You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா தமிழ் இருக்கைக்கு கரம் கொடுத்த தமிழர்கள்! - கடைசிநேரத்தில் உதவிய தி.மு.க
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உள்ளது. தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதன் அடிப்படை நோக்கம் என்ன?
60 லட்சம் டாலர்கள்
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பது தொடர்பாக ஹவாய் தீவில் வாழ்ந்து வரும் வைதேகி அம்மையார் என்பவர் தொடர்ந்து பேசி வந்தார்.
இவர் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள `தமிழ் இருக்கை அறக்கட்டளை' என்ற அமைப்பு களமிறங்கியது.
இதற்காக 42 கோடி ரூபாய் வரை தேவைப்படவே, மூன்றாண்டுகளாக இதற்கான முயற்சியில் உலக தமிழர்கள் இறங்கினர். இதனை அறிந்து தமிழக அரசும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியது. தி.மு.கவும் தனது பங்களிப்பாக ஒரு கோடி ரூபாயை கொடுத்தது. இதன் காரணமாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் வேகமெடுத்தன. 42 கோடி ரூபாய் மதிப்பிலான 60 லட்சம் டாலர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்டது.
தி.மு.க செய்த உதவி
இதனைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளில் தமிழ் இருக்கை அறக்கட்டளை, கனடா தமிழ்க்கழகம் ஆகிய இரண்டும் களமிறங்கின.
இது தொடர்பான பணிகளில் முத்துலிங்கம், சிவன் இளங்கோ, மருத்துவர் ரகுராமன் ஆகியோர் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளனர். தமிழக அரசு இதற்கென ஒரு கோடி ரூபாய் நிதி அளித்தது. இது தொடர்பாக தான் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு 20 லட்சம் நிதி அளித்தவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.
தற்போது டோரோன்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பாக 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ் இருக்கை உருவாக வேண்டுமென்ற ஆர்வத்தோடு கனடா வாழ் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் முயற்சி செய்து வருவதாகவும் தி.மு.க சார்பில் நிதியுதவி தர வேண்டும் எனவும் கனடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் டன்ரன் துரைராஜா கோரிக்கை வைத்திருந்தார். அதனையேற்று 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது' என குறிப்பிட்டிருந்தார்.
குழு அமைத்த ஹார்வர்டு
``இந்த நன்கொடைகளால் தேவையான நிதி சேர்ந்து விட்டதால் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகிவிட்டது. இன்னும் சில நாள்களில் இது குறித்த அறிக்கையினை டொரன்டோ பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது" என்கிறார் தமிழ் இருக்கைகளின் குழு ஆலோசகரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான கோ.பாலச்சந்திரன். இவர் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கும் டொரோன்டோ தமிழ் இருக்கைக்கும் 43 லட்ச ரூபாய் நிதி வழங்கியவர்.
டெரோன்டோ தமிழ் இருக்கை குறித்து பிபிசி தமிழிடம் மேலும் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
``ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்கு வைப்பு நிதி கொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது அங்கு பேராசிரியர்களை நியமிப்பதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் தேடுதல் குழுவை (Search committee) அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள டோரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 18 கோடி ரூபாய் தேவைப்பட்டது. அண்மையில், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பியின் முன்னெடுப்பில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு 1,20,000 டாலர்கள் நன்கொடையாகத் திரட்டப்பட்டன. இந்தப் பணம், டொரோன்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கும் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கும் வழங்கப்பட உள்ளன.
அடுத்து ஹ்யூஸ்டன் தமிழ் இருக்கை
இதனைத் தொடர்ந்து, தமிழ் இருக்கை அறக்கட்டளையின் உறுப்பினர்களான மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் திருஞான சம்பந்தம், பால்பாண்டியன், பாலா சுவாமிநாதன் ஆகிய நால்வரும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பியும் தலா 10,000 டாலர்களையும் டொரோன்டா, ஹ்யூஸ்டன் தமிழ் இருக்கைகளுக்காக கொடுத்துள்ளனர்.
இதன்மூலம், 1,70,000 டாலர்கள் நிதி சேர்ந்துள்ளன. டொரோன்டோ பல்கலைக்கழகத்துக்குத் தேவையான வைப்பு நிதி வந்துவிட்டதால் ஹ்யூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளை சாம் கண்ணப்பன் என்பவர் தலைவராக உள்ள அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது" என்கிறார்.
ஆய்வுகளால் என்ன பலன்?
`தமிழ் இருக்கைகள் அமைவதனால் என்ன பலன்?' என கேட்டோம்.
``தமிழ் மொழி மற்றும் தமிழரின் வாழ்வின் பண்பாட்டுப் பழைமையைக் காட்டுவதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன. ஒன்று பழந்தமிழ் இலக்கியம். அடுத்து தமிழர்கள் கடலோடிகளாக வாழ்ந்த வணிகத் திறமை, மூன்றாவது தமிழ் இசை ஆகியவை. இதில், ஹார்வர்டு தமிழ் இருக்கையானது, சங்கத் தமிழ் இலக்கியங்களை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஹ்யூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் நோக்கங்களில் ஒன்றாக தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் தலைசிறந்த வணிகக் குழுக்களாகத் திகழ்ந்ததற்கான காரணிகளை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட உள்ளது.
அதில், தற்போதுள்ள சூழலில் உலக வணிகத்தின் ஒரு பகுதியை ஆள்பவர்களாக மீண்டும் தமிழர்கள் வர முடியுமா எனவும் ஆராய்வது முக்கிய இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாரசீகர்கள், சீனர்கள் ஆகியோருக்கு மத்தியில் எப்படி தமிழர்களால் இந்துமகா சமுத்திரத்தை வணிக ஆட்சி நடத்திய மூன்று இனங்களில் ஒன்றாக மிளிர முடிந்தது என்பதை இந்த இருக்கை ஆராயும். அடுத்து, டொரோன்டோ தமிழ் இருக்கையானது, தமிழ் இசையின் பழைமை மற்றும் அதன் சிறப்பு ஆகியவவை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டுமென பல்கலைக்கழகத்துக்குத் தெரிவிக்க இருக்கிறோம்.
இதன்மூலம் பழைமைத் தமிழர் வாழ்வாங்கு வாழ்ந்த பண்பாட்டுச் செழுமை தெரிய வரும். இன்றைய தமிழருக்கு அவர்களைப் போல் உயரும் ஊக்கத்தினை அளிக்கும். அதனால் தொடர்ந்து எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்வதற்குத் தமிழர்கள் முயல்வார்கள் என்பது என்னுடைய எண்ணம்" என்கிறார் பாலச்சந்திரன்.
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கோலம்
- கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை ஜீப்பில் ஏற்றிய டிஎஸ்பி: கடும் எதிர்ப்பு
- கொரோனா சிகிச்சை உபகரணங்கள்: ஐ.நா உதவியை நிராகரித்த இந்தியா
- பருவநிலை மாற்றம்: ஒரு சிறிய பச்சை கல் நமது எதிர்காலம் குறித்து விடுக்கும் எச்சரிக்கை
- யோகி ஆதித்யநாத்: "கொரோனா ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை" - பிறகு உயிரிழப்பு அதிகரிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: