You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருல் கக்கர்: கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த கவிதைக்காக விமர்சனங்களை சந்தித்த இந்திய பெண் கவிஞர்
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்தியா செய்தியாளர்
குஜராத்தின் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கும் ஒரு கவிஞர், மே மாத தொடக்கத்தில் ஒரு நாள் காலையில் தனது தினசரி வேலைகளை முடித்தபிறகு, செய்தித்தாள்களை கையில் எடுத்தார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் இந்தியா தத்தளித்துக் கொண்டிருந்தது. கோவிட்-19 காரணமாக இறந்தவர்கள் என்று அஞ்சப்படுபவர்களின் உடல்கள், புனித நதியான கங்கையில் மிதப்பதை காட்டும் மனதை வருத்தும் புகைப்படங்கள் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் காணப்பட்டன. மயானங்கள் நிரம்பி வழிவதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மூச்சுத்திணறி இறப்பதாகவும் செய்திகள் காணப்பட்டன.
இவற்றை கண்ட பருல் கக்கர் கலக்கமுற்றதுடன், உடனே ஒரு கவிதையை எழுதினார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'ஷப்வாஹினி கங்கா' (உடல்களை சுமந்து செல்லும் கங்கை) என்ற பெயரிடப்பட்ட 14-வரி குஜராத்தி மொழி கவிதையை வெளியிட்டார். ஃபேஸ்புக்கில் 15,000 க்கும் மேற்பட்டவர்கள் அவரை பின்தொடர்கிறார்கள்.
வைரஸின் ஆக்ரோஷம் பற்றியும், அது ஏற்படுத்திய மரணத்தையும், பேரழிவையும் குறித்து அக்கவிதை பேசுகிறது. மிதக்கும் சடலங்கள், இறுதிச்சடங்கில் எரியும் உடல்கள், மயானங்களில் அதிக பிணங்கள் எரிவதன் காரணமாக உருகும் புகைப்போக்கிகள் குறித்து பருல் எழுதியுள்ளார்.
"நகரம் பற்றி எரியும்போது, அவர் ஃபிடில் வாசித்துக்கொண்டிருந்தார்," என்று யாரையும் பெயர் குறிப்பிடாமல் அவர் எழுதி இருந்தார். மற்றொரு வரியில், "வெளியே வந்து உரக்கச் சொல்லுங்கள்/ அந்த நிர்வாண ராஜா கால் ஊனமானவர் மற்றும் பலவீனமானவர்" என்றும் தனது கவிதையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கவிதையை பதிவிட்ட சில மணி நேரத்தில், பிரச்னை வெடித்தது.
பிரதமர் நரேந்திர மோதியின் அரசு கொரோனா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியதை விமர்சிப்பதாக தோன்றிய இந்த கவிதை விரைவில் வைரலானது. குறுகிய காலத்துக்குள் இக்கவிதை ஆங்கிலம் உட்பட அரை டஜன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
தங்கள் தலைவர் மீதான தாக்குதல் இது என கருதிய மோதியின் ஆதரவாளர்களால் பருல் வன்மத்துடன் விமர்சிக்கப்பட்டார்.
வாட்ஸ்அப்பில் பல்லாயிரக்கணக்கான கடுமையான கருத்துகள் பகிரப்பட்டன. சிலர் பருலை "ராட்சசி" என்றும் "தேச விரோதி' என்றும் அழைத்தனர். சக கவிஞர்களும் கட்டுரையாளர்களும் இப்போக்கை கண்டித்தனர்.
ஆனால் அவருக்கு பரவலான ஆதரவும் கிடைத்தது. "இந்த கவிதை ஒரு முரண்பாடான நையாண்டி போன்றது. அவர் மோதி என்று பெயரிடவில்லை. ஆனால் அவரது வேதனையும் கோபமும் தெளிவாக தெரிகிறது" என நியூயார்க்கைச் சேர்ந்த எழுத்தாளர் சலீல் திரிபாதி கூறினார். அவர் தான் இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
"ஆட்சியாளர்களை கேலி செய்ய பருல் சொல்லணிகள் மற்றும் எதுகை மோனைகளை பயன்படுத்தினார்" என்று அவர் குறிப்பிட்டார்.
விமர்சகர்களின் கோபத்தை எதிர்கொண்ட பிறகும், பருல் கக்கர் மெளனத்தை கடைப்பிடித்து வருகிறார். நான் அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டபோது, "என்னால் இப்போது யாருடனும் பேச முடியாது. உங்கள் நல்லெண்ணத்திற்கு என் நன்றிகள்," என பதில் வந்தது.
அதன் பின்னர் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தை லாக் செய்துள்ளார். ஆனால் கவிதை அப்படியே இருக்கிறது. அவர் கவிதையை நீக்காததற்காக, குஜராத்தி கவிஞர் மெஹுல் தேவ்கலா அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அழைத்திருக்கிறார். அப்போது, "நான் தவறாக எதுவும் சொல்லாதபோது அதை ஏன் நீக்க வேண்டும்?" என பருல் அவரிடம் கூறியுள்ளார்.
குஜராத்தின் அம்ரேலி நகரத்தைச் சேர்ந்த 51 வயதான பருல் கக்கர், சர்ச்சைக்கு புதியவர். "அவர் ஒரு அரசியல் எழுத்தாளராக அறியப்பட்டவர் அல்ல. அவர் ஒரு பிரபலமான, நல்லுணர்வு கவிஞர். இயற்கை, காதல், கடவுள் பற்றி எழுதுபவர். இந்த கவிதை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது," என சலீல் திரிபாதி கூறினார்.
ஒரு வங்கி ஊழியரை திருமணம் செய்து கொண்டுள்ள கக்கர், ஒரு இல்லத்தரசி. தான் "முதலில் இல்லத்தரசி, இரண்டாவதுதான் கவிஞர்" என அவர் தனது தோழிகளிடம் சொல்வார். கடந்த தசாப்தத்தில், உள்ளூர் இலக்கிய உலகில் அவர் தனது அடையாளத்தை பதித்துள்ளார். அவர் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கஸல் இசையுடன் கூடிய கவிதைகளை தன் மொழியில் எழுதியுள்ளார்."
"அவர் எப்போதுமே தன்னடக்கத்துடன் அமைதியாக இருப்பார். அவர் உண்மையில் மிகவும் பாரம்பரியமான பெண்மணி," என பருலை நன்கு அறிந்தவரும், இந்திய அரசு நடத்தும் செய்தி வலையமைப்பான தூர்தர்ஷனின் முன்னாள் நிலையத் தலைவருமான ரூபா மேத்தா கூறுகிறார்.
'ஷப்வாஹினி கங்கா' அவரது முதல் வெளிப்படையான அரசியல் கவிதை. "அவர் எளிமையான கவிதைகளை எழுதக் கூடியவர். ஆனால் அவர் எப்போதுமே தனது கருத்துகளை சிறப்பாக வெளிப்படுத்துபவராக இருந்து வருகிறார்," என கவிஞரும் எழுத்தாளருமான மனிஷி ஜானி கூறுகிறார்.
அவர் துன்புறுத்தப்படுகிறாரா என்பதை அறியவும், அவரின் சுதந்திரமான பேச்சுரிமையை எழுத்தாளர்கள் குழு எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும் ஜானி சமீபத்தில் அவரை தொடர்புகொண்டார். "நான் எந்த அழுத்தத்தையும் துன்புறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை. நீங்கள் எது சரி என்று நினைக்கிறீர்களோ, அதை செய்யுங்கள்," என பருல் அவரிடம் தெரிவித்தார்.
பருலின் இலக்கிய திறமைக்கு போதுமான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என பலர் கூறுகிறார்கள். வெளிர் சிவப்பு பூக்கள் கொண்ட ஒரு மரம் தனது வீட்டின் அருகே வெட்டப்பட்டபோது, அவர் மனதை உருக்கும் சோகமான கவிதை ஒன்றை எழுதினார். மற்றொரு கவிதையில் இந்து மதத்தின்படி, வாழ்க்கையின் நான்கு கட்டங்களில் ஒன்றான வானப்பிரஸ்தம் (காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல்) குறித்து அவர் எழுதியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், அவர் ஒரு கவிதையை எழுதினார். அதில் "மக்கள் தைரியத்தை இழந்துவிட்டார்கள். ஆகவே, தடித்த தோலுடன் வாழ்வதை நிறுத்திவிட்டு விழித்தெழ வேண்டும்" என அழைப்பு விடுத்தார் அவர். "இது மிகவும் குறிப்பிடத்தக்க கவிதை என்று நான் நினைக்கிறேன்," என மேத்தா கூறினார்.
தொற்று நோயை கையாண்ட விதம் குறித்து நரேந்திர மோதியை உள்ளூர் எழுத்தாளர்களும் கவிஞர்களும் விமர்சித்திருப்பது இது முதல் முறை அல்ல. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்வதற்கு முன் 12 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் மாநிலத்தை ஆட்சிசெய்தவர் நரேந்திர மோதி. உதாரணமாக, ஒரு முன்னணி உள்ளூர் இலக்கிய இதழ் 'எட்டாட்', இது தொடர்பாக பல வேதனை தரும் கவிதைகளை வெளியிட்டுள்ளது.
"பருல் கக்கர் மிகவும் நல்ல கவிஞர், ஆனால் அவரது சமீபத்திய கவிதை, ஒரு கவிதை அல்ல" என அரசு நடத்தும் அமைப்பான, குஜராத் சாகித்ய அகாடமியின் தலைவர் விஷ்ணு பாண்ட்யா கூறினார்.
"இது இழிவுபடுத்தல் மற்றும் அவதூறுகள் நிறைந்ததாக இருக்கிறது. 'எதுகை - மோனை' பொருளற்றதாக இருக்கிறது. மோதி மற்றும் பாஜகவுக்கு எதிரானவர்கள் இந்த கவிதையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்" என்று அவர் என்னிடம் கூறினார்.
"நாங்கள் அவருக்கு எதிரானவர்கள் அல்ல. அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இடதுசாரி தாராளவாதிகள் மற்றும் தேச விரோத சக்திகள், அவரது கவிதையை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
பருல் கக்கரின் கவிதைக்கு எதிரான அகாடமியின் நிலைப்பாட்டை எதிர்த்து மாநிலத்தில் 160க்கும் மேற்பட்ட பிரபலங்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம், ஒரு உள்ளூர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட மற்றொரு கவிதையுடன் கக்கர் மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். இது பல அடுக்குகள் நிறைந்தது என சலீல் திரிபாதி கூறினார். "அவர் இப்போது தனது விமர்சகர்களை விமர்சிக்கிறார். ஆனால் தன்னை உற்சாகப்படுத்துபவர்களிடமும் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார்."
"வலி தாங்கமுடியாத அளவுக்குப் போகலாம். அப்போதும் நீங்கள் பேசக்கூடாது/ உங்கள் இதயம் கதறினாலும் பேசக்கூடாது" என அக்கவிதையில் ஒரு வரி கூறப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்