You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா : உலக நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய அளவில் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனால் இந்தியாவில் சிகிச்சையில் இருக்கும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துது வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் படி, தற்போது இந்தியாவில் 32.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்டிவ் கேஸ்களாக மருத்துவமனையிலோ அல்லது தங்களின் வீடுகளிலோ சிகிச்சையில் இருக்கிறார்கள். 2.11 லட்சம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த ஆபத்தான நிலையைக் கண்டு உதவ முன் வந்தது ஐ.நா. ஆனால் தங்களிடம் எல்லா மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பதாகக் கூறி அவ்வுதவியை நிராகரித்தது இந்தியா. இது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தைக் கிளப்பியது.
தற்போது ஐநா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாடுகளும் இந்தியாவுக்கு தங்கள் உதவிக் கரத்தை நீட்டி இருக்கின்றன. இந்தியாவும் அந்த உதவிகளை நிராகரிக்காமல் ஏற்றுக் கொண்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்கா மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது. இன்று காலை 1,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இது கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்காவிடம் இருந்து மூன்றாவது முறையாக இந்தியா பெறும் உதவி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் வான் வழியாக வந்து சேர்ந்திருக்கின்றன.
அதே போல பெல்ஜியம் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 9,000 ரெம்டெசிவிர் மருந்து வந்து சேர்ந்திருப்பதை, இந்தியாவின் வெளி விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா அனுமதியளித்த ஸ்புட்நிக் V கொரோனா தடுப்பூசி, ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்து சேர்ந்திருக்கிறது. முதல்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் மருந்து வந்திருப்பதாக இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஜெர்மனி தன் பங்குக்கு 120 வென்டிலேட்டர் இயந்திரங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
உஸ்பெகிஸ்தான் நாட்டிலிருந்து 100 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்கள் உட்பட பல மருத்துவ உதவிகள் வந்து சேர்ந்திருப்பதை இந்திய வெளி விவகாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார்.
இப்படி நட்பு நாடுகள் மற்றும் உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவியை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் போது, மத்திய அரசு ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்கள் மீதான ஐஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்திருக்கிறது. இந்த வரி குறைப்பு 30 ஜூன் 2021 வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள் :
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்குகிறது
- கொரோனா வைரஸ் நெருக்கடி: இதுவரை இல்லாத பின்னடைவை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோதி
- உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட 706 ஆசிரியர்கள் கோவிட் காரணமாக உயிரிழப்பா?
- சீனாவில் இந்திய வகை கொரோனா திரிபு: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அதிகாரிகள்
- மதுரையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி மீன்பிடி திருவிழா - 500 மீது வழக்குப்பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்