You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் யார்? - விஜயதரணி, முனிரத்தினம், பிரின்ஸ் இடையே போட்டி
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்றக் குழுத் தலைவர் யார்?' என்பது முடிவாகாததால், அக்கட்சியில் பெரும் மோதல் நிலவுகிறது. இந்த மோதல் சட்டமன்றத்திலும் வெளிப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். என்ன நடக்கிறது சத்தியமூர்த்தி பவனில்?
13 புதிய முகங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வென்றது. தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதையடுத்து, `சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?' என்பதை முடிவு செய்வது தொடர்பாக, கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகங்களாக இருப்பதால், `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வான சீனியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அந்த வரிசையில், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி, முனிரத்தினம் ஆகியோர் இடையே போட்டி நிலவியது. இதே பதவிக்கு கிள்ளியூர் ராஜேஷ், செல்வப் பெருந்தகை, மயிலாடுதுறை ராஜ்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகின்றனர். சட்டமன்றத் தலைவருக்கான போட்டி அதிகமாக இருந்ததால், சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. குறிப்பாக, தலைவர் பதவிக்கு பிரின்ஸ், விஜயதரணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பிரின்ஸுக்கு அனுமதி கொடுத்த அழகிரி
இந்நிலையில், 12 ஆம் தேதி கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட அப்பாவுவை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர். அப்போது காங்கிரஸ் சார்பாக பேசுவதற்கு பிரின்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தநேரத்தில் விஜயதரணியும் கையை உயர்த்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைக் கவனித்த சபாநாயகர் அப்பாவு, ` என்னை வாழ்த்திப் பேச காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியும் அனுமதி கேட்டார். கட்சிக்கு ஒருவர் என்ற முறையில்தான் அனுமதி கொடுக்க முடியும். இரண்டு பேருக்கு அனுமதி வழங்கினால் முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றாகிவிடும்' என்றார்.
`காங்கிரஸ் கட்சியில் என்னதான் நடக்கிறது?' என அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சட்டசபையில் சபாநாயகரை வாழ்த்திப் பேசுவது தொடர்பாக குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ், கடந்த 11 ஆம் தேதி மாலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் அனுமதி கேட்டார். கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத் துணைத் தலைவராக பிரின்ஸ் இருந்ததால், அவரையே பேசுமாறு தலைவர் கூறிவிட்டார். இதுதொடர்பாக, அப்போதே சட்டமன்ற செயலர் சீனிவாசனிடம் பேசிய அழகிரி, `எங்கள் கட்சியின் சார்பாக பிரின்ஸ் பேசுவார்' எனக் கூறிவிட்டார். இந்தத் தகவல் விஜயதரணிக்கு சொல்லப்படவில்லை. இதுதான் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்" என்கின்றனர்.
தயங்கிய ஜி.கே.மணி
தொடர்ந்து பேசுகையில், `` நேற்று காலை சட்டசபை தொடங்கியதும், `கட்சித் தலைவர் கூறியதன் அடிப்படையில் என்னைப் பேச அனுமதிக்க வேண்டும்' என சபையின் செயலரிடம் பிரின்ஸ் கூறிவிட்டார். இதன்பிறகு எதிர் வரிசைக்கு சென்று அமர்ந்துவிட்டார். இதனைக் கவனித்த விஜயதரணி, ஜி.கே.மணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துவிட்டார். பின்னர் சபைக்கு வந்த ஜி.கே.மணி, விஜயதரணி அமர்ந்திருப்பதைப் பார்த்து பின்வரிசையில் சென்று அமர்ந்துவிட்டார்.
காங்கிரஸ் சார்பாக பிரின்ஸ் பேச முற்பட்டபோது, தனக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என விஜயதரணி கேட்டது சர்ச்சையாகிவிட்டது. பின்னர், பா.ம.க தரப்பில் ஜி.கே.மணி பேசுவதற்கான வாய்ப்பு வந்தபோது, விஜயதரணி இருந்த இடத்தில் மைக் ஆன் ஆகியுள்ளது. இதனால் எதிர் வரிசைக்கு வந்து ஜி.கே.மணி பேசிவிட்டுச் சென்றார். பின்னர் பழையபடி அதே இடத்துக்கு வந்து விஜயதரணி அமர்ந்து கொண்டார்" என்கின்றனர்.
போட்டியில் யார் யார்?
மேலும், `` சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடிப்பதால்தான் இவ்வளவு சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. இந்தப் பதவியை எதிர்நோக்கி விஜயதரணி, பிரின்ஸ் ஆகியோர் காய்களை நகர்த்தி வருகின்றனர். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தும் தோல்வியடைந்த செல்வப் பெருந்தகை, இந்தமுறை வெற்றி பெற்றார். அவரும் குழுத் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறார்.
ஆனால், இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷுக்கு பிற எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது அவர் மட்டும்தான். அடுத்ததாக, அவர் மாவட்ட தலைவராக உள்ள விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் என மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க ஆதரவு இல்லாமலேயே 90 சதவிகித இடங்களில் தனியாக வேட்பாளர்களை நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார். இதுபோன்று தமிழ்நாட்டில் எங்குமே நடக்கவில்லை. இவரும் குழுத் தலைவருக்கான பந்தயத்தில் இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, சட்டமன்றத் துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கும் போட்டி நிலவுகிறது" என்கின்றனர் விரிவாக.
`எனக்குத் தகவல் சொல்லப்படவில்லை`
`சட்டமன்றத்தில் என்ன நடந்தது?' என எம்.எல்.ஏ விஜயதரணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கட்சிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் சட்டசபையில் பேசுமாறு கூறினர். அந்த அடிப்படையில் நான் பேச முயன்றேன். பிரின்ஸை பேசுமாறு கட்சித் தலைவர் தெரிவித்தது குறித்து எனக்குத் தகவல் வரவில்லை. எனக்குத் தகவல் சொல்லப்பட்டிருந்தால் கையை உயர்த்திக் கேட்டிருக்க மாட்டேன். இதுகுறித்து சட்டசபை செயலரிடம் கேட்டேன். அவரும் பிரின்ஸ் பேச உள்ளதாகக் கட்சித் தலைவர் கூறியதைத் தெரிவித்தார்.
பின்னர், ஜி.கே.மணிக்கு பேசுவதற்கான வாய்ப்பு வரும்போது அவர் பின்வரிசையில் அமர்ந்திருந்தார். அவரை நான்தான் என்னுடைய இடத்துக்கு வருமாறு கூறினேன். அவரோ, `உங்கள் பொருள்கள் இங்கே உள்ளன. நீங்களே அமருங்கள்' எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். சட்டசபையில் யாருக்கு எந்த இடம் என்பதை இன்னும் ஒதுக்கவில்லை. அதற்குள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் பேச விரும்பியதை சபாநாயகர் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டார்" என்கிறார்.
`சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக மோதல்கள் ஏன்? என்றோம். ` சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியை கேட்டு வருகிறேன். சீனியர் உறுப்பினர் என்பதால் கட்சி பரிசீலிக்கும் என நினைக்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி சார்பாக பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. எனவே, ஒரு பெண் என்ற அடிப்படையில் தலைமை பரிசீலிக்க வேண்டும் என்கிறோம். இதுதொடர்பாக கட்சித் தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்" என்கிறார்.
`தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது?' என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் கருத்தும் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தும் எப்படியிருக்கிறதோ, அதன் அடிப்படையில் சட்டமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். இதை மேலிடப் பார்வையாளர்கள் முடிவு செய்து தேர்வை சுமூகமாக அறிவிப்பார்கள்" என்கிறார்.
பிற செய்திகள் :
- தாக்டே புயல்: குஜராத், டையூ கடலோரப் பகுதிளுக்கு புயல் எச்சரிக்கை ; தமிழ்நாட்டில் மழை பெய்யுமா?
- சேலத்தில் அதிர்ச்சியூட்டும் ஆம்புலன்ஸ் மரணங்கள்; தருமபுரி மயானத்தில் குவியும் சடலங்கள்
- இஸ்ரேலுக்கு தலைவலி தரும் ஹமாஸ்: காசாவை ஆளும் ஆயுதக் குழுவின் வரலாறு
- கொரோனா: காகம், கழுகுக்கு இரையாகும் கங்கையில் 'புதைக்கப்பட்ட' உடல்கள்
- தமிழ்நாட்டில் இன்று முதல் தீவிரமாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்