சென்னையில் அம்மா உணவகம் மீது தாக்குதல்; தி.மு.கவினர் இருவர் கைது

சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்றும்படி கோரி அந்த உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக திமுக அறிவித்துள்ளது.

சென்னையில் முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை 2-3 மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று சூறையாடும் காட்சிகள் இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கையில் தி.மு.க. தலைவரின் படத்தை வைத்திருந்ததால், இதில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர் என உறுதிசெய்யப்பட்டது.

இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. "கோவிட் - 19 ஊரடங்கு காலத்தில் பலருக்கும் உணவளித்த உணவகத்தை தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்தவுடனேயே தாக்குகிறார்கள்" என்ற கருத்துடன் இந்த வீடியோ வைரலானது. பலரும் இந்த நிகழ்வு குறித்து கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அ,தி.மு.கவின் டி ஜெயகுமார், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

விவகாரம் பெரிதானதையடுத்து, சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மா. சுப்பிரமணியம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தாக்கப்பட்ட உணவகத்திற்கு திமுக பொறுப்பாளர்களை அனுப்பி, கிழித்தெரியப்பட்ட பேனர்களை மீண்டும் அதே இடத்தில் வைக்கச் செய்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியம்.

"இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டவுடன் சுவற்றிலிருந்து பெயர்த்து வீசிய பெயர்ப்பலகையை அதே இடத்தில் ஒட்ட சொன்னோம். அவை ஒட்டப்பட்டன. அந்த உணவகம் அமைந்திருக்கும் காவல்துறையிடம் பகுதி செயலர் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய இருவர் மீதும் 294 பி, 427, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

#அம்மாஉணவகம்காப்போம் என்ற ஹாஷ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :