சத்ரபதி சிவாஜியின் மனைவி சோயராபாயைக் கொன்றது அவரது மகனா? பாஜக எதிர்க்கும் புத்தகத்தில் கூறப்பட்டது உண்மையா?

    • எழுதியவர், ப்ராஜக்தா துலப்
    • பதவி, பிபிசி மராத்தி

அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளது. சத்ரபதி சிவாஜியின் மனைவி சோயராபாயை அவரது மூத்த மகன் சம்பாஜி மகராஜ் கொலை செய்ததாகக் கூறுகிறது அந்தப் புத்தகம்.

இதனால், மகாராஷ்டிர அரசியல் சூடுபிடித்தது. இது மராட்டியர்களை கோபப்படுத்தியுள்ளது.

கிரிஷ் குபேர் தனது 'ரெனேசான் ஸ்டேட் - த அன்ரிட்டன் ஸ்டோரி ஆஃப் மேகிங்க் ஆஃப் மகாராஷ்டிரா" ' என்ற புத்தகத்தில் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிராவின் வரலாறு பற்றிப் பேசிய அவர், சத்ரபதி சிவாஜி மகாராஜின் மரணத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

" அடுத்த ஆட்சியாளர் யார் என்பது தொடர்பான சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர விரும்பி, கடைசியில் சம்பாஜி மகராஜ் சோயராபாயையும் அவருடைய விசுவாசிகளையும் கொன்றார்" என அந்த நூல் குறிப்பிடுகிறது.

"இதில், எட்டு முக்கியப் பிரமுகர்கள் அடங்கிய சிவாஜியின் அஷ்ட பிரதான் மண்டலின் சில உறுப்பினர்களும் அடக்கம். இந்தக் கொடுஞ்செயலுக்குப் பிறகு, சிவாஜியின் பேரரசு சிதைந்தது. இதனால் சம்பாஜி பேரிழப்பைச் சந்தித்தார்." என்கிறது அப்புத்தகம்.

இந்தப் புத்தகத்தைத் தடை செய்ய பாஜக கோரியுள்ளது. அதில் சத்ரபதி சம்பாஜிக்கு எதிராக மோசமான விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. தவிர, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமோல் கோல்ஹேவும் இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கிரிஷ் குபேர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சம்பாஜி ஆதரவுக் குழுவும் பிற மராட்டிய அமைப்புகளும் இதற்குக் கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளன.

ஆனால் இந்த விவகாரம், ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளாகியுள்ள சம்பாஜி மகாராஜுக்கும் சோயராபாய்க்கும் இடையிலான உறவின் தன்மை குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது.

சிவாஜி மகராஜ் இறந்த பிறகு ராய்கட்டில் என்ன நடந்தது? சம்பாஜி மகாராஜுக்கு எதிராக சோயராபாய் சதி செய்தாரா? இது குறித்த வரலாற்று ஆதாரங்கள் உள்ளனவா? இது குறித்த வரலாற்றாசிரியர்கள் கருத்து என்ன? இதில், கிரிஷ் குபேருக்கு என்ன கருத்து? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயற்சித்தோம்.

பட்டத்தரசி சோயராபாய்க்கும் இளவரசர் சம்பாஜிக்கும் இடையேயான போட்டி

சிவாஜி மகாராஜின் மனைவி என்ற மரியாதை சோயராபாய்க்கு இருந்தது, அவர் மோஹிதே குடும்பத்தைச் சேர்ந்தவர். தாராஜி மோஹிதே மற்றும் சம்பாஜி மோஹிதே ஆகியோர் ஷாஹாஜி ராஜேவின் படையில் துணிச்சலான போர்வீரர்களாக இருந்தனர்.

சோயராபாய் சம்பாஜி மோஹிதேவின் மகள். அவர் சிவாஜி மகராஜைத் திருமணம் செய்த சரியான தேதி குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தீபாபாய் மற்றும் ராஜாராம் என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி ராய்கட்டில் நடைபெற்ற கௌரவ விழாவில் சோயராபாய்க்கு பட்டத்தரசி பட்டம் வழங்கப்பட்டது. சோயராபாய் தவிர, சிவாஜி மகாராஜின் மூன்று மனைவிகள் அப்போது உயிருடன் இருந்தனர். சம்பாஜிக்கு இரண்டு வயதாக இருந்தபோது, ​​அவரது தாயார் சாய்பாய் காலமானார்.

சோயராபாய்க்கு பட்டத்தரசி பட்டம் வழங்கப்பட்ட அதே விழாவில் சம்பாஜிக்கு இளவரசர் பட்டமும் கிடைத்தது. சிவாஜி மகராஜின் வாரிசாக சம்பாஜி இருப்பார் என்று நினைத்து, ஆங்கிலேயர்களும் சம்பாஜிக்கு ஒரு பரிசை வழங்கியிருந்தனர். பிரிட்டிஷ் ஆவணங்களில் ராஜாராமுக்கு பரிசு வழங்கப்பட்டது பற்றி எதுவும் பேசப்படவில்லை என வரலாற்று ஆய்வாளர் கமல் கோகலே கூறுகிறார்.

மகாராஷ்டிராவின் பல வரலாற்றாசிரியர்கள் சோயராபாய் மற்றும் அவரது வளர்ப்பு மகன் சம்பாஜி மகராஜ் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்ட போது, சோயராபாயின் மகன் ராஜாராமுக்கு நான்கு வயது தான் ஆகியிருந்தது.

"சோயராபாய் தனது மகனுக்குக் கிடைக்காத பட்டம் சம்பாஜிக்குக் கிடைத்ததைக் கண்டு பொறாமை கொண்டிருக்கலாம். அது மனித இயல்பு." என எழுதுகிறார் முனைவர் கமல் கோகலே.

சம்பாஜி பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்ட பின்னர், சிவாஜியின் போஸ்லே குடும்பத்தில் கருத்து வேறுபாடு தொடங்கியது. இந்தக் கருத்து வேறுபாடு சிவாஜி மகராஜ், சோயராபாய் மற்றும் சம்பாஜி இடையே இருந்தது என்று கூறப்படுகிறது. இது குறித்த குறிப்பு ஷிவ் திக்விஜயா என்ற ஆவணத்தில் காணப்படுகிறது.

ராஜாராமை வாரிசாக அறிவிக்க வேண்டும் என சோயராபாய் வலியுறுத்தி வந்ததாக இந்த ஆவணம் குறிப்பிடுகிறது. ஷிவ் திக்விஜய் பரோடாவில் 1810 இல் வெளியிடப்பட்டது என மராட்டிய வரலாற்றாசிரியர் வி.கே.ராஜ்வாடே தெரிவிக்கிறார்.

இந்த ஆவணங்களில் சிவாஜி மகராஜ் - சோயராபாய் இடையே நடந்த ஒரு சந்திப்பு பற்றிய குறிப்பு உள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தன் மகன் ராஜாராமை அரச வாரிசாக அறிவிக்கும் படி சோயராபாய் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சிவாஜி மகராஜுக்கு சோயராபாய் மீது முழு நம்பிக்கை இல்லை என்றும் அந்த ஆவணத்தில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

பாக்கர் என்று அழைக்கப்படும் இந்த ஆவணங்களை அந்தக் காலத்தின் தினசரி பத்திரிகை என கூறலாம். இது மராட்டிய வரலாற்றைப் பற்றி நிறைய தகவல்களைத் தருகிறது, ஆனால் பெரும்பாலும் இதில் தேவையற்றதும் ஒருதலைப்பட்சமானதுமான தகவல்கள் இருப்பதால், அவை நம்பகமானவை என கருதப்படுவதில்லை.

"ராய்கட்டில் அந்த நேரம் பதற்றமான சூழல் நிலவியது. அதற்குக் காரணம் ராணி சோயராபாய் மற்றும் அவரது ஆதரவான போர்வீரர்கள் தாம்" என எழுதுகிறார் முனைவர் ஜெய்சிங்ராவ் பவார்,

உண்மையில், அந்த நேரத்தில் சம்பாஜி மகராஜ் ராய்கட்டில் இருந்து தொலைவில் ஓர் இடத்தில் பணியமர்த்தப்பட்டிருந்ததால், தலைநகரில், சோயராபாய் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார்.

ஜெய்சிங்ராவ் பவார் சத்ரபதி சம்பாஜி - ஒரு சிகிச்சை என்ற தமது நூலில், "சம்பாஜி வாரிசான பிறகு, சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே, அதாவது அக்டோபர் 1676 வரை மட்டுமே ராய்கட்டில் இருந்தார். 1678-ல் சிவாஜி மகராஜ் சம்பாஜி மகாராஜுடன் சேர்ந்து கர்நாடகாவைத் தாக்கினார். அதன் பிறகு சிவாஜி இறக்கும் வரை அவர் ராய்கட்டில் இல்லை. சிவாஜி மகராஜ் ராய்கட்டிலேயே தங்கியிருந்தாலும், சம்பாஜி மூன்றரை ஆண்டுகளாக ராய்கட் திரும்பவில்லை. இவ்வளவு நீண்ட காலத்தில், சோயராபாய் மற்றும் அவரது ஆதரவாளர்களின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது.

சம்பாஜியின் வாழ்க்கை குறித்த கவிதை நூல் அனுபுராணம். இது சம்பாஜிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதை எழுதியவர் கவிஞர் பரமானந்தரின் புதல்வர் தேவதத்தர்.

அனுபுராணத்தில், சம்பாஜியின் வாழ்க்கை குறித்த நாடக வடிவிலான குறிப்பு உள்ளது. அதில், ராஜ்ஜியத்தின் பிரிவினை குறித்து சிவாஜி மற்றும் சம்பாஜிக்கு இடையில் நடந்த ஒரு விவாதம் பற்றிய குறிப்பு உள்ளது.

இதில், சிவாஜி மகராஜ் சம்பாஜியிடம், "இப்போது என் ராஜ்யத்தைப் பாதுகாப்பது எனக்கு கடினமாகி வருகிறது, இந்த ராஜ்யத்தை உன்னிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். உன் சிற்றன்னையின் மகனுக்கு இதில் எந்தப் பகுதியும் கிடைக்காது. அவனுக்காக நான் புதிய ராஜ்ஜியம் ஒன்றை வெல்லுவேன். ராஜாராம் மிகவும் சிறு வயதுடையவன். ராஜ்ஜியமாளும் திறனும் அவன் இன்னும் பெறவில்லை. உன்னிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. இந்த ராஜ்ஜியத்தை உன்னிடம் ஒப்படைக்க நான் தயாராக இருக்கிறேன். உடல் எப்படித் துண்டாடப்பட முடியாதோ அது போல இந்த ராஜ்ஜியமும் துண்டாடப்படாது. நான் இன்னொரு ராஜ்ஜியத்தை வெல்லும் வரை நீ, ஸ்ரீநகர்பூரிலேயே இரு. நீ ராய்கட் வந்து சோயர்பாயுடன் சேர்ந்து இருக்க வேண்டாம்." என கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பாஜி அதற்கு, அவரிடம், "நமது செயல்கள் தான் நமது மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் காரணம். நீங்கள் இல்லாமல் என் மனம் மகிழ்ச்சியாக இருக்காது. நீங்கள் இங்கேயே இருங்கள். நீங்களே சக்கரவர்த்தியாக இருங்கள். பிரிவினை பற்றிய பேச்சும் தவறானது. நான் ஒரு பிளவுபட்ட ராஜ்ஜியத்தை விரும்பவில்லை" என கூறியதாகவும் குறிப்பு உள்ளது.

ராய்கட் பிரிவினைக்கான திட்டம் 1675 -76 இல் விவாதிக்கப்பட்டது என்பதை வரலாற்றாசிரியர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். சிவாஜி மகாராஜின் அஷ்ட பிரதான் மண்டலின் சில உறுப்பினர்கள் இளவரசர் சம்பாஜிக்கு ஆதரவாக இல்லை. அதனால் அவர்களிடையேயும் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.

சத்ரபதி சம்பாஜியின் ஆளுமை குறித்து வரலாற்றாசிரியர்களிடையே இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சம்பாஜி மிகவும் அறிவுள்ளவர், இராஜதந்திரம் மற்றும் தொலைநோக்குடையவர். இருப்பினும், சில வரலாற்று ஆவணங்கள் அவரைப் பொறுப்பற்றவர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவரல்ல, சிந்தனையற்றவர் என விவரிக்கின்றன. மகாராஷ்டிராவில், கடந்த மூன்றரை நூற்றாண்டுகளாக, இந்த இரண்டில் உண்மை எது என்ற சர்ச்சையும் நிலவுகிறது. இவற்றில் எந்த ஆவணங்களை நம்புவது என்பது குறித்தும் குழப்பம் நிலவுகிறது.

ஜெய்சிங்ராவ் பவார்,"ராய்கட்டில் ஏற்பட்ட குழப்பம், சம்பாஜி விவகாரம் குறித்து அல்ல என்றும் ராணி சோயராபாய் மற்றும் பிரமுக் மண்டலில் உள்ள அவரது ஆதரவாளார்களின் நோக்கத்தால் தான் ஏற்பட்டது. ராய்கட்டில் சம்பாஜிக்கு எதிரான மன நிலை நிலவி வந்தது. இதையொட்டி, தனது ஆதரவாளர்களுடன் சதித்திட்டத்தைத் தீட்டத் தொடங்கினார். சம்பாஜியை மோசமானவர் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகளும் அந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். " என எழுதுகிறார்.

சிவாஜி மகராஜின் வாரிசானவர் யார்?

அதே காலகட்டத்தில் முகலாயப் பிரிவின் திலேர் கானுடன் சம்பாஜி கைகோர்த்தார். இது ராய்கட்டில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது என ஒரு சில வரலாற்றாசிரியர்களும், முகலாயர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர் நாடு திரும்பினார் என வேறு சில வரலாற்றாசிரியர்களும் கூறுகிறார்கள்.

கமல் கோகலே, "1678 ஆம் ஆண்டில் சம்பாஜி மகராஜ் முகலாயர்களைச் சந்தித்தது, அஷ்ட பிரதான் மண்டலைச் சேர்ந்தவர்களிடையே சம்பாஜி மீதான அவநம்பிக்கையையும் கசப்புணர்வையும் அதிகரித்தது. இந்தச் சூழலில், சிவாஜி மகாராஜுக்கு வாரிசு குறித்து ஒரு திட்டவட்டமான முடிவை எடுப்பது கடினமாகிவிட்டது" என்று எழுதியுள்ளார்.

சிவாஜி மகராஜ் இறப்பதற்கு முன், தனது முக்கியப் பிரமுகருக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறும் மராட்டிய ஆவணங்கள் கிடைக்கின்றன. அதில் அவர் சம்பாஜியை விட ராஜாராமுக்கு முன்னுரிமை அளித்தார். 1697 இல் எழுதப்பட்ட ஆவணங்களின்படி, சம்பாஜி ராஜாவுக்குக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், ராஜாராமைப் பாராட்டியதாகவும் குறிப்பு உள்ளது.

ராஜாராமின் திருமணமும் சிவாஜியின் மரணமும்

சோயராபாயின் மகன் ராஜாராம் 1680 மார்ச் 15 அன்று திருமணம் செய்து கொண்டார். அப்போது ராஜாராமுக்குப் பத்து வயது. இந்தத் திருமணம் சிவாஜி மகராஜ் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்தது. சம்பாஜி தனது சகோதரனின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. முகலாயர்களுடன் ஓராண்டு சுமுகப் போக்கைக் கடைபிடித்ததன் காரணமாக, அந்த நேரத்தில் மராட்டியப் பேரரசில் சம்பாஜி மீது சந்தேகப் பார்வை விழுந்திருந்தது.

நான்கு தசாப்தங்களாக அந்த சகாப்தத்தின் ஆவணங்களை ஆய்வு செய்த வி.சி.பெந்திரே, சம்பாஜி மகராஜ் குறித்து, சத்ரபதி சம்பாஜி மகராஜ் என்ற ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் 1958 இல் நிறைவடைந்தது. அவர் இந்தியா வரலாற்று திருத்த மையத்திலும் சில காலம் பணியாற்றியுள்ளார். லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸ் மற்றும் பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து தனது புத்தகத்திற்காக மராட்டா வரலாறு பற்றிய தகவல்களையும் சேகரித்தார்.

இருப்பினும், ஜெய்சிங் ராவ் பவாரின் பார்வையில், உண்மை வேறாக உள்ளது. சம்பாஜி மஹராஜ், சோயராபாய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கோபப்படவில்லை.

சிவாஜி மகராஜ் ராஜாராமின் திருமணத்திற்குப் பிறகு நோய்வாய்ப்பட்டு 1680 ஏப்ரல் 3 அன்று இறந்தார். அவரது மரணம் குறித்துக் கூட வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

"சில இடங்களில் சோயராபாய் தான் சிவாஜிக்கு விஷம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதில் எந்த உண்மையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை." என எழுதுகிறார் பெந்த்ரே.

சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு

சிவாஜி மகாராஜின் மரணத்திற்குப் பிறகு, ராய்கட்டில் நிகழ்வுகள் வேகமாக மாறியதுடன், ராஜாராமை அரியணையில் அமர்த்த முயற்சிகள் தொடங்கின. சில நாட்களில் ராஜாராம் முடிசூட்டப்பட்டார்.

ராஜராம் சக்கரவர்த்தியானபோது, ​சம்பாஜியைச் சிறையில் அடைக்கத் திட்டமிட்டதாகவும் மராட்டிய ஆவணங்களில் ஒரு குறிப்பு உள்ளது.

"இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் அன்னாஜி இருந்தார், அதில் அவர் சோயராபாய் மற்றும் பேஷ்வாவையும் சேர்த்துக் கொண்டார். அன்னாஜியின் ஆதிக்கம் அதிகமாக ஆக, பேஷ்வாவின் நிலை பலவீனமானது. அதே நேரத்தில் சோயராபாய் தனது மகனை அரியணையில் ஏற்ற விரும்பினார்" என பெந்த்ரே எழுதினார்.

இந்தச் சதித்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிவாஜியின் நம்பகமான தளபதியாக இருந்த சோயராபாயின் சகோதரர் ஹம்பிராவ் மோஹிதே, ராய்கட்டிலேயே இருந்ததாகவும் அவர் சம்பாஜிக்கு இறுதி வரை விசுவாசமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

சோயராபாய் தனது மகனை அரியணையேற்றும் வரை, தனது சகோதரருடன் கூட பேசவில்லை என ஜெய்சிங் ராவ் பவார் எழுதியுள்ளார்.

சம்பாஜி ராய்கட் வந்த போது…

ராய்கட்டில் இருந்து பன்ஹால்கட் வரை சென்று சம்பாஜி மகராஜை கைது செய்யப் பிரதம அமைச்சர்கள் ஒரு திட்டத்தைத் தீட்டினர். ஆனால் சிவாஜியின் தளபதி, ஹாம்பிராவ் மோஹிதே சம்பாஜிக்கு ஆதரவாக இருந்தார், அவர் ஏற்கனவே பேஷ்வாக்களைக் கைது செய்து சம்பாஜி மகாராஜின் முன் நிறுத்தினார்.

பின்னர் இந்தத் துரோகிகள் ராய்கட் கொண்டு வரப்பட்டனர். அக்கால நிகழ்வுகளின் அடிப்படையிலான ஆவணங்களில், மல்ஹார் ராம்ராவ் சிட்னிஸ், ராய்காட்டை அடைந்தவுடனேயே சம்பாஜியின் உத்தரவின் பேரில் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாக எழுதியுள்ளார். இந்த ஆவணம் 1732 இல் எழுதப்பட்டது. இது சம்பாஜி இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பதால், மல்ஹார் ராம்ராவ் சிட்னிஸின் எழுத்துக்கள் குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மல்ஹார் ராம்ராவின் தாத்தாவின் தந்தை, சம்பாஜி மகாராஜின் யானையின் காலடியில் மிதிக்கப்பட்டார் என்றும் அதனால் அந்தக் கோபம் அவரது எழுத்தில் தெரியும் என எழுதுகிறார் வரலாற்றாசிரியர் ஜெய்சிங்ராவ் பவார்.

பிரபல வரலாற்றாசிரியர் வி.கே.ராஜ்வாடே, இந்த ஆவணங்களை வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என கூறுகிறார்.

ராய்கட்டில் சம்பாஜி மகாராஜின் வருகைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளின் மற்றொரு குறிப்பு, அனுபுராணத்திலும் காணப்படுகிறது. அதில் சம்பாஜி சோயராபாய் உள்ளிட்ட தனது மற்ற வளர்ப்புத் தாய்மார்களைச் சந்தித்து ஆறுதல்படுத்துகிறார் என கூறப்படுகிறது.

சிவாஜி மகாராஜின் மரணத்திற்குப் பிறகு சோயராபாய் ஒன்றரை ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக வி.சி பெந்த்ரே தனது சத்ரபதி சம்பாஜி மகராஜ் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பிரபல வரலாற்றாசிரியர் யதுநாத் சர்க்கார் இந்தச் சம்பவங்களைத் தனது சிவாஜி அண்ட் ஹிஸ் டைம்ஸ்-ல் 1919 இல் வெளியிட்டார். வரலாற்றாசிரியர் இந்திரஜித் சாவந்த், இந்த விவரங்களின் அடிப்படையில், சம்பாஜியின் கதாபாத்திரத்தைச் சுற்றி பல நாடகங்கள் எழுதப்பட்டன, இதன் காரணமாக அவரைக் குறித்த தவறான உருவமும் மக்களின் மனதில் உருவானது என கூறுகிறார்.

அரியணை ஏறினார் சம்பாஜி

சிவாஜி மகராஜ் இறந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 16, 1681 அன்று சம்பாஜி அரியணை ஏறினார். ஜெய்சிங்ராவ் பவார் அவர் அரியணையை ஏற்றுக்கொண்டவுடனேயே சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் விடுவித்து அவர்களுக்குத் தத்தம் பதவிகளையும் கொடுத்தார் என்றும் ஆனால் முக்கியப் பிரமுகர் மரணமடைந்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

சம்பாஜியின் ஆட்சியின் போதே, ராய்கட்டில் கிளர்ச்சி தோன்றி, அந்த முயற்சிகள் இரண்டு முறை தோல்வியுமடைந்தன. சம்பாஜி பொறுப்பேற்ற ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் இவை அனைத்தும் நடந்தன.

ஒருமுறை சம்பாஜிக்கு விஷம் கொடுக்கும் முயற்சி நடந்தது.​​இரண்டாவது முறை சம்பாஜி சதித்திட்டத்தை முறியடித்தார். மும்பையில் உள்ள ஆங்கிலேயர்களும் இந்த சதித்திட்டங்களைப் பற்றி எழுதினர்.

ஜெசிங் ராவ் பவார் தனது 'சத்ரபதி சம்பாஜி - ஒரு சிகிச்சை' என்ற நூலில், 1681 செப்டம்பர் 8 அன்று அன்னாஜி, சோயராபாய் மற்றும் ஹிரோஜி ஃபர்ஜந்த் ஆகியோர் சம்பாஜிக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டி, சுல்தான் அக்பரையும் தம்முடன் சேரச் சொல்ல, ஆனால் அவர் சம்பாஜிக்கு உண்மையுள்ளவாராக, உடனடியாக இது குறித்து சம்பாஜிக்கும் தெரிவித்தார் என எழுதியுள்ளார்.

இது பற்றிய குறிப்பு மராட்டி வரலாற்றின் ஆவணங்களிலும் காணப்படுகிறது. அதன்படி இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர், ஆனால் சோயராபாய் ஊருக்கு பயந்து வெட்கி, விஷம் அருந்தி உயிர் விட்டார்.

வரலாற்றாசிரியர் ஜி.சி.சர்தேசாயின் 'ஸ்டேட் ஆஃப் மராட்டேஷாஹி' என்ற புத்தகம் 1935 இல் வெளியிடப்பட்டது. அதில் அவர், "ஹிரோஜி ராய்கட் திரும்பியபோது, ​​சோயராபாய் மற்றும் அன்னாஜி பந்த் ஆகியோருடன் கலந்துரையாடினார், முதல் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள், சம்பாஜியை அகற்றி ராஜாராமை அரியணை ஏற்றத் திட்டமிடப்பட்டது. அக்பர் மூலம் சம்பாஜி இதைப் பற்றி அறிந்தபோது, ​​அவர் அதிர்ச்சியடைந்தார். " என்று எழுதியுள்ளார்.

சோய்ராபாய் எப்போது இறந்தார்?

அதிகாரப் பூர்வ ஆவணங்களின் அடிப்படையில், 1681 அக்டோபர் 27 அன்று சோயராபாய் இறந்தார். ஆனால் இந்த மரணம் எவ்வாறு நடந்தது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை.

கோலாப்பூரில் வசிக்கும் வரலாற்றாசிரியர் இந்திரஜித் சாவந்த் கூறுகையில், அன்னாஜி மற்றும் பாலாஜி ஆகியோரைத் தூக்கிலிட்டதாக ஒரு குறிப்பு உள்ளது, ஆனால் சோயராபாய் எப்படி இறந்தார் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

கிரிஷ் குபேரின் புத்தகத்தின் இந்தப் பகுதிக்கு சாவந்த் ஆட்சேபனை தெரிவித்துள்ளார், இது புனைகதையின் அடிப்படையில் சம்பாஜியின் பாத்திரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சி என கூறினார்.

இந்தச் சர்ச்சை குறித்து பிபிசி மராட்டி, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கிரிஷ் குபேருடன் பேசியபோது, ​​அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார், "எனது ரெனெசான் ஸ்டேட் புத்தகத்தில் சதவாஹன சாம்ராஜ்யத்திலிருந்து நவீன சகாப்தம் வரையிலான மகாராஷ்டிராவின் கதையும் அடங்கியுள்ளது. அத்தகைய புத்தகம் சத்ரபதி சிவாஜி மற்றும் அவரது வாரிசு பற்றிய விவாதமில்லாமல் முழுமையடைய முடியாது. நான் எழுதியது பிரபல வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. புத்தகத்திற்காக எடுக்கப்பட்ட விவரங்களின் ஆதாரங்கள் புத்தகத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது" என அவர் பதிலளித்துள்ளார்.

பல வரலாற்றாசிரியர்களுடன் பேசியதிலிருந்தும், பல ஆவணங்களைப் படித்ததிலிருந்தும், சோயராபாய்க்கும் சம்பாஜி மகாராஜுக்கும் இடையில் அரியணைக்கான ஒரு போராட்டம் இருந்தது என்பது தெளிவாகிறது. இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஆனால் நம்பகமான மற்றும் உண்மைத் தகவல்கள் இல்லாத நிலையில், சில விஷயங்களைத் தெளிவாகக் கூற முடியாது, சோயராபாயின் மரணம் அத்தகைய ஒரு அம்சமாகும்.

மராட்டியர்களின் தற்போதைய அடையாளமும் மகாராஷ்டிராவின் அரசியலும் பெரும்பாலும் சிவாஜியைச் சுற்றியே இருப்பதால் வரலாற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :