You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேற்கு வங்கம்: சங்கடம் கொடுத்த ஆளுநர், பதிலடி கொடுத்த மமதா - பதவியேற்பு விழா தருணங்கள்
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஜக்தீப் தங்கர் பதவியேற்பும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையொட்டி ஆளுநர் மாளிகையில் உள்ள முடிசூட்டு அரங்கம் என்று அழைக்கப்படும் அறையில் புதன்கிழமை நடந்த பதிவியேற்பு விழாவில் முதல்வர் பதவியை மமதா பானர்ஜி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவை வரும் 9ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள் ஆண்டு விழாவின்போது பதவியேற்றுக் கொள்ளும்.
முன்னதாக, மமதா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட உடனேயே, அவருக்கு வாழ்த்து கூறிய ஆளுநர் ஜக்தீப் தங்கர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்யும் நடவடிக்கையில் மாநிலத்தின் முதல்வர் உடனடியாக ஈடுபட்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவார் என்று நம்புகிறேன். தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியில் அமருவது எளிதாக அமையக்கூடியது அல்ல. புதிய ஆளுகை வடிவை நீங்கள் அமைப்பீர்கள் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
வழக்கமாக முதல்வர் பதவியேற்பு விழா நிகழ்வின்போது, பதவியேற்பும், ரகசிய காப்புப் பிரமாணமும் முடிந்த பிறகு புதிய முதல்வருக்கு மாநில ஆளுநர் வாழ்த்தை மட்டுமே தெரிவிப்பார். ஆனால், மேற்கு வங்கத்தில் அந்த மரபுக்கு மாறாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மமதாவை பார்த்து சில நிமிடங்கள் பேசிய ஆளுநர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை எழுப்பினார். அந்த காட்சிகளை அனைத்து தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்தன.
ஆளுநர் அறிவுரை வழங்குவது போல பேசிய அந்த சில நிமிடங்கள், தலையை நிமிர்ந்து பார்த்தபடி மமதா இருந்தார். பின்னர் பேசிய அவர், "நிச்சயமாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்வதே எனது முதன்மையான பணியாக இருக்கும்," என்று மமதா பதிலளித்தார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறைக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியனர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் அங்குள்ள அரசியலில் கடும் தலைவலியாக உருவெடுத்திருக்கும் வேளையில், முதல்வரின் பதவியேற்பு விழாவில் ஆளுநர் வழங்கிய அறிவுரை முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா, மாநிலத்தில் முதலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பேன். அதன் பிறகு சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
தேர்தல் வன்முறை தொடர்பாக என்டிடிவி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மமதா, "தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மாநிலத்தில் சில இடங்களில் வன்முறை நடப்பது வழக்கமானதுதான். ஆனால், வன்முறையை வளர்த்தெடுப்பது பாஜகவினர்தான். அவர்கள்தான் நிலைமையை மோசமாக்கினர். பாஜக அவமானகரமாக தோற்று விட்டதால் வகுப்புவாத வன்முறையில் ஈடுபட முயல்கிறது. இனி இங்கு வன்முறைக்கே இடமில்லை," என்று கூறினார்.
புதன்கிழமை காலையில் மேற்கு வங்க சட்ட ஒழுங்கு விவகாரம் தொடர்பான தமது கவலைகளை ட்விட்டர் பக்கத்திலும் ஆளுநர் ஜக்தீப் தங்கர் பகிர்ந்திருந்தார். இதயத்தை பிளக்கும் வன்முறை சம்பவங்கள் ஜனநாயகத்துக்கு அவமானகரமானது என்றும் சட்ட ஒழுங்கு முடக்கப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்தக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் மாநில ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்கு வங்க வன்முறை தொடர்பாக பேசியிருந்தார்.
வன்முறை பின்னணி என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளிவந்த பின், மீண்டும் ஆட்சி அமைப்பது திரிணமூல் காங்கிரஸ் என்பது உறுதியானது. இதேவேளை, பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதல் தீவிர வன்முறை ஆக மாறியதில் வெவ்வறு இடங்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். நடந்த சம்பவங்களுக்கு பாஜகவினரும் டிஎம்சி கட்சியினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.
தலைநகர் கொல்கத்தாவில் மட்டும் ஆறு பேர் கொல்லப்பட்டதாக நகர காவல்துறை தெரிவித்தது. கடந்த திங்கட்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பல இடங்களில் வன்முறை காட்சிகள் பதிவாகின. சிடால்டலா என்ற இடத்தில் பாஜக தொண்டர்கள் தற்காலிகமாக அமைத்திருந்த முகாமில் 35 வயதான அபிஜித் சர்கார் என்ற பாஜக தொண்டர் அடித்துக் கொல்லப்பட்டார். அபிஜித்தின் தாயார் மதாபி, சகோதரர் பிஸ்வஜித் ஆகியோரும் தாக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சோனர்பூர் தக்ஷின் என்ற இடத்தில் பிரதாப் நகரில் உள்ள கிராமத்தில் 42 வயதாகும் ஹரின் அதிகாரி என்ற பாஜக பிரமுகரின் வீடு உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த மர்ம கும்பல் ஹரின் அதிகாரியை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கெட்டுகிராம் என்ற இடத்தில் அகார்டங்கா பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஸ்ரீனிவாஸ் கோஷ் என்ற 54 வயது டிஎம்சி கட்சியைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். ஜமல்பூரில் சாஜு ஷேக், பிபாஷ் பால், ரைனா என்ற பகுதியில் உள்ள சம்சாபாத் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதாகும் கணேஷ் மாலிக் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
கோபால்நகர் என்ற இடத்தில் பாஜகவினர் அதிகம் வசித்து வந்த குடியிருப்பு பகுதியில் சிலர் நுழைந்து வீடுகளை சூறையாடியதுடன் பொருட்களை திருடிச் சென்றதாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க எல்லை கிராமத்தில் இருந்த சில பாஜகவினர், உயிரை காப்பாற்றிக் கொள்ள அசாம் மாநில எல்லையில் உள்ள பாஜக தலைவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்ததாக தெரிவித்தனர்.
மேற்கு வங்க வன்முறை தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையைத் தொடர்ந்து அரசு தலைமைச் செயலாளர் அலப்பன் பந்தோபாத்யாய, உள்துறைச் செயலாளர் ஹெச்.கே. துவிவேதி, காவல்துறை தலைமை இயக்குநர் நிரஜ்நயன், கொல்கத்தா நகர காவல் ஆணையர் செளமென் மித்ரா ஆகியோர் அவசர கூட்டம் நடத்தினர். வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளை முதல்வர் பதவியை ஏற்கவிருந்த மமதா பானர்ஜியும் கேட்டுக் கொண்டார்.
நடந்த வன்முறை சம்பவங்களின்போது சிறார்கள் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து தேசிய சிறார் உரிமைகள் ஆணையம், அம்மாநில உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் பேசியதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறியிருந்தார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடந்ததாகக் கூறப்படும் வன்முறை சம்பவங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி கடுமையாக கண்டித்தார்.
வன்முறை சம்பவங்களை குறிப்பிடும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் சில சித்திரிக்கப்பட்டவை என்று மமதா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு, மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்களையும் அதன் பின்னணியில் இருந்தவர்களையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று மமதா பானர்ஜி புதன்கிழமை தெரிவித்தார்.
கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட விவகாரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் பக்கத்தை அந்நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. ஆனால், அந்த நடவடிக்கை, தன்னை கட்டுப்படுத்தாது என்று கூறிய கங்கனா, தமது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியை பதிவேற்றி அதில் மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பேசியிருந்தார். அந்த காணொளியில் கண்ணீர் மல்க கங்கனா பேசிய காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலாகின.
பாலிவுட் திரைப்பட நடிகை ஊர்மிளா, மேற்கு வன்முறை சம்பவங்கள் மனதுக்கு சங்கடத்தை தருவதாகவும் விரைவில் இதற்கு முடிவு காணப்பட வேணடும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
எட்டு கட்டங்களாக நடந்த தேர்தல்
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவையில் எட்டு கட்டங்களாக சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 292 இடங்களுக்கான வாக்குப்பதிவில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்றது. பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களிலும் சுயேச்சை ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய மதசார்பற்ற மஜ்லிஸ் கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளன. மேலும் இரு தொகுதிகளுக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மமதா பானர்ஜி தோல்வியுற்றார். எனினும் அவரது கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்ததையடுத்து, அவர் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளார். தேர்தல் விதிகளின்படி முதல்வர் பதவியை ஏற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள்ளாக மமதா பானர்ஜி ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
பிற செய்திகள்:
- மு.க.ஸ்டாலின்: அவதூறுகளைக் கடந்து அரியணை
- கொரோனா வைரஸ்: சிடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் வருமா?
- RTPCR பரிசோதனைக்கு ஐ.சி.எம்.ஆரின் புதிய ஆலோசனைகள்
- அதிமுகவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பழனிசாமி
- தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின் - பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சி
- கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை; பினராயி விஜயன்
- கமல்ஹாசனை வீழ்த்த வானதிக்கு உதவிய கடைசி 4 சுற்றுகள்
- பிரசாந்த் கிஷோர்: "இத்துடன் போதும்... நிறுத்துகிறேன், விலகுகிறேன்"
- தமிழ்நாடு தேர்தல்: "வாருங்கள் சேர்ந்து உழைக்கலாம்" - மு.க. ஸ்டாலினுக்கு மோதி அழைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: