராக மாநில அரசு குழு அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், `தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், `உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது' என அரசின் தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். மேலும், `குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?' எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அரசிடம் விளக்கம் பெற அவகாசம் கேட்கப்பட்டதால், வரும் ஜூலை 5 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், `` உச்ச நீதிமன்றத்தில் ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு, `நீட் தேர்வால் எந்த பாதிப்பும் இல்லை' எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் எந்த அடிப்படையில் ஏ.கே.ராஜன், இந்தக் குழுவை ஏற்றுக் கொண்டார்?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், ``தேர்தல் வாக்குறுதியில் கூறி விட்டோம் என்பதற்காகவே நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் ஏற்கும் நிலையில் தமிழ்நாடு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்துவிட முடியாது. நீட் தேர்வுக்குப் பிறகும் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 405 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுவதால், பொய் பிரசாரங்களைத் தவிர்க்க வேண்டும்' எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் அடுத்த நடவடிக்கை என்ன?
உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்வி குறித்து பதில் அளித்த தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், `` இந்த வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும்போது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது. மாணவர்களின் நலன், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்து கேட்கத்தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பாதிப்பு குறித்து ஆராய்வதற்காகத்தான் இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலமை நீதிமன்றங்களின் அனுமதி வேண்டுமா என்பது குறித்து ஆராய்ந்து அடுத்த விசாரணையில் பதில் அளிக்கப்படும்" என்றார்.
மேலும், `` இப்போது வழங்கப்பட்டுள்ளது தீர்ப்பு அல்ல, அடுத்த தேதிக்கு ஒத்தி வைத்து அரசின் பதிலைக் கேட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கருத்துகள், சட்டரீதியிலான காரணங்கள், சட்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து சட்ட நிபுணர்கள் பதில் அளிப்பார்கள்" எனவும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- உடல் மெலிந்த வடகொரியாவின் கிம் ஜோங் உன் - என்ன ஆனது?
- கேள்விக்குறியாகும் தனிதேர்வர்களின் எதிர்காலம் - என்ன செய்யவிருக்கிறது தமிழ்நாடு அரசு?
- மீண்டும் செல்வாக்கை பெருக்கும் ட்ரம்ப்பின் புதிய உத்தி
- விஸ்மயா மரணம்: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை வழக்கில் என்ன நடந்தது?
- பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
- வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்