ரன்வீர் ஷர்மா ஐ.ஏ.எஸ்: சத்தீஸ்கரில் கொரோனா வைரஸ் 'ஊரடங்கை மீறிய' இளைஞரை அறைந்த ஆட்சியர் பொறுப்பிலிருந்து நீக்கம்

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு ஊரடங்கை மீறியதாக இளைஞர் ஒருவரை அறைந்து, அவரது செல்ஃபோனை உடைத்த சத்தீஸ்கர் மாநில மாவட்ட ஆட்சியர் ஒருவர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியரான ரன்வீர் ஷர்மாவை அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க சத்தீஸ்கர் முதலமைச்சர் ஞாயிறன்று உத்தரவிட்டுள்ளார்.

இது பணியிடை நீக்கமோ, பதவி நீக்கமோ அல்ல. அவருக்கு வேறு பொறுப்பு வழங்கப்படும்.

சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகும் காணொளி ஒன்றில் சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்வீர் ஷர்மா இளைஞர் ஒருவரின் செல்ஃபோனை பிடுங்கி எறிவது போலவும் பின்னர் அவரை அடிப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இளைஞரைத் தாம் அடித்ததுடன் நிறுத்தாத ஆட்சியர் ஷர்மா, தமது காவலர்களையும் அழைத்து அந்த இளைஞரை அடிக்க வைத்தார்.

இந்த நிகழ்வின் காணொளி சமூக ஊடகங்களில் நேற்று (சனிக்கிழமை) வைரலாக பின்பு ரன்பீர் ஷர்மா மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. #SuspendRanbirSharmaIAS என்ற ஹேஷ்டேக் இன்று காலை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கூட அவரது நடவடிக்கையை கண்டித்து இருந்தது. "இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இச்செயல் குடிமைப் பண்பு மற்றும் சேவைகளின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது," என்று அந்த அமைப்பு கூறியிருந்தது.

பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனக் குரல் எழுந்த பின்பு ஐஏஎஸ் அதிகாரி ரன்வீர் ஷர்மா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

"ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றில் 23 வயது இளைஞர் ஒருவர் வேகமாக வந்தார். தடுப்பூசி போடச் செல்வதாகப் போலி ஆவணம் ஒன்றையும் அவர் வைத்திருந்தார். ஊரடங்கு விதிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சற்று கறாராக இருக்க வேண்டியிருந்தது. எனினும் என்னுடைய செயல்களுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்," என்று ரன்வீர் ஷர்மா கூறியுள்ளார்.

ஷர்மாவும் அவரது பெற்றோரும் சமீபத்தில்தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :