You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி துணை முதல்வர் பதவி: ஆர்வம் காட்டாத முதல்வர், பாஜகவின் தனி கணக்கு
- எழுதியவர், நடராஜ் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி விவகாரத்தில் பிடிகொடுக்க முதல்வர் ரங்கசாமி மறுத்து வருவதால், அங்கு ஆளும் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையிலான உறவு தொடருமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
கடந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் ஒரு சில அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரவர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
இதேவேளை, ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வென்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகள், பாஜக 6 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ், திமுக அங்கம் வகித்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றது.
இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், சுயேச்சையாக போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தால் தொடரும் சர்ச்சை
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்தால், கூட்டணி கட்சித் தலைவர் ரங்கசாமி முதல்வர் பொறுப்பேற்பதற்கான ஆதரவை பாஜக தெரிவித்தது.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது பாஜக சார்பில் துணை முதல்வர் பதவியும், கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் 5 அமைச்சர்கள் இருக்கும் புதுச்சேரி அமைச்சரவையில் கூடுதலாக ஆறாவது அமைச்சர் பதவி மற்றும் இல்லாத துணை முதல்வர் பதவியை எப்படி வழங்குவது என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி, துணை முதல்வர் மற்றும் கூடுதலாக ஒரு அமைச்சர் பதவிக்கு பாஜக மேலிடம் ஏற்பாடு செய்யும் என புதுச்சேரி பாஜகவினர் உறுதியளித்தனர். ஆனால் துணை முதல்வர் மற்றும் கூடுதல் அமைச்சர் பதவியை பெற மாநில முதல்வர் சார்பில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதை நடைமுறை.
இந்த விவகாரத்தில் ரங்கசாமியின் பரிந்துரையை பாஜகவினர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே நேரம் ரங்கசாமி தரப்பிலிருந்து பாஜகவின் கோரிக்கைக்கு எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், கூட்டணி கட்சிகளின் ஆலோசனையின்றி பாஜக தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. அவர்களின் நியமன ஆணை, அடுத்த நாளே அரசிதழில் வெளியிடப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் அதிர்ச்சி
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஆளும் காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்த நியமன உறுப்பினர்களுக்கு பதிலாக, பாஜகவைச் சேர்ந்த மூன்று பேரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்தது. அப்போது அவசர, அவசரமாக பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆளுநர் மாளிகையில் அந்த மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே பாணியை இப்போதும் துணைநிலை ஆளுநராக உள்ள தமிழிசை செளந்தர்ராஜன் கையாண்டதால் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்.ஆர். காங்கிரஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், "நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு மட்டுமே பேசி முடிவெடுக்கப்பட்டது. மேலும் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், நியமன உறுப்பினர்கள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் சம்பந்தமாகப் பங்கீடு கேட்டதற்கு தேர்தலுக்குப் பிறகு டெல்லியில் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என உறுதி செய்யப்பட்டது. ஆகவே இந்த நியமனம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது," என தெரிவித்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் - திமுக கூட்டணி அமையுமா?
நியமன உறுப்பினர்கள் விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளத்திலும் புதுச்சேரி அரசியல் காட்சிகள் பற்றிய விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டன.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய பாஜகவின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு ரங்கசாமிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில், பாஜகவின் போக்கு ரங்கசாமி தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால், எதிர்வரும் நாட்களில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் ரங்கசாமிக்கு ஏற்பட்டால் எதிர்க்கட்சியான திமுகவிடம் ஆதரவு கேட்டு ஆட்சியமைக்கும் வாய்ப்பை ரங்கசாமி பரிசீலிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜக கூட்டணியை உடைக்க திமுக திட்டம்
இதற்கிடையோ, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், புதுச்சேரி பாஜக பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம், அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் இணைத்து, கூட்டணிக்குள் நிலவும் சலசலப்பு தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
"புதுச்சேரியில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் நியமனத்தைப் பயன்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த திமுக முயல்கிறது. 1990ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 9 இடங்களை திமுகவும், அதன் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், மற்றும் ஜனதா தளம் ஆறு இடங்கள் பெற்று மொத்தம் 15 இடங்களை பெற்றது. அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில், மத்திய ஆட்சியில் பிரதமராக இருந்த வி.பி.சிங் ஆதரவுடன் மூன்று நியமன உறுப்பினர்களை தி.மு.க நியமனம் செய்து, அவசர அவசரமாக இரவோடு இரவாக துணைநிலை ஆளுநரை வைத்து பதவிப் பிரமாணம் செய்தது," என்றனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவையில் சபாநாயகர் மூலம் பதவி ஏற்காத நிலையில் மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க தனது செல்வாக்கை பயன்படுத்தி மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த அந்த நடைமுறையை 1990ஆம் ஆண்டே திமுக அரங்கேற்றியதாக அன்பழகன் தெரிவித்தார்.
"நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டத்தில் அவர்களுக்கு வாக்குரிமை அளித்து தனது ஆட்சியை திமுக தக்க வைத்தது. இன்று நியமன சட்டமன்ற உறுப்பினர் நியமனத்தில் மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்றும், நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உண்டு எனவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக திமுகவை சேர்ந்த தமிழக அமைச்சர் துரைமுருகன், அதன் கூட்டணியில் உள்ள பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்," என்கிறார் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன்.
தொடர்ந்து பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், "நியமன உறுப்பினர் நியமனத்தில் சங்கடம் இருந்தால் அதை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்குள்ளாக பேசி தீர்த்துக் கொள்ளும். ஆட்சியை இழந்த தி.மு.க கூட்டணிக்கு அதை விமர்சிக்க உரிமை இல்லை," என தெரிவித்தனர்.
நிர்பந்தத்தில் ரங்கசாமி
புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கொரோனா தொற்று சூழலில் மாநிலத்திற்குத் தேவையான மருத்துவ ஆதாரங்களை பாஜக எதிர்பார்க்கும் பதவிகள் பெறப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்ட பின் வழங்கலாம் என மத்திய அரசு தாமதப்படுத்துவதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதனால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ரங்கசாமிக்கு நெருக்கடியான சூழல் இருப்பதால், மாநில நலனுக்காக பாஜகவுடன் இணக்கமாக போக வேண்டிய நிலை ஆளும் முதல்வருக்கு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சமூக செயல்பாட்டாளர் காயத்ரீ ஸ்ரீகாந்த், "புதுச்சேரியில் பாஜகவைத் தவிர்த்து திமுகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சென்றால் மாநிலத்திற்குத் தேவையான உதவியை மத்திய அரசு செய்யாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் என்ன நேர்ந்ததோ அதே நிலை தான் அடுத்து ஐந்தாண்டுகள் ஏற்படும் என்ற தோற்றத்தை பாஜக உருவாக்கலாம். அதனால் புதுச்சேரி மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பாஜகவிற்கு ஒத்துழைக்கும் சூழ்நிலைக்கு என்.ஆர்.காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கலாம்," என்று தெரிவித்தார்.
"ரங்கசாமி சிறிய வயதிலிருந்து காங்கிரஸ் கட்சியைப் பார்த்து வளர்ந்த ஒருவர். ஆரம்பத்திலிருந்தே புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கான தனித்துவம் பறிபோகும் வகையில் செயல்படமாட்டார். ஆகவே, ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது மத்தியிலிருந்து புதுச்சேரிக்கான வளர்ச்சி உதவிகளை பெறவே என்பதை அவர் கடந்த காலங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறார்," என்கிறார் காயத்ரி.
புதுச்சேரியில் பாஜக என்றுமில்லாத அளவுக்கு 6 தொகுதிகளில் வென்றது ரங்கசாமியின் ஆதரவால் மட்டுமே. அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளில் தோல்வியடைய பாஜக மட்டுமே காரணமாக இருக்க முடியும். புதுச்சேரியில் நிதி ஆதாரம் இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்பதில் ரங்கசாமி தெளிவாக இருக்கிறார். மாநில வளர்ச்சிக்காக அனைவரும் ரங்கசாமிக்குத் துணையாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. பாஜக துணையோடு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு அவரால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை அறிந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும்," என்று காயத்ரி கூறுகிறார்.
பிற செய்திகள் :
- பிளஸ் 2 பொதுத்தேர்வு; வகுப்பறைக்கு 10 பேர் - அமைச்சரின் உறுதியால் அச்சத்தில் ஆசிரியர்கள்
- இஸ்ரேல் காசா மோதல்: ஹமாஸ் குழுவின் ஆயுத வலிமையும், பலவீனமும்
- பிகார் - உத்தர பிரதேச நதிகளில் மிதக்கும் சடலங்கள்: எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும்
- ஃபேஸ்புக் பதிவுகளை மதிப்பிடுபவரின் சாட்சியம்: "தினமும் கொடுங்கனவு"
- தள்ளிப்போகும் 'வலிமை', 'டாக்டர்' படங்களின் வெளியீடு: திணறும் கோலிவுட்
- ஆம்புலன்சில் பலியாகும் நோயாளிகள்: சென்னை அரசு பொது மருத்துவமனை வாயிலில் என்ன நடக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்