ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி பாத்ரா மருத்துவமனையில் 12 பேர் உயிரிழப்பு

டெல்லியில் உள்ள பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு 12ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத சமயத்தில் மோசமான நிலைக்கு சென்ற நோயாளிகள். அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது பெரும் சிரமம் என பாத்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுதன்ஷு பான்கடா தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாத்ரா மருத்துவமனையில் தற்போது 220 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் மிக மோசமான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மக்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகும் பல செய்திகளை காண முடிகிறது.

இந்நிலையில்தான் பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது.

மூத்த மருத்துவர் உட்பட 8 நோயாளிகள் உயிரிழப்பு

இன்று காலையே ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து தங்களுக்கு தெரிந்துவிட்டதாகவும், அவசர நிலை விநியோகத்துக்காக காத்திருந்ததாகவும் பாத்ரா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இன்று மதியம் 12 மணி அளவுக்கு ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்று எங்களுக்கு காலை ஏழு மணிக்கே தெரிந்துவிட்டது. எனவே அனைத்து முறையிலும் துரிதமாக செயல்பட்டோம். டெல்லி அரசின் நோடல் அதிகாரிகளை தொடர்பு கொண்டோம்; நெருக்கடி குறித்து தெரிவித்தோம். வழக்கமாக எங்களுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கும் நிறுவனங்கள் மாலைக்கு முன்னதாக தேவைப்படும் ஆக்சிஜனை வழங்க இயலாது என தெரிவித்துவிட்டன. எனவே டெல்லி அரசிடமிருந்து அவசர நிலை விநியோகத்தை நாங்கள் எதிர்ப்பார்த்தோம். நாங்கள் 12 மணிவரை தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்."

"இதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கும் நாங்கள் கொண்டு வந்தோம். எங்களிடம் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டு வருகிறது என தெரிவித்தோம். எங்களின் ஆக்சிஜன் அளவு தீர்ந்துவிடும் சமயத்தில் எங்களுக்கு உதவுமாறு நீதிமன்றம் டெல்லி அரசிடம் கோரியது. டெல்லி அரசின் டாங்கர்கள் புராரி என்றொரு இடத்தில் இருந்தது அந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் எங்களிடம் வந்து சேரும்போது ஏற்கனவே ஆக்சிஜன் இல்லாமல் ஒரு மணிநேரத்தை நாங்கள் கடந்து விட்டிருந்தோம். அதில் எட்டு நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர். அதில் எங்கள் மருத்துவமனையின் மூத்த இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரும் ஒருவர். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்." என பாத்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சுதான்ஷு தெரிவித்துள்ளார்.

நாங்கள் 326 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அதில் 307 பேர் கொரோனா நோயாளிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"மேலும், ஒவ்வொரு நாளும் டெல்லிக்கு 700மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மத்திய அரசு 490மெட்ரிக் டன் அளவில் வழங்குவதாக தெரிவித்தது ஆனால் இதுவரை 450 மெட்ரிக் டன் அளவிலேயே ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எங்களின் மருத்துவமனைக்கு 7 மெட்ரிக் டன் அளவில் ஆக்சிஜன் தேவை ஆனால் 4.9மெட்ரிக் டன் அளவே எங்களுக்கு கிடைத்து வருகிறது. இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது." என்றும் மருத்துவர் சுதான்ஷு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு உத்தரவு

முன்னதாக டெல்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதால் கடுமையாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பல மருத்துவமனைகள் தெரிவித்ததையடுத்து நீதிபதிகள் விபின் சங்க்கி மற்றும் ரேகா பல்லி அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

"வெள்ளம் தலைக்கு மேல் சென்றுவிட்டது. தற்போது நீங்கள் (மத்திய அரசு) அனைத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும்," என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதி முதல் டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் ஒருநாளும் ஒதுக்கப்பட்ட அளவு விநியோகிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: