மதுரையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி மீன்பிடி திருவிழா - 500 பேர் மீது வழக்குப்பதிவு

மீன்

பட மூலாதாரம், Getty Images

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி கூட்டம் கூடி மீன்பிடி திருவிழா நடந்ததை அடுத்து சுமார் 500 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று காலை நடக்க உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து நேற்று இரவு சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்மாயில் கூடி மீன்களை பிடித்து சென்றதாகவும், இன்று காலை உள்ளூர்வாசிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ளதை மீறி மீதமுள்ள மீன்களை பிடித்து திருவிழாவை நடத்தியதாகவும் மேலூர் போலீசார் தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவாதவூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உள்ளூர் பெரியவர் ஒருவர் கூறும்போது கடந்த இரண்டு மாதங்களுக்கு உள்ளாக மேலூர் பகுதியில் மட்டும் 20 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடந்ததாக கூறுகிறார். சென்ற ஆண்டு இந்த மாதங்களில் முழு முடக்கம் நடைமுறையில் இருந்ததால் இந்த கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கூட்டம் கூடுவதற்கு தடை இருந்த போதிலும் கொரோனா கட்டுப்பாடுகளில் உள்ள தளர்வுகளை தங்களுக்கு சாதகமாக்கி விதிகளை மீறி மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தண்ணீரில் இறங்கி கச்சா மற்றும் வலைகளை வீசி பல்வேறு வகையான மீன்களை பிடித்துள்ளனர்.

காலம் காலமாக அறுவடை முடிந்த பிறகு கண்மாய் அழிப்பு என்ற சம்பிரதாயத்தின் ஒரு பகுதியாக இந்த மீன்பிடி திருவிழா கிராமங்களில் நடைபெறுகிறது. அப்போது பிடிக்கும் மீன்களை உள்ளூர் மக்கள் தங்கள் உபயோகத்திற்கு மட்டும் வைத்து கொள்வது வழக்கம். அதை விற்பனை செய்வது இல்லை. இதற்காக விவசாயத்திற்கு உபயோகித்தது போக இடுப்பு அளவு மட்டும் கண்மாய்களில் தண்ணீரை தக்கவைத்து கொண்டு இந்த மீன்பிடி திருவிழாவை நடத்துவர். திருவிழா முடிந்த பிறகு கண்மாய்களில் உள்ள வண்டல் மண்ணை தங்கள் நிலத்திற்கு உரமாக பயன்படுத்துவது வழக்கம்.

காணொளிக் குறிப்பு, ஆக்சிஜனுக்காக தவிக்கும் நோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் நெஞ்சங்கள்

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் புதியதாக 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 147 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: